2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

றோகிஞ்சாக்கள் மீதான வன்முறைகளை விசாரிக்க ஆணைக்குழு

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முரண்பாடுகள் மிகுந்த ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிராக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கென, ஆணைக்குழுவொன்றை அமைத்துள்ளதாக, மியான்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது. இவ்வன்முறைகள் தொடர்பாக, பொறுப்புக் கூறலை வெளிப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள், சர்வதேச மட்டத்தில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே, இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

நான்கு பேர் கொண்ட ஆணைக்குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுள் இருவர், மியான்மாரைச் சேர்ந்தவர்களாவர். ஏனைய இருவராக, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இராஜதந்திரியான றொசாரியோ மனாலோ, ஐக்கிய நாடுகளுக்கான ஜப்பானின் முன்னாள் தூதுவர் கென்ஸோ ஒஷிமா ஆகியோர், மியான்மார் ஜனாதிபதி அலுவலகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

உள்நாட்டைச் சேர்ந்தவர்களாக, சட்டத்தரணியான மியா தெய்னும், பொருளாதார நிபுணரும் ஐ.நாவின் முன்னாள் அதிகாரியுமான ஆங் துன் தெட் என்பவரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆங் துன் தெட், ராக்கைன் தொடர்பான நெருக்கடி தொடர்பாக ஆராய்வதற்காக, மியான்மாரின் அரச தலைவி ஆங் சான் சூகியால், ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், இவ்வாண்டு ஏப்ரலில் கருத்துத் தெரிவித்திருந்த அவர், “இனச்சுத்திகரிப்புக்கான நோக்கம் எதுவும் இருந்திருக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்தாண்டு ஓகஸ்ட் 25ஆம் திகதி, பாதுகாப்புச் சாவடிகள் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, ராக்கைன் மாநிலத்தில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருந்த அந்நாட்டு இராணுவம், இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டது, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, ராக்கைனிலிருந்து 700,000க்கும் அதிகமான றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். ஆனால், தமது இராணுவம், எவ்விதமான தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என, அந்நாட்டு அரசாங்கம், தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.

அதேபோல், இது தொடர்பான அறிவிப்பை விடுத்த ஜனாதிபதி அலுவலகம், “சுயாதீனமான இந்த ஆணைக்குழு, அர்ஸா குழுவின் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், அது தொடர்பான விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்யும்” எனக் குறிப்பிட்டிருந்தது. எனவே, இராணுவத்தின் மீது தவறு காணப்பட்டாலும், அர்ஸா ஆயுதக்குழுவின் தாக்குதலின் விளைவாகவே அத்தவறு ஏற்பட்டது என்ற வகையில் முடிவு எட்டப்படுமோ என்ற அச்சமும் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .