2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மெக்ஸிக்கோவில் மீண்டும் பூமியதிர்ச்சி

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்கெனவே 7.1 றிக்டர் அளவிலான பூமியதிர்ச்சியை எதிர்கொண்டு, அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள மெக்ஸிக்கோ மீது, மீண்டுமொரு பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது. இப்பூமியதிர்ச்சி, 6.1 றிக்டர் அளவில் பதிவானது. அத்தோடு, கடந்த செவ்வாய்க்கிழமை பதிவான 7.1 றிக்டர் பூமியதிர்ச்சி ஏற்பட்ட இடத்தை விட, தெற்காக ஏற்பட்டிருந்தது.

இப்பூமியதிர்ச்சி காரணமாக, குறைந்தது 2 பேர், ஓக்ஸாகா பகுதியில் உயிரிழந்தனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்களைத் தவிர, மேலும் இரண்டு பேர், எச்சரிக்கை மணியைக் கேட்டுத் தப்பியோடும் போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். அதிலொருவர், தனது 80களில் காணப்படும் பெண்ணெனவும், மற்றையவர் 52 வயதையுடைய பெண்ணெனவும், பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதேபோல், ஓக்ஸாகா பகுதியில், பாலமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக, சுமார் 100 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்ட போதிலும், அதிர்ஷ்டவசமாக, எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இதேவேளை, கடந்த வாரம் மெக்ஸிக்கோ நகரத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் சிக்கியோரை மீட்கும் பணிகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில், 69 பேர் உயிருடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர் என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆனால், இனிமேலும் உயிருடன் மீட்கும் நம்பிக்கை காணப்படவில்லை என, மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். கட்டடச் சிதைவுகளுக்கும் காணப்படும் உடல்கள், அழுகி, துர்நாற்றம் வீசுவதாக அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக மீட்புப் பணியாளர்கள், முகமூடி அணிந்தே செயற்படுவதையும், அங்கிருந்து வரும் படங்கள் காட்டுகின்றன.

இதுவரையில் குறைந்தது 307 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 2,633 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .