2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மீண்டும் தப்பித்தார் தெரேசா மே

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரேசா மே, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான வாக்கெடுப்பொன்றில், மயிரிழையில் வெற்றிபெற்றுக் கொண்டார். அவரது இவ்வெற்றி, குறுகிய காலத்தில் அவருக்கு வெற்றியாக அமைந்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐ.இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான இறுதி வாக்கெடுப்பில், அவரால் வெற்றிபெற முடியுமா என்ற கேள்வியை எடுப்பியுள்ளது.

பிரெக்சிற் தொடர்பான பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அங்கிகாரம், நாடாளுமன்ற அனுமதி ஆகியவற்றை, பிரதமர் மே பெற்றுக்கொண்டாலும், கட்சிக்குள், கடுமையான எதிர்ப்பை அவர் எதிர்கொள்கிறார். இதில், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், தமது பதவிகளையும் இராஜினாமா செய்திருந்தனர்.

நாடாளுமன்ற அனுமதி, கடந்த திங்கட்கிழமையே அவருக்குக் கிடைத்திருந்த நிலையில், அவ்வாறு கிடைக்கப்பெற்ற அனுமதியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு, பிரதமரின் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் முனைந்தனர்.

ஐ.ஒன்றியத்திலிருந்து வெளியேறும் போது, சுதந்திர வர்த்தகம் தொடர்பான இணக்கப்பாடொன்று ஏற்படாவிட்டால், ஐ.ஒன்றியத்துடனான சுங்க ஒன்றியத்தில், ஐ.இராச்சியத்தைத் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமென, புதிதாகச் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தம் வேண்டி நின்றது.

இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்ற போது, அத்திருத்தம், 301-307 என்ற வாக்குகள் கணக்கில் தோல்வியடைந்தது. ஆனால், வெறுமனே 6 வாக்குகளால் தான், பிரதமருக்கு வெற்றி கிடைத்தமை, எதிர்காலத்தில் அவர் மீதான அழுத்தங்கள் இன்னமும் அதிகரிக்குமென்பதைக் காட்டுகின்றன எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X