2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாக்கெடுப்பு நாளில் அதிர்ந்தது ஆப்கான்; சுமார் 170 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான் பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாளான நேற்று முன்தினம் (20), பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்ற நிலையில், அவற்றில் சுமார் 170 பேர் கொல்லப்பட்டனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர். வன்முறைகளுக்கு மேலதிகமாக, வாக்கெடுப்பிலும் சிக்கல்கள் நிலவிய நிலையில், பல வாக்களிப்பு நிலையங்களில், நேற்றைய (21) தினம் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மாத்திரம், குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

காபூலில் நடத்தப்பட்ட இறுதித் தாக்குதலுக்கு முன்னர், அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த தலிபான் குழு, “போலித் தேர்தலை” இலக்குவைத்து, 300க்கும் மேற்பட்ட தாக்குதல்களை, நாடு முழுவதிலும் நடத்தியிருந்தாகக் குறிப்பிட்டது. இத்தேர்தலை நிராகரித்திருந்த அக்குழு, தேர்தலைப் புறக்கணிக்குமாறு, மக்களுக்குப் பணித்திருந்தது.

தாக்குதல்களின் போது, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஒன்றின் ஊழியரொருவர் கொல்லப்பட்டதோடு, 7 பேர் காயமடைந்தனர் என, ஆணைக்குழு தெரிவித்தது. இத்தாக்குதல், குண்டூஸ் நகரத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் உள்விவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, 160 பேர் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டது. உயிரிழந்தோரில், பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் உள்ளடங்குகின்றனர் எனக் குறிப்பிட்ட அவ்வமைச்சு, உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை, 27 எனக் குறிப்பிட்டது.

அமைச்சின் தகவலின்படி, வாக்கெடுப்பு நாளன்று, 193 தாக்குதல்கள், நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன. இது, 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை விட, பாதியளவு குறைவானது என, அவ்வமைச்சு மேலும் தெரிவித்தது.

இதேவேளை, தேர்தல் வாக்கெடுப்பின் போது, வாக்கெடுப்பு நடத்த முடியாமற்போன 401 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு, நேற்று (21) இடம்பெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றின் கடமைகளுக்காக, மேலதிக அதிகாரிகள் 500 பேர் நியமிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X