2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘முடிவுகளில்லா விட்டால் வெளியேறுவேன்’

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடனான சந்திப்பு முடிவுகளைத் தரும் என தான் நினைக்காவிட்டால் இச்சந்திப்பிலிருந்து தான் வெளியேறுவேன் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயுடனான இணைந்த செய்தியாளர் மாநாட்டிலேயே நேற்று மேற்குறித்த கருத்தை வெளிப்படுத்தியிருந்த ஜனாதிபதி ட்ரம்ப், தன்னுடைய அணுவாயுதங்களை வட கொரியா கைவிடும் வரை வடகொரியா மீது உயர்ந்தபட்ச அழுத்தத்தை பிரயோகித்தல் தொடரும் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று ஐக்கிய அமெரிக்கர்களை விடுவிப்பது குறித்த பேரம்பேசல்களையும் ஐக்கிய அமெரிக்கா மேற்கொள்கிறது எனத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், கிம்முடனான சந்திப்புக்கு இவர்களின் விடுதலை நிபந்தனையா என்ற கேள்விக்குப் பதிலளித்திருக்கவில்லை.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் அடுத்த இராஜாங்கச் செயலாளருக்கான ஜனாதிபதி ட்ரம்பின் தெரிவான மைக் பொம்பியோ, கிம்மைச் சந்தித்தபோது அவருடன் சிறந்த உறவொன்றைக் கட்டமைத்துக் கொண்டதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

மத்திய புலனாய்வு முகவரகத்தின் பணிப்பாளரான மைக் பொம்பியோவின் வடகொரியாவுக்கான விஜயமானது தென்கொரிய புலனாய்வு தலைவர ஸூ ஹூன், வட கொரிய புலனாய்வு தலைவர் கிம் யொங் சோலின் ஏற்பாட்டில் நடைபெற்றதாகவும் உண்மையிலேயே முக்கியமான பேச்சுக்களை நடாத்தவும் தனது அணுவாயுதங்களை கைவிடவும் கிம் தயாராக இருக்கின்றாரா என்பதை ஆராய்வதற்காகவே இடம்பெற்றதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, கிம்முடனான சந்திப்பு அடுத்த மாத இறுதியிலோ அல்லது அதற்கடுத்த மாத ஆரம்பத்திலேயோ நடைபெறுமென ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 1950-1953 கொரிய யுத்தத்தை உத்தியோகபூர்வமாக முடிக்கும் முகமாக இம்மாதம் 27ஆம் திகதி தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜயே-இன் கிம்மைச் சந்திக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .