2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மோசமான வெள்ளத்தால் 312 பேர் பலியாகினர்

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆபிரிக்க நாடான சியாரா லியோனின் தலைநகர் ஃபிறீடௌணில், மோசமான வெள்ளமொன்று ஏற்பட்டதில், குறைந்தது 312 பேர் கொல்லப்பட்டனர். தவிர, 2,000க்கும் மேற்பட்டோர், வீடுகளற்றவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட நேரடியான பாதிப்புகளோடு, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவினாலும் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்தன என அறிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் (14) ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து, சடலங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுக் கொண்டிருந்ததோடு, நகரத்தின் பிணவறைகள், முட்டி வழிந்ததையும், சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தின.

மலையுச்சியில் அமைந்த கிராமத்தில், பல வீடுகள் மூழ்கியதோடு, நீரோட்டத்தின் வழியாக, சடலங்கள் கீழே விழுந்து கொண்டிருந்தன என, அங்கிருந்த சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான பட்ரிக் மஸகுவோய் கருத்துத் தெரிவிக்கும் போது, இதுவரை 312 பேர் இறந்துள்ளனர் எனவும், எனினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாகத் தேடுதல்களை நடத்திவரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும் அச்சம் காணப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

அரச வைத்தியசாலையொன்றின் பிணவறையில் பணிபுரியும் ஒருவர், 300க்கும் மேற்பட்ட சடலங்களைக் கண்டதாகவும், ஆனால், இவ்வளவு அதிகமான அளவில் சடலங்கள் வந்துகொண்டிருப்பதன் காரணமாக, சடலங்களை வைப்பதற்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால், தனியார் பிணவறைகளிலும், சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சியாரா லியோனின் வானிலை அவதான நிலையம், இவ்வாறு மோசமான மழை பெய்யுமென்றோ அல்லது ஆபத்தான இடங்களிலுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்றோ, எச்சரிக்கை எதனையும் விடுத்திருக்கவில்லை என, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதிகளை மூடிப் பாயும் வெள்ளத்தின் காரணமாக, போக்குவரத்து என்பது சாத்தியமற்ற ஒன்றாக மாறியுள்ளதுடன், இடுப்பு அல்லது நெஞ்சு வரையிலான உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்தோடிச் செல்ல, அவற்றுக்கு மத்தியில், வெள்ளத்திலிருந்து தப்பிச் செல்ல மக்கள் முயலும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் பல்வேறு சுட்டிகளின் அடிப்படையில், உலகில் மிகவும் வறுமையான நாடுகளுள் ஒன்றாக, சியாரா லியோன் கருதப்படுகிறது. எனவே, இவ்வாறு ஏற்பட்ட பாரிய அழிவிலிருந்து, அந்நாடு மீள்வதென்பது, மிகப்பெரிய சவாலாக அமையுமென்றே கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .