2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வடகொரியா மீதான தடைகள் மீறப்பட்டன’

Editorial   / 2018 பெப்ரவரி 16 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையால், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை மீறப்பட்டுள்ளது என, ஜப்பான் தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுக்கும் வடகொரியக் கப்பலுக்கும் இடையில், பொருட்களின் பரிமாற்றம் இடம்பெற்றதைக் கண்டுபிடித்தமையின் மூலமே, இது மீறப்பட்டுள்ளது என்பதைக் கண்டுள்ளதாக, அந்நாடு தெரிவிக்கிறது.

கிழக்கு சீனக் கடலில், கடந்த செவ்வாய்க்கிழமை, இப்பரிமாற்றம் இடம்பெற்றதை, தமது நாட்டு கண்காணிப்பு விமானங்கள் கண்டுபிடித்தன என, ஜப்பானிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தெரிவித்தது.

இது தொடர்பாக ஆராய்ந்த பின்னர், பாதுகாப்புச் சபையின் தடை மீறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்த ஜப்பான், அது குறித்து, பாதுகாப்புச் சபைக்கு அறிவித்ததோடு, சம்பந்தப்பட்ட நாடுகளும் அத்தகவலைப் பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்தது.

தென்கொரியாவில் இடம்பெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்குபற்றுவதைத் தொடர்ந்து, வடகொரியா மீதான கவனம், முழு உலகின் மீதும் குவிந்துள்ள நிலையிலேயே, இத்தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் நடவடிக்கைகள், சமாதானத்துக்கான முயற்சிகள் எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும், வடகொரியா மீது முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்த முடியாது என, விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் அதேநேரத்தில், இவ்வாறான பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை, வடகொரியாவின் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பான விமர்சனங்களை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியாவின் ஏவுகணை, அணுக்குண்டுச் சோதனைகளைத் தொடர்ந்து, வடகொரியா மீது பல்வேறான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், தற்போதைய பொருட்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் கப்பல் உட்பட வடகொரியாவின் 8 கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவே, மீறப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X