2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சம்பியனானது யாழ்ப்பாணம் மத்தி கல்லூரி

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன், கே. கண்ணன்

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு, கடினப்பந்து கிரிக்கெட் ஆரம்பித்து 75 ஆவது ஆண்டு நிறைவு ஆகியவற்றை கொண்டாடும் வகையில், வட மாகாண அழைக்கப்பட்ட பாடசாலைகளின் 19 வயதுகுட்பட்ட அணிகளுக்கிடையிலான இருபதுக்கு – 20 தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனானது.

ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற 16 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், சென். ஜோன்ஸ் கல்லூரியை வென்றே யாழ். மத்திய கல்லூரி சம்பியனாகியிருந்தது.

இதில், யாழ். மத்திய கல்லூரி, கிளிநொச்சி மத்திய கல்லூரியையும், சென். ஜோன்ஸ் கல்லூரி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியையும் அரையிறுதிப் போட்டிகளில் வென்றே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன.

இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ். மத்திய கல்லூரியின் அணித்தலைவர் விஜயகுமார் வியாஸ்காந்த், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு ஆரம்ப இணைப்பாட்டமாக இந்துஜன் - சஞ்சயன் ஜோடி திடமான ஆரம்பத்தை வழங்கியது. இந்துஜன் 27, சஞ்சயன் 26 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர்.

மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜெயதர்சன் சற்று நிலைத்து நின்றார். அணித்தலைவர் விஜயகுமார் வியாஸ்காந்த் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜெயதர்சனுடன் இணைந்து நிதுசன் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். ஜெயதர்சன் 29, நிதுசன் 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பின்வரிசையில் களமிறங்கிய கஜன் அதிரடியாக 18 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களை யாழ். மத்திய கல்லூரி பெற்றது. பந்துவீச்சில், அபிசேக் 3, டினோசன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 155 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் பெரிதும் ஏமாற்றினர். ஆறாமிலக்க வீரராக களமிறங்கிய வடக்கின் மாபெரும் சமரின் கதாநாயகன் தெய்வேந்திரம் டினோசன் தனியாளாக நின்று களமாடினார். எனினும் அவருக்கு எந்த துடுப்பாட்ட வீரரும் கைகொடுக்கவில்லை. டினோசன் அரைச்சதம் கடந்து அணியை பலப்படுத்தினார். அவரும் ஆட்டமிழக்க சென். ஜோன்ஸின், வெற்றிக்கான நகர்வும் முடிவுக்கு வந்தது. 15.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், டினோசன் 61 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், இயலரசன் 3, நிதுசன் 2, விதுசன், விஜயகுமார் வியாஸ்காந்த், கஜன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இறுதிப் போட்டியின் நாயகன், சிறந்த பந்துவீச்சாளராக ஏ. நிதுசன், சிறந்த துடுப்பாட்டவீரராக தெய்வேந்திரம் டினோசன், சிறந்த களத்தடுப்பாளராக விஜயகுமார் வியாஸ்காந்த் ஆகியோர் தெரிவாகினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .