2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

றோகிஞ்சா ‘இனவழிப்பு’ விவகாரம் ஐ.நாவில்

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா இன மக்களுக்கெதிராக, இனவழிப்பு நடவடிக்கைகளுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய நாடுகளின் அறிக்கை தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபையில் ஆராயப்படவுள்ளது.

இவ்வறிக்கை தொடர்பாக, சபைக்குத் தெரியப்படுத்துமாறு, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் உள்ளிட்ட 9 நாடுகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே, இம்மாத இறுதியில், இது தொடர்பான அமர்வு இடம்பெறவுள்ளது.

ஐ.நாவால் நியமிக்கப்பட்ட குறித்த சுயாதீன விசாரணைக் குழு, ஓராண்டாக விசாரணை நடத்தி, றோகிஞ்சா மக்கள் மீதான இராணுவ நடவடிக்கைக்கு, இனவழிப்பு நோக்கம் காணப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தது. இவ்வாண்டு ஓகஸ்டில் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை, மியான்மாரின் இராணுவத் தலைமைகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, மியான்மார் மீது, ஆயுதத் தடை விதிக்கப்பட வேண்டுமெனவும் கோரியிருந்தது.

ஆனால், மியான்மாருக்கு ஆதரவாகக் காணப்படும் ரஷ்யா, சீனா ஆகியன, “வீற்றோ” அதிகாரத்தைக் கொண்டுள்ளதோடு, மியான்மாருக்கு எதிரான அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, குறித்த அறிக்கை தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபையில் அறிக்கையிடுவதைத் தடுப்பதற்கு, “வீற்றோ” அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. மாறாக, பெரும்பான்மை எண்ணிக்கையான நாடுகள் கோரிக்கை விடுத்தால் போதுமானது. பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளில் 9 நாடுகள், இவ்வாறு கோரிக்கை விடுத்தால், அதைத் தடுக்க முடியாது. எனவே தான், மியான்மார் தொடர்பான இவ்வறிக்கையிடல், இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

எனினும், குறித்த அறிக்கை தொடர்பாக விளக்கமளிப்பதற்காக, ஆணைக்குழுவின் தலைவராக, பாதுகாப்புச் சபைக்கு அழைப்பதற்கு, மியான்மார் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே காணப்படும் நம்பிக்கையின்மையை இது மேலும் அதிகரிக்குமென அவர் எச்சரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .