2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ராக்கைனில் படையினரால் கூட்டு வன்புணர்வுகள்

Editorial   / 2017 செப்டெம்பர் 25 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராக்கைனிலுள்ள பெண்கள், அந்நாட்டுப் படையினரால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என, அங்கிருந்து தப்பியோடி, பங்களாதேஷுக்குச் சென்றுள்ள பெண்களின் வாக்குமூலம் மூலமாக உறுதிப்படுத்தப்படுகிறது என, ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா இன ஆயுததாரிகளை இலக்குவைத்து நடத்தப்படுவதாகக் கூறப்படும் இராணுவ நடவடிக்கையில், சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என, ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே, தற்போது இத்தகவலும் வெளியாகியுள்ளது.

 ஐ.நாவின் கண்காணிப்பாளர்களின்படி, ராக்கைனிலிருந்து தப்பிவந்த பெண்களில் பலர், வன்புணர்வு அல்லது கூட்டு வன்புணர்வு பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே, சீருடையணிந்த பிரிவினராலேயே தாங்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் எனக் கூறியுள்ளனர்.

பழைமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சமூகமான றோகிஞ்சா சமூகத்தில், தங்களது வன்புணர்வு அனுபவங்களைப் பகிர்வதில் காணப்படும் சமுதாய ரீதியிலான இகழ்ச்சி காரணமாக, அதிகமானோர் பகிர மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது.

இவ்வாறு தமது அனுபவங்களை வெளியிட்டவர்களில் ஒரு பெண், 3 படையினர் வந்து, தன்னை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகத் தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் வன்புணரும் போது, தனது 6 வயதுடைய பிள்ளை, அருகில் காணப்பட்டது என அவர் தெரிவிக்கிறார்.

படையினர் சென்ற பின்னர், தன்னுடைய பிள்ளைகளுள் இருவருடன், அங்கிருந்து தப்பியோடி, பங்களாதேஷ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கூட்டத்துடன் இணைந்து கொண்டாரென அவர் தெரிவிக்கிறார். இதில், தன்னுடைய 3 பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றித் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார். படையினர் வரும் போது, வீட்டுக்கு வெளியே அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர் எனவும், படையினர் போகும் போது, அவர்களைக் காணவில்லை என்றும் அவர் தெரிவிக்கிறார். கணவனும், அப்போது வெளியே சென்றிருந்த நிலையில், அவரைப் பற்றியும் எந்தவிதத் தகவலும் இல்லை என, அவர் குறிப்பிடுகிறார்.

ஐ.நாவின் உண்மையைக் கண்டறியும் குழுவொன்று, மியான்மாரில் இடம்பெற்ற வன்முறைகள், சித்திரவதைகள் போன்றவற்றைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அக்குழு, அகதி முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்து, தகவல்களைச் சேகரிக்கின்றது.

சுமார் 436,000 பேர், பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவர்களைச் சோதித்துவரும் வைத்தியர்களும், இவ்வாறான தகவல்களை வெளியிடுகின்றனர். முன்பை விடத் தற்போது, தங்களது அனுபவங்களை, இம்மக்கள் பகிர்கின்றனர் என, வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .