2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘வேண்டுமென்றே MH370 வீழ்த்தப்பட்டிருக்கலாம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 01 , மு.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போன மலேஷிய எயார்லைன்ஸ் விமானமான MH370, வேண்டுமென்றே அதன் பாதையிலிருந்து விலகும்படி, கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்பட்டன என்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என, விமானம் காணாமல் போனமை தொடர்பாக விசாரித்து வந்த விசாரணையாளர்கள், அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், யார் அதனைச் செய்தனர் என்பதை, அவர்களால் கண்டுபிடித்திருக்க முடியவில்லை.

கோலா லம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி, 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி, 239 பேருடன் சென்ற விமானத்துக்கு முடிவாக என்ன நடந்தது என்பதையும், 495 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கையில், அவர்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை. எனவே, விமான சேவை வரலாற்றில் முக்கியமான மர்மங்களில் ஒன்றாகக் காணப்படும் இவ்விமானத்தின் நிலை, தொடர்ந்தும் மர்மமாகவே காணப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்க நிறுவனமொன்றால், மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையை முடிவுக்குக் கெண்டு வருவதாக, இவ்வாண்டு மே 29ஆம் திகதி, மலேஷியா அறிவித்திருந்தது. இந்து சமுத்திரத்தின் தெற்குப் பகுதியில், 112,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், குறிப்பிடத்தக்க அளவிலான விடயங்கள் எவையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

அதற்கு முன்னதாக, அவுஸ்திரேலியா, சீனா, மலேஷியா ஆகியன இணைந்து, 120,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவில், 147.06 மில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் செலவிலான தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன. அதிலும், குறிப்பிடத்தக்க விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட விசாரணையாளர்கள், விமானி ஸகாரி அஹ்மட் ஷா, முதல் அதிகாரி உள்ளிட்டோரின் அனுபவம், பயிற்சி, உளநலம் ஆகியன தொடர்பாகத் திருப்தியடைவதாகக் குறிப்பிட்டனர். அத்தோடு, விமானி அல்லது அலுவலர்கள் தான் இதைச் செய்தார்கள் என, தாங்கள் எண்ணவில்லை என்றும் குறிப்பிட்டனர். அதேநேரத்தில், விமானத்தில் ஏற்பட்ட திருப்பம், வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது என்பதை நிராகரிக்கவில்லை எனவும், மூன்றாவது தரப்பொன்றால் தலையீடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற விடயத்தையும் நிராகரிக்கவிலிலை எனவும் குறிப்பிட்டனர்.

அதேபோல், விமானத்தில் பயணித்த, 15 நாடுகளையும் சேர்ந்த பயணிகள், அந்தந்த நாடுகளால் பின்புலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்கள் எனவும், உறுதியான உடல்நலத்தைக் கொண்டவர்கள் எனவும், அறிக்கை குறிப்பிடுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X