2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வடகொரியாவில் அணுவாயுதமழிப்பு உடனடியாக இல்லை?

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடகொரியாவின் அணுவாயுதங்களை உடனடியாக அழிப்பதற்கு அவசரமேதும் இல்லை என, ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணுவாயுதமழிப்பு, உடனடியாகவே ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்து வந்த நிலையிலேயே, இக்கருத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

வடகொரியத் தலைவருடன் சிங்கப்பூரில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, வடகொரியாவின் அணுவாயுதங்கள், மிக விரைவில் இல்லாது செய்யப்படும் என்பது தான், ஐ.அமெரிக்கத் தரப்பின் கருத்தாக இருந்தது. 

இந்நிலையில், அது தொடர்பாக ஊடகவியலாளர்கள் நேற்று முன்தினம் (17) வினவிய போது, “கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. அவை, மிக மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. எங்களுக்கு நேரக் கட்டுப்பாடு இல்லை. எங்களுக்கு, வேகக் கட்டுப்பாடு இல்லை” என்று குறிப்பிட்டார். 

வடகொரியாவின் அணுவாயுதமழிப்புத் தொடர்பில், பின்லாந்துத் தலைநகரில் வைத்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்தபோது கலந்துரையாடியதாகவும், இவ்விடயத்தில் அவரும் இணைந்து செயற்படுவார் எனவும், ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார். 

வடகொரியாவுக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. ஆனால், அணுவாயுதமழிப்பு விடயத்தில், இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை.

ஏற்கெனவே, ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவுடன், 2 நாள்களாக இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அணுவாயுதமழிப்பு விடயத்தில், தன்னிச்சையாக ஐ.அமெரிக்கா செயற்படுகிறது எனத் தெரிவித்து, கடுமையான விமர்சனங்களை, வடகொரியா வெளியிட்டிருந்தது. எனவே, அந்த விமர்சனத்துக்குப் பின்னர் தான், இக்கருத்து மாற்றம் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகமும் காணப்படுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .