2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சம்பியனாகியது பலாலி விண்மீன்

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன், கே. கண்ணன்

யாழ். வடமராட்சி சமரபாகு நியூட்டன் விளையாட்டுக் கழகம் நடத்திய கால்பந்தாட்டத். தொடரில், பலாலி விண்மீன் அணி சம்பியனாகியது. 

வடமராட்சி கால்பந்தாட்ட லீக்கின் அனுசரணையில், வடமராட்சியின் சிறந்தவன் என்ற தொனிப்பொருளில் அணிக்கு 7 பேர் கொண்ட இத்தொடரை நியூட்டன் விளையாட்டுக் கழகம் நடத்தியிருந்தது. இதில், மொத்தமாக 40 அணிகள் பங்குபற்றியிருந்தன. முதற்சுற்றுப் போட்டிகள் விலகல் முறையில் இடம்பெற்று, அதிலிருந்து எட்டு அணிகள் தெரிவுசெய்யப்பட்டு, அவற்றுக்கிடையில் லீக் முறையில் போட்டிகள் இடம்பெற்றன.

அந்தவகையில், நவிண்டில் கலைமதி ஏ, கரணவாய் கொலின்ஸ், அண்ணாசிலையடி இளைஞர், வதிரி டயமன்ஸ், நவிண்டில் கலைமதி பி, கம்பர்மலை யங்கம்பன்ஸ், பலாலி விண்மீன் மற்றும் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் ஏ அணி ஆகிய 8 அணிகளும் லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன.

தொடர்ந்து நடைபெற்ற சுப்பர் - 8 அணிகளுக்கிடையிலான போட்டிகளிலிருந்து, நவிண்டில் கலைமதி, பலாலி விண்மீன், வதிரி டயமன்ஸ் மற்றும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதியில், கலைமதி அணி, யங்கம்பன்ஸ் அணியையும் விண்மீன் அணி, டயமன்ஸ் அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

இறுதிப் போட்டி, மின்னொளியில் நேற்றிரவு இடம்பெற்றது. முதற்பாதியில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறவில்லை. இரண்டாம் பாதியில் விண்மீன் அணியின் காண்டீபன் முதலாவது கோலைப் பெற்றார். அக்கோல் இறுதி வரையில் நீடிக்க, பலாலி விண்மீன் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சம்பியனாகியது.

இறுதிப் போட்டியின் நாயகனாக விண்மீன் அணியின் நட்சத்திர வீரர் எஸ். டேமியன் தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகனாக கலைமதி அணியின் தேவராஜ் தெரிவுசெய்யப்பட்டார். மேலும், கலைமதி அணியின் சத்தியசீலன் சிறந்த பின்கள வீரராகவும், விண்மீன் அணியின் கோல் காப்பாளர் றெடின் சிறந்த கோல் காப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .