2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடகொரியா விவகாரம்: அமைதியான தீர்வை கோருகிறார் ஸி ஜின்பிங்

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவின் அணுவாயுதப் பிரச்சினைக்கு, அமைதியான தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமெனக் கோரியுள்ள சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான தனது தொலைபேசி உரையாடலின் போது, அனைத்துத் தரப்பும், இவ்விடயத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளார். 

வடகொரியா மீதான இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின், ஐ.அமெரிக்க இராணுவம், முழுமையாகத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த பின்னணியிலேயே, ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் இக்கருத்தும் தொலைபேசி உரையாடலும் இடம்பெற்றுள்ளன. 

சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இரண்டு ஜனாதிபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, அமைதியான தீர்வென்பது, அவசியமானது என்று ஜனாதிபதி ஸி வலியுறுத்தினார் என்று கூறப்பட்டது. 

“சம்பந்தப்பட்ட தரப்புகள், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதுடன், கொரியத் தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடிய கருத்துகளையும் நடவடிக்கைகளையும் தவிர்க்க வேண்டும்” என, ஜனாதிபதி ஸி குறிப்பிட்டார் என, அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது. 

இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, ஆத்திரமூட்டும் வகையிலான நடவடிக்கைகளை, வடகொரியா நிறுத்த வேண்டுமென, ஜனாதிபதி ட்ரம்ப்பும் ஜனாதிபதி ஸியும் ஏற்றுக் கொண்டனர் என, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அத்தோடு, கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதத்தை இல்லாது செய்வது தொடர்பில், இருதரப்புக்கும் உள்ள உடன்பாட்டையும், அவர்கள் வெளிப்படுத்தினர் என்று, மேலும் தெரிவிக்கப்பட்டது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .