2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஹொடெய்டாவிலிருந்து இரு தரப்புகளும் வெளியேற வேண்டும்’

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

யேமனில், போரில் ஈடுபட்டுள்ள பிரதான இரு தரப்புகளாலும் உரிமை கோரப்படுகின்ற ஹொடெய்டாவிலிருந்து, இரு தரப்புகளும் வெளியேற வேண்டும் என்ற முன்மொழிவை, ஐக்கிய நாடுகள் வெளிப்படுத்தியுள்ளது. போரில் ஈடுபடும் தரப்புகளான அரசாங்கத் தரப்பும் ஹூதி போராளிகளும், சுவீடனில் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளிலேயே, இம்முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போர் காரணமாக, யேமனில் பட்டினி, பஞ்சம் ஆகியவற்றுக்கான ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், ஹூதி போராளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஹொடெய்டாவைக் கைப்பற்றுவதற்காக, அரசாங்கமும் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளும் முயல்கின்றமை, அங்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற, சவூதி அரேபியா தலைமையிலான இராணுவக் கூட்டணியின் விமானத் தாக்குதல்களால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிலைப்பாட்டில், இரு தரப்புகளும் உள்ளனவா என்பது சந்தேகமே. இந்நிலையில், ஹொடெய்டாவிலிருந்து இரு தரப்புகளும் வெளியேற வேண்டுமென ஐ.நா விடுத்துள்ள கோரிக்கை ஏற்கப்படுமா என்பது, சந்தேகமே.

இவற்றுக்கு மத்தியில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ், இன்று (13) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளின் இறுதி நாளாக, இன்றைய தினமே அமையவுள்ள நிலையிலேயே, செயலாளர் நாயகம் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, இம்முறை பேச்சுவார்த்தைகளில், பெரிதளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் கூட, அடுத்தாண்டு ஆரம்பத்தில், இன்னுமொரு கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .