2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விசாரணைக்குக் கோரினார் ட்ரம்ப்; சம்மதித்தது நீதித் திணைக்களம்

Editorial   / 2018 மே 22 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், தன்னுடைய பிரசாரக் குழு, அரசியல் வேவு பார்த்தலுக்கு உட்பட்டதா என்பது தொடர்பாக, நீதித் திணைக்களம் விசாரணை செய்ய வேண்டுமென, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியதைத் தொடர்ந்து, அது தொடர்பாக விசாரணை செய்யவுள்ளதாக, நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யா தலையிட்டதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், அவ்விசாரணைகளை, பழிவாங்கல் நடவடிக்கை என, ஜனாதிபதி ட்ரம்ப் விவரித்து வருகிறார். அவ்விசாரணைகளின் ஓர் அங்கமாக, சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த செய்தியில், ட்ரம்ப் பிரசாரக் குழுவைச் சேர்ந்தவர்களைக் கண்காணிப்பதற்காக, பிரித்தானியாவில் வசித்துவரும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவரை, புலனாய்வுக் கூட்டாட்சிப் பணியகம் (எப்.பி.ஐ) பயன்படுத்தியது என, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தன்னுடைய பிரசாரக் குழு, வேவு பார்க்கப்பட்டது எனவும், அப்போது ஜனாதிபதியாக இருந்த, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமாவின் தலையீடு அதில் இருக்கலாமெனவும், ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவருகிறார்.

இதைத் தொடர்ந்தே, இவ்விசாரணைக்கான கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

எனினும், ஐ.அமெரிக்காவின் வரலாற்றில், நீதித் திணைக்களம் சுயாதீனமாக இயங்க வேண்டுமென்பதற்காக, ஜனாதிபதிகள் அதன் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என்பதால், ஜனாதிபதி ஒபாமாவின் நேரடியான கோரிக்கையில் அது இடம்பெற்றிருக்காது எனவும், சந்தேகம் இருப்பதால், எப்.பி.ஐ தானாக மேற்கொண்ட விசாரணையாகவே அது அமைந்திருக்கும் எனவும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு, இவ்விடயம் தொடர்பாக விசாரணை செய்யுமாறு நீதித் திணைக்களத்தைப் பணித்தமை மூலம், திணைக்களத்தின் செயற்பாடுகளில் அவர் தலையிட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X