2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெளிநாட்டிலுள்ள சவுதி உயர் அதிகாரியின் குடும்பம் இலக்கு வைப்பு

Editorial   / 2020 மே 25 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவுதி அரேபியாவிலுள்ள பிரித்தானியாவின் உளவு முகவரகமான எம்.ஐ.6-க்கும், ஏனைய மேற்குலக உளவு முகவரகங்களுக்கு இடையேயுமான நபராக ஆண்டுக் கணக்காகக் காணப்பட்ட சவுதி அரேபிய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியான கலாநிதி சாட் அல்-ஜப்ரி, அவரது குடும்பத்துடன் இடர்படுத்தப்படுவதாக மேற்குலக புலனாய்வு முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்குலகத்துக்கெதிரான அல்-கொய்தாவின் குண்டுத் திட்டமொன்றை தவிடுபொடியாக்க உதவிய சாட் அல்-ஜப்ரி, சவுதி அரேபியாவின் சக்திவாய்ந்த முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் களையெடுப்புக்கு முன்னதாக, மூன்றாண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது சாட் அல்-ஜப்ரியின் பணயக்கைதிகளாகப் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவரது மூத்த மகன் காலிட் கூறியுள்ளார்.

20 கார்களில் இவ்வாண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி அதிகாலையில் சென்ற 50 அரச பாதுகாப்பு அதிகாரிகளால் ஓமரும், சாராவும் அவர்களது படுக்கைகளிலிருந்து கடத்தப்பட்டதாக அவர்களின் சகோதரர் காலிட் அல்-ஜப்ரி தெரிவித்துள்ளார்.

பின்னர் சவுதி அரேபியத் தலைநகர் றியாத்திலுள்ள குடும்ப வீடு தேடப்பட்டதுடன், கண்காணிப்புக் கமெராவின் நினைவகங்கள் அகற்றப்பட்டதுடன், முறையே 21 வயதான ஓமர், 20 வயதான சாரா ஆகியோர் தொடர்பில்லாமல் தடுப்பு நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களின் கைதுக்கு குற்றச்சாட்டுக்கள் எவையும் வழங்கப்படாததுடன், குடும்பத்துக்கு காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என தனது தந்தையுடன் கனடாவிலுள்ள காலிட் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவுக்கு அலி ஜப்ரியை வலிந்து திரும்ப வைப்பதற்கான பணயக் கைதிகளாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்புவதாக காலிட் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில், மேற்குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்குமாறான கோரிக்கைகளுக்கு சவுதி அரேபிய அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.

2000ஆம் ஆண்டுகளில் அல்-கொய்தாவை வெற்றி கொள்ள உதவியதாக கூறப்படும் இளவரசர் மொஹமட் பின் நயேஃப்பின் வலதுகரமே சாட் அல்-ஜப்ரி ஆவார்.

அந்தவகையில், 2015ஆம் ஆண்டு மொஹமட் பின் சல்மான் பாதுகாப்பமைச்சராக நியமிக்கப்பட்டதைத்  தொடர்ந்து யேமனின் சிவில் யுத்தத்தில் தலையிட தன்நாட்டுப் படைகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நகர்வு அல்-ஜப்ரியால் எதிர்க்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .