2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வடகொரியா மீதான தடைகள் தொடரும்’

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா, முழுமையான அணுவாயுதமழிப்பை மேற்கொள்ளும் வரை, அந்நாடு மீதான கடுமையான தடைகள் தொடருமென, ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, நேற்று (14) தெரிவித்தார். இது, இவ்விடயம் தொடர்பாக வடகொரியா தெரிவித்த கருத்துக்கு முரணானதாக அமைந்துள்ளது.

ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், சிங்கப்பூரில் சந்தித்தைத் தொடர்ந்து, சமாதானம் தொடர்பான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இச்சந்திப்புத் தொடர்பாக அறிக்கையிட்ட வடகொரிய அரச ஊடகம், தம்மிடமுள்ள அணுவாயுதங்களைப் படிப்படியாக இல்லாது செய்யவும், ஒவ்வொரு படியிலும் தடைகளை நீக்கவும், ஜனாதிபதி ட்ரம்ப் சம்மதித்தாரெனக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், தென்கொரியாவில் வைத்து, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் உள்ளிட்டோரைச் சந்தித்த மைக் பொம்பயோ, அதற்கு மாறான கருத்தை வெளிப்படுத்தினர்.

தடைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு, முழுமையான அணுவாயுதமழிப்புத் தேவை என்ற விடயத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார் என, பொம்பயோ குறிப்பிட்டார். “முழுமையான அணுவாயுதமழிப்பை நோக்கி நாம் செல்லவிருக்கிறோம். அதன் பின்னர் தான், தடைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்” என அவர் குறிப்பிட்டார்.

தமது அணுவாயுதங்களை விடுவிப்பதற்கு, வடகொரியா உறுதியுடன் இருக்கிறது எனத் தெரிவித்த பொம்பயோ, எனினும் அது இலகுவாக இருக்காது எனவும், ஒரு தொடர்ந்துசெல்லும் செயற்பாடாக அது இருக்குமெனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .