2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அரையிறுதிக்குள் சென். பற்றிக்ஸ், யாழ். மத்தி, மகாஜனா, சென். ஜோன்ஸ்

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

Cricket Bash - 2017 சுற்றுப்போட்டியின் அரையிறுதிக்குள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரி ஆகிய அணிகள் உள்நுழைந்துள்ளன.

யாழ்.மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம், மற்றும் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் இணைந்து, வடக்கு - கிழக்குப் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் இருபது - 20 சுற்றுப்போட்டியொன்றை, கடந்த 1ஆம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் நடத்தி வருகின்றது. காலிறுதிப் போட்டிகள், 4ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றன.

சென். ஜோன்ஸ் வெற்றி

முதலாவது காலிறுதிப் போட்டியில், கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து சென். ஜோன்ஸ் கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற கொக்குவில் இந்துக் கல்லூரி அணி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பானுஜன் 47, துசியந்தன் 26, தனுக்சன் 22 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சார்பாக, கபில்ராஜ் 4 விக்கெட்டுகளையும், அபினேஸ், சௌமியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

128 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலளித்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடியால் விரைவாக வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தது. 16 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் சுபீசன் 41, சௌமியன், ஜதுசன் ஆட்டமிழக்காமல் முறையே 31, 47 ஓட்டங்களைப் பெற்றனர்.

மகாஜனாக் கல்லூரி வெற்றி

இரண்டாவது காலிறுதிப் போட்டியில், மட்டக்களப்பு சென். மைக்கல் அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி மோதியது. மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென். மைக்கல் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜெ.நிலுசாந்த் தனியாளாக அதிரடி காட்டி, 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் மகாஜனா அணி சார்பாக, என்.ஜனுசன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

124 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலளித்தாடிய மகாஜனாக் கல்லூரி அணி, 16.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் என்.ஜனுசன் 51, எம்.சுஜீபன் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஏ.கிரிசாந்த் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சென். பற்றிக்ஸ் வெற்றி

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற மட்டக்களப்பு சிவானந்தா அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதற்கிணங்க களமிறங்கிய சென். பற்றிக்ஸ் கல்லூரி அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எம்.நிதுசன் 29, எல்.றொசாந்த், பென்ஸன் ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும், ஜி.அனோஜன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சிவானந்தா அணி சார்பாக, விதுசன் 3 ஓவர்கள் பந்துவீசி 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய சிவானந்தா அணி, 20 ஓவர்கள் வரையிலும் நின்று நிலைத்த சிவானந்தா 6 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பந்துவீச்சில் சென். பற்றிக்ஸ் அணி சார்பாக, பெட்ரிக், அனோஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி

சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எம்.யசிக்குமார் 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் எஸ்.தசோபன் 3.3 ஓவர்கள் பந்துவீசி 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஏ.அனஸ்ராஜ், எஸ்.மதுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலளித்தாடி யாழ். மத்திய கல்லூரி, கௌதமனின் அதிரடி ஆட்டத்தால், 6.5 ஓவர்களில் 1 விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.கௌதமன் ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .