2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெனிசுவேலா: ‘பகடைக்காய்களாக உதவிகள் மாறக்கூடாது’

Editorial   / 2019 பெப்ரவரி 08 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், உதவிப் பொருட்கள், பகடைக்காய்களாக மாறக்கூடாது என, ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ளது. வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்ட உதவிப் பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்தே, ஐ.நா இவ்வாறு தெரிவித்துள்ளது.

வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியாகத் தன்னை அறிவித்துள்ள குவான் குவைடோவின் கோரிக்கையின் பேரில், ஐக்கிய அமெரிக்காவால் அனுப்பப்பட்ட உதவிகள், கொலம்பியாவிலிருந்து வெனிசுவேலா நோக்கிச் சென்றிருந்தன. ஆனால், வெனிசுவேலாவின் ஜனாதிபதிப் பதவிக்கு உரிமைகொரும் இன்னொருவரான நிக்கொலஸ் மதுரோவுக்கு விசுவாசமாக இருக்கின்ற இராணுவத்தினர், அவ்வுதவிகள் சென்றடைவதைத் தடுத்திருந்தனர்.

இந்த உதவிகள் மறுக்கப்பட்டமை தொடர்பில், ஐ.அமெரிக்கா தனது கண்டனத்தைத் தெரிவித்தது. வெனிசுவேலாவில் மனிதாபிமான நெருக்கடி காணப்படுகிறது எனத் தெரிவித்திருந்த ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, ஐ.அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் உதவ முயல்கின்ற போதிலும், மதுரோவால் அவ்வுதவிகள் தடுக்கப்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டினார்.

மதுரோவின் அனுமதியின்றி உதவிப் பொருட்களை வெனிசுவேலாவுக்குள் அனுப்ப வேண்டுமாக இருந்தால், ஐ.நா பாதுகாப்புச் சபையின் உதவியை நாடுவது தான், ஐ.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு உள்ள ஒரே வாய்ப்பாக இப்போது மாறியுள்ளது. ஆனால், பாதுகாப்புச் சபையில் வீற்றோ அதிகாரத்தைக் கொண்டுள்ள ரஷ்யா, அவ்வாறான முயற்சியை எதிர்க்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இவற்றுக்கு நடுவிலேயே கருத்துத் தெரிவித்த ஐ.நா பேச்சாளர் ஸ்டெஃபானி டுஜாரிக், “அரசியல், இராணுவ, ஏனைய நோக்கங்களிலிருந்து தனித்ததாக, மனிதாபிமான நடவடிக்கை அமைய வேண்டும்” எனத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியென்பது, இரு தரப்புகளுக்குமிடையில் காத்திரமான பேரம்பேசல்கள் இடம்பெற வேண்டுமென்பதை மேலும் வலியுறுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X