2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸைனாப்பைக் கொன்றவர் தூக்கிலிடப்பட்டார்

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானைச் சேர்ந்த 6 வயதுச் சிறுமியொருத்தியை, வன்புணர்வுக்கு உட்படுத்தி, அவரைக் கொன்றாரெனக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நபருக்கு, நேற்று (17) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள கசூர் நகரத்தில், இவ்வாண்டு ஜனவரியில், இந்த வன்புணர்வும் கொலையும் இடம்பெற்றிருந்தது. ஆறு வயதுச் சிறுமியான ஸானாப் பாத்திமா அமீன் என்ற பெயர், சர்வதேச அளவில் பேசப்படும் ஒரு விடயமாக மாறியது. 

இக்கொலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்ததோடு, கலவரங்களும் ஏற்பட்டிருந்தன. 

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில், 24 வயதான இம்ரான் அலி என்பவர், குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.  

சிறுவர்கள் மீதான 8 தாக்குதல்களை மேற்கொண்டார் எனவும், அவற்றில் 6 கொலைகளும் உள்ளடங்குகின்றன எனவும் வெளிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 4 மரண தண்டனைகள், அவருக்குத் தீர்ப்பாக வழங்கப்பட்டன. 

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரி ஒருவர், ஸைனாப்பின் தந்தை ஆகியோருக்கு முன்னிலையில், தூக்கிலிடப்பட்டு, இம்ரான் அலிக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

ஸைனாப்பின் குடும்பத்தினர், இம்ரான் அலியின் மரண தண்டனை, பகிரங்கமாக நிறைவேற்றப்பட வேண்டுமெனக் கோரி, அதற்காக நீதித்துறையின் உதவியையும் நாடியிருந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை, லாகூர் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த, ஸைனாப்பின் தந்தை அமீன் அன்சாரி, தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறித்துத் திருப்தியடைந்தாலும், பகிரங்கமாக அத்தண்டனை நிறைவேற்றப்படாமை குறித்துத் திருப்தியின்மையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .