2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘வடகொரிய அதிகாரிகளால் பெண்களுக்கெதிராகப் பாலியல் வன்முறைகள்’

Editorial   / 2018 நவம்பர் 02 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் பொலிஸாரும் ஏனைய அதிகாரிகளும், தமது நாட்டுப் பெண்கள் மீது, தண்டனை கிடைக்குமென்ற எவ்வித அச்சமுமின்றி, பாலியல் வன்முறைகளைப் புரிந்து வருகின்றனர் என, மனித உரிமைகள் கண்காணிப்பகம், அறிக்கையொன்றில் நேற்று (01) குற்றஞ்சாட்டியது.

வடகொரியாவிலிருந்து தப்பியோடி, வெளியே வந்துள்ள 50க்கும் மேற்பட்டோரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு, இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

வன்புணர்வுகள், ஏனைய துன்புறுத்தல்கள் ஆகியன, பாதுகாப்புப் பிரிவினரால் மாத்திரமன்றி, சிவில் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன என, இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அணுவாயுதப் பலத்தைக் கொண்ட வடகொரியா மீது, பல்வேறுபட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், ஐ.நா உள்ளிட்ட அமைப்புகளாலும் ஏனைய நாடுகளாலும் சுமத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில், ஆண்களே இன்னமும் முழு ஆதிக்கம் செலுத்தும் நடைமுறை காணப்படுகிறது.

ஆனால், வடகொரியாவிலிருந்து தப்பியோடுவோரில் கணிசமானோர், பெண்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு, அரச பணி வழங்கப்படுவதில்லை என்பதால், அவர்கள் தப்பியோடினாலும், அவர்களைப் பற்றி ஆராய்வது குறைவானதாகக் காணப்படுகிறது.

எனினும், இவ்வாறு தப்பியோடும் பெண்கள் கைப்பற்றப்பட்டாலோ அல்லது நாட்டுக்கு மீளத் திருப்பி அனுப்பப்பட்டாலோ, சித்திரவதை, சிறை, பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என, அறிக்கை தெரிவிக்கிறது.

சிறையிலடைக்கப்பட்ட காலத்தில் சில பெண்கள், ஒவ்வொரு நாளும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர் என, வாக்குமூலமொன்றில் ஒரு பெண் தெரிவித்தார்.

அதேபோல், சீனாவிலிருந்து பொருட்களைக் கடத்தி, வடகொரியாவுக்குள் விற்கும் பெண்கள், அரச அனுமதிபெற்ற கடைகளிலேயே அவற்றை விற்க வேண்டிய நிலையில், பாலியல் இலஞ்சம் கோரப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடகொரியாவைப் பொறுத்தவரை, வன்புணர்வில் ஈடுபடுவோர், அவற்றின் மூலமாகத் தண்டனை பெறுவர் என்ற நிலை காணப்படாத நிலையில், சுதந்திரமாக வன்புணர்வில் ஈடுபடக்கூடிய நிலை உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .