2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேற்குக் கரையிலிருந்து வெளியேற ஆராய்கிறார் நெதன்யாகுவின் போட்டியாளர்

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்‌ரேலில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பிரதான போட்டியாளராகக் கருதப்படும் ஒருவர், இஸ்‌ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையிலிருந்து பின்வாங்குவது குறித்து ஆராயத் தயாராக இருப்பதாக, சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இக்கருத்து, இஸ்‌ரேலின் வலதுசாரிகளின் கோபத்தைச் சந்தித்த அதேநேரத்தில், பலஸ்தீனர்களின் ஆதரவையும் மகிழ்ச்சியையும் சம்பாதித்தது.

இஸ்‌ரேல் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பணியாட்தொகுதிப் பிரதானியான பெனி கான்ட்ஸ், காஸா நிலப்பரப்பிலிருந்து 2005ஆம் ஆண்டில் இஸ்‌ரேல் பின்வாங்கியமை குறித்து, நேர்முகமாகக் கருத்துத் தெரிவித்தார்.

“காஸாவிலிருந்து பின்வாங்குவது, இஸ்‌ரேலிய அரசாங்கத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டு, இராணுவத்தாலும் குடியேறியிருந்தோராலும், வலிதரக்கூடிய, ஆனால் நல்ல வழியில் அமுல்படுத்தப்பட்டது.

“அதிலிருந்து கற்றுக்கொண்டு, ஏனைய இடங்களுக்கும் அந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

அவரது இப்பேட்டியின் போது, மேற்குக் கரையின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டிருக்காவிட்டாலும் கூட, மேற்குக் கரையையே அவர் குறிப்பிட்டார் எனக் கருதப்படுகிறது.

இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்சினையின் மிக முக்கியமான விடயமாக, மேற்குக் கரையில் இஸ்‌ரேல் காணப்படுவதே உள்ளது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், மேற்குக் கரையிலுள்ள அனைத்து இஸ்‌ரேலியக் குடியேற்றங்களும் சட்டவிரோதமா னவையாகும்.

இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பல சமாதானத் திட்டங்களின்படி, மேற்குக் கரையிலிருந்து பகுதியளவில் வெளியேறுவதற்கு, இஸ்‌ரேல் சம்மதித்திருந்தது. ஆனால், அத்திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை.

பெனி கான்ட்ஸின் கட்சி, கடந்த டிசெம்பரிலேயே ஆரம்பிக்கப்பட்டதோடு, இவ்வாண்டு ஜனவரியிலேயே, தனது தேர்தல் அறிவிப்பை பெனி கான்ட்ஸ் விடுத்திருந்தார். இஸ்‌ரேலிய நாடாளுமன்றத்தில் 120 ஆசனங்கள் உள்ள நிலையில், அவரது கட்சிக்கு 21 தொடக்கம் 24 ஆசனங்கள் கிடைக்குமெனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரதமர் நெதன்யாகுவின் கட்சிக்கு அடுத்ததாக, நாடாளுமன்றில் மிகப்பெரிய கட்சியாக அவரது கட்சி மாறுமென்பது குறிப்பிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .