2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கால்பந்தாட்டத்தில் சம்பியனாகியது யாழ். மாவட்டம்

குணசேகரன் சுரேன்   / 2017 மே 29 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டாவது பாதியில் அணியில் செய்யப்பட்ட மாற்றங்கள், அணிக்குப் புத்துணர்ச்சியளிக்க, இறுதிநேர அபார ஆட்டத்தால், போட்டியைச் சமநிலைப்படுத்தி, தொடர்ந்து நடைபெற்ற சமநிலை தவிர்ப்பு உதையின் மூலம் யாழ். மாவட்ட அணி, வட மாகாணச் சம்பியனாகியது.   

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற வட மாகாண மாவட்டங்களுக்கிடையிலான 11ஆவது விளையாட்டு விழாவின் கால்பந்தாட்ட இறுதிப் போட்டி, நேற்று  (28) இரவு, மின்னொளியில் நடைபெற்றது. இதில், மன்னார் மாவட்ட அணியும் யாழ்ப்பாண மாவட்ட அணியும் மோதின.   

2010ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு வரையிலும் இரண்டு மாவட்ட அணிகளுமே, வட மாகாண மாவட்டங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   

2010ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையும், தொர்ந்து நான்கு ஆண்டுகள் மன்னார் மாவட்ட அணி வெற்றிபெற்றிருந்தது. 2014ஆம் ஆண்டு, யாழ். மாவட்ட அணி வென்றது. 2015ஆம் ஆண்டில், இரண்டு அணிகளும் இணைச் சம்பியனாகியிருந்தன. கடந்தாண்டு, மன்னார் மாவட்ட அணி சம்பியனாகியிருந்தது. இந்நிலையில் இம்முறை இறுதிப் போட்டியிலும் இரண்டு அணிகளும் மோதின.   

போட்டி ஆரம்பமானது தொடக்கம், ஆட்டத்தில் எவ்வித உத்வேகமும் இல்லாத நிலை இருந்தது. போட்டியின் 20ஆவது நிமிடத்தின் பிறகு, மன்னார் மாவட்ட அணியின் கைகள் ஓங்கியது. அந்த அணி, அடிக்கடி யாழ். மாவட்ட அணியின் கோல் கம்பத்தை ஆக்கிரமித்தது. இதன் பயன் 44ஆவது நிமிடத்தில், மன்னார் மாவட்ட அணிக்குக் கிட்டியது. முதலாவது கோலை மன்னார் அணி பெற்றது. முதற் பாதி, அந்தக் கோலுடன் முடிவுக்கு வந்தது.   

இரண்டாவது பாதியில் மன்னார் அணி வேகமாக ஆடியது. இந்நிலையில், யாழ். மாவட்ட அணியின் வீரர்களில், இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிதாக உள்நுழைந்த வீரர்களின் மூலம் யாழ். மாவட்ட அணி, புத்துயிர் பெற்றது போல் ஆடியது. இறுதி நிமிடங்களில், யாழ்.மாவட்ட அணியின் வேகம் அதிகரித்தது. இதன் பயனாக, போட்டியின் 85ஆவது நிமிடத்தில் யாழ். மாவட்ட அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அதனை கலிஸ்ரஸ் கோலாக மாற்றி, கோல் எண்ணிக்கையைச் சமநிலைப்படுத்தினார்.   

போட்டியின் வழமையான நேர முடிவில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தன. வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டு, அதில், யாழ்.மாவட்ட அணி 5-4 என்ற ரீதியில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X