2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மொசூல் பள்ளிவாசலை தகர்த்தது ஐ.எஸ்

Editorial   / 2017 ஜூன் 22 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகள், மொசூலின் பெரிய அல்-நூரி பள்ளிவாசலையும் அதன் பிரபலமான தூபியையும், நேற்று (21) தகர்த்ததாக, அறிக்கையொன்றில், ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது.   

மொசூலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவை அகற்ற எதிர்பார்த்துள்ள ஈராக்கியப் படைகள், பெரிய அல்-நூரி பள்ளிவாசலை நெருங்கியுள்ள நிலையிலேயே, பள்ளிவாசலை, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகள் தகர்த்துள்ளனர்.   

குறித்த பள்ளிவாசலிலிருந்தே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி, சிரியா, ஈராக்கின் பகுதிகளை உள்ளடக்கிய இஸ்லாமியக் குடியரசை, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரகடனப்படுத்தியிருந்தார்.   

இந்நிலையில், அல்-ஹட்பா தூபியையும் அல்-நூரி பள்ளிவாசலையும் தகர்த்தமை, உத்தியோகபூர்வமாக தோல்வியை ஒத்துக் கொண்டமைக்கு சமமென, ஈராக்கியப் பிரதமர் ஹைதர் அல்-அபாடி தெரிவித்துள்ளார்.   

45 மீற்றர் உயரமான அல்-ஹட்பா தூபியில், 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் கறுப்புக் கொடி பறந்திருந்தது.   

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் அமக் செய்தி முகவரகம், அமெரிக்க விமானமே, பள்ளிவாசலை அழித்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.   

இதேவேளை, மேற்குறித்த குற்றச்சாட்டை, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நிராகரித்துள்ளது. குறித்த பகுதியில், தாங்கள் தாக்கவில்லை என, கூட்டணியின் பேச்சாளரான, ஐக்கிய அமெரிக்க விமானப் படையின் கேணல் ஜோன் டொர்ரியன் தெரிவித்துள்ளார்.   

மொசூலின் பழைய நகரத்தை நோக்கிச் செல்கின்ற, பயங்கரவாதத்துக்கெதிரான சேவைப் பிரிவுகள், பழைய நகரத்திலிருந்து, 50 மீற்றர் தூரத்தில் இருந்த நிலையிலேயே பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதாக, ஈராக்கிய இராணுவத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.   

ஈராக்கிய இராணுவத்தின் பேச்சாளரொருவர், இலங்கை நேரப்படி, நேற்று  இரவு 11.35க்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X