2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாதனை வீரங்கனையின் வலி

Editorial   / 2020 ஜனவரி 06 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ச. விமல்

தமிழர்களின் விளையாட்டுத்துறை வளர்ச்சி என்பது இலங்கையில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. சாதிக்கவில்லை என்று சொல்லக்கூடிய நிலையே காணப்படுகிறது. ஏன் சாதிக்க முடியாமல் போகிறது? எதிர்வீரசிங்கம், முத்தையா முரளிதரன், ரசல் ஆர்னோல்ட், தர்ஜினி சிவலிங்கம் இப்படி சொல்லக் கூடிய ஒரு சிலரே உருவாகியுள்ளார்கள். இன்னும் சிலர் அந்த இடத்துக்கு அருகில் சென்ற போதும் உச்சத்துக்கு செல்ல முடியாமல்  போயுள்ளது. ஏன் அவர்களால் அந்த இடங்களுக்கு செல்ல முடியவில்லை. இது கட்டாயம் ஆராயப்படவேண்டிய ஒன்று. எனவே வீர, வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் தொழில்சார் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் என பலரிடம் இந்த விடயங்கள் அறியப்படவேண்டும். ஆனாலும் கூட முழுமையான விபரங்கள் இதன் மூலம் வெளிவருமா என்பது சந்தேகம் என்றாலும் கூட சில விடயங்கள் வெளிவரும். அதன் மூலம் வீரர்கள் வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொள்வார்கள்.

வடக்கு, கிழக்கு, மலையகம் அடங்கலாக தமிழர் பகுதிகளில் விளையாட்டு மீதான அக்கறை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. ஏன் கொழும்பில் சகல வசதிகளுடனும் தமிழர்கள் வாழ்ந்துவருகின்றபோதும் குறிப்பிட்டு சொல்லக் கூடியளவில் யாரும் உருவாகவில்லை. மாறாக சாதித்து வருபவர்களை பார்த்தால் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக காணப்படுகிறார்கள். போதிய வசதியின்மை, குடும்ப நிலை காரணமாக விளையாட்டை அவர்கள் தொடர முடியாத நிலையில் காணப்படுகிறார்கள். அதன் காரணமாக அந்த விளையாட்டை வைத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்ற தொழில் ஒன்றை அல்லது வேலை ஒன்றை அமைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையில் சென்று விடுகிறார்கள். இந்த நிலை மாறவேண்டும். கிடைக்கும் சலுகைகளை விட எம்மவர்களுக்காக நாம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  அத்தோடு அவர்களுக்கு பக்க பலமாக இருந்து உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களை இனங்காட்ட வேண்டும். வெளியே பிரபலப்படுத்த வேண்டும். இவற்றின் மூலமாகவே எமது வீர வீராங்கனைகளை நாம் உருவாக்க முடியும்.

இலங்கையில் கோலூன்றிப் பாய்தலில் இலங்கைச் சாதனையை முறியடித்த சாதனை வீராங்கனை அனிதா ஜெகதீஸ்வரன் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்ற கூடிய நிலையில் உள்ளார். இருந்தாலும் அவரால் அது முடியாமால் போயுள்ளது. இந்நிலையில் அவர் தான் இன்னமும் இரண்டு ஆண்டுகளின் பின்னர் கோலூன்றிப் பாய்தலில் இருந்து விலகி விடுவேன் எனக் கூறுகிறார். 22 வயதான அனிதா ஆறு தடவைகள் தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்துள்ளார். 22 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்று வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வருகிறார். அவரின் எதிர்காலம் தொடர்பாகவும் ஏன் சர்வதேச ரீதியில் பங்குபற்ற முடியவில்லை போன்ற காரணங்களையும் அவரிடமே கேட்டறிய முடிந்தது.

கே: இலங்கைச் சாதனையை கொண்டுள்ள நீங்கள் ஏன் சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற முடியவில்லை?

ப: இலங்கையில் பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் என்று வந்தால் போட்டித்தன்மை அதிகமாகவே இருக்கின்றது. சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதனால் தெற்காசியப் போட்டி, பொதுநலவாய போட்டிகளில் கோலூன்றி பாய்தல் இல்லை. எனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலதான் பங்குபற்ற முடியும். அதற்கான தகுதியாக 3.80 மீற்றர் திறந்த போட்டிகளிலும், கனிஷ்ட போட்டிகளில் 3.60 மீற்றரும் காணப்படுகிறது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி வருகின்ற வீராங்கனைகள் திறமையானவர்களாக காணப்படுகிறார்கள். ஆனாலும் வசதி வாய்ப்புகள் போதுமானதாக இல்லை. ஆகையால் குறித்த அடைவு மட்டத்தை அடைய முடியாதுள்ளது. முக்கியமாக கோலூன்றிப் பாய்தலில் கோல், மெத்தை என்பன விலை அதிகமான பொருட்களாக காணப்படுகின்றன. மெத்தை 1,800,000 ரூபாய். கோல் 140,000 ரூபாய். இப்படி விலைகள் காணப்படுகிறது. ஒரு கோல் சேதமடைந்து விட்டால் மீண்டும் பாவிக்க முடியாது. மீண்டும் இலகுவாக வாங்க முடியாது.  இருந்தபோதும் விளையாட்டமைச்சு, கல்வித் திணைக்களம் என்பன நிறைய ஆதரவு வழங்கி வருகிறார்கள். அதனால்தான் வீராங்கனைகள் சாதித்து வருகிறார்கள்.

எனக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற வேண்டுமென்ற குறிக்கோள் இருந்தது. எனது சாதனை 3.50 மீற்றர். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாய முடியுமென எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உபாதை ஒன்று ஏற்பட்டது. வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சைகளை பெற்ற போதும் ஏற்பட்ட உபாதை இன்னமும் குணமடையவில்லை. ஆனால் மனதளவில் எனக்கு நம்பிக்கையுள்ள போதும் ஏற்பட்டுள்ள வலி மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. வேண்டாம் பேசாம விட்டிடலாம் என்ற மனநிலை உருவாகின்ற போதும், இல்லை விடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையால்தான் இன்னமும் செய்து கொண்டு வருகிறேன்.  இறுதியாக நடைபெற்ற தேசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றேன். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பங்குபற்றிய போட்டியில் வெல்ல முடிந்தது. இருந்தாலும் 3.30 மீற்றர் தான் என்னால் பாய முடிந்தது. வலி இருப்பதனால் அதிக பாய்தல்களை ஏற்படுத்த முடியவில்லை. பயிற்சிகளின்போதும் அதிகமாக பாய முடியவில்லை. வலி காரணமாக அதிகமாக பயிற்சிகளை பெற முடியவில்லை. உபாதைக்கு காரணமாக பயிற்சிகளை பெறும் இடங்களையும் கூறியிருந்தார்கள். கடினமான இடங்களில் பயிற்சிகளை மேற்கொள்வதனால் கால் எலும்பில் வெடிப்பு போன்று உருவாகியுள்ளதாக கூறினார்கள். அடிப்படை வசதிகளோட மட்டுமே பயிற்சிகளைப் பெறுகிறோம். புற்றரையில் பயிற்சிகளைப் பெறுகிறோம். தேசிய போட்டிகளில் செயற்கை ஆடுகளங்களில் பங்குபற்றுகிறோம். இதனால் உபாதை ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. பொதுவாக கோலூன்றி பாய்தல் கொல்லும் நிகழ்வு எனச் சொல்வார்கள். கஷ்டமான போட்டியும் கூட. யாழ்ப்பாணத்தில் இருந்து பங்குபற்றிவருபவர்கள் கோல், மெத்தை ஆகியவற்றை வைத்துக்கொண்டே பங்குபற்றி வருகிறார்கள். இன்னமும் நவீன வசதிகளும், தொழில்நுட்ப சாதனங்களும் வசதிகளும் கிடைத்தால் இன்னமும் அதிகமான சாதனைகளை பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

கே: கால்பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற போட்டிகளில் உபாதை ஏற்பட்டால் அவற்றை குணமாக்குவது இலகுவானது. வெளிநாட்டு சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்டால் சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற முடியுமா?

ப: நான் தாய்லாந்து போட்டி ஒன்றில் பங்குபற்றியிருந்தேன். அது ஒரு திறந்து அழைப்பு போட்டி. நான் இதனை சொல்லியாகவேண்டும். நான் ஒரு விவசாயியின் மகள். எனது வைத்தியச செலவுகளை முழுமையாக நானே பார்த்துக்கொண்டேன். அது எனக்கு கஷ்டமாக போய்விட்டது. அதனால் நிதிப் பிரச்சினை ஏற்பட்டது. நான் பயிற்றுவிப்பாளர் பதவியைப் பெற்றுக்கொண்டதே எனக்கு மாதாந்த வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. நான் ஒரு தமிழ்ப் பெண். இராணுவத்தில் கடமையாற்ற முடியாது. நான் எனது கலாசாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும். அதனை விட யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தமிழ் பிள்ளையாக நான் போய் பங்குபற்றுவது எனக்கு சந்தோஷம்.  வெளிநாட்டு சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் நான் இரண்டு ஆண்டுகளின் பின்னர்தான் மீண்டும் ஆரம்பிக்க முடியும். ஆனால் மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். வயதுப் பிரச்சினை. எனது மனநிலை இல்லாமல் போய்விடும் என்பதற்காக நான் இதனை வேண்டாம் என்று சொன்னேன். சத்திர சிகிச்சை செய்ய வேண்டாம் எனச் சொன்ன போது வைத்தியர் சொன்னார் தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்றி வாருங்கள். வலி ஒரு குறிப்பிடட காலப்பகுதி வரை இருக்கும். அதன் பின்னர் இல்லாமல் போய்விடும். வலி பழக்கப்பட்டு விடும் எனவும் அவர் கூறினார்.

கே: உங்கள் விளையாட்டைத் தாண்டி வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட தமிழர் பிரதேசங்களில் இருந்து சர்வதேச ரீதியில் சாதனைகளை புரிவதில்லை. ஏன்?

ப: பல தமிழ் வீர வீராங்கனைகள் தேசிய ரீதியில் நல்ல சாதனைகளை பெறுகின்ற போதும் அவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அல்லது மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. அதற்கான சரியான காரணம் தெரியவில்லை. நான் பங்குபற்றிய காலத்துக்கும் இப்போதைய காலத்துக்கும் ஒப்பிட்டு பார்க்கையில் தமிழ் வீர, வீராங்கனைகள் அதிகமாக பங்குபற்றி வருகிறார்கள். பங்குபற்றுதல் என்ற விடயம் இப்போது அதிகமாக காணப்படுகிறது. என்னுடைய சூழ்நிலை போன்று மற்றவர்களுக்கும் இருக்கும் என நான் நினைக்கிறேன். பொருளாதார சூழ்நிலை ஒரு முக்கியமான காரணமாக இருக்குமென நினைக்கிறேன். நாங்கள் இருக்கிறதை வைத்து சாப்பிட்டு, இருக்கிறதை வைத்து பயிற்சிகளை செய்தே போட்டிகளில் பங்குபற்றி வருகிறோம். இன்னும் வசதிகள் கிடைத்தால் அவர்கள் இன்னமும் வளர்வார்கள். சர்வதேச போட்டிகளை பொறுத்தளவில், தெற்காசிய போட்டிகளில் தமிழ் வீர, வீராங்கனைகள் நிறையப் பேர் பங்குபற்றியிருந்தார்கள். அதே பெரிய வெற்றி என்றே நான் நினைக்கிறேன் ஏனெனில் ஒருத்தர் பங்குபற்றி வெற்றி பெறுவதிலும் பார்க்க பலர் பங்குபற்றுவது முக்கியம். இம்முறை 15 - 20 தமிழ் வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருக்கிறாரக்ள். இவர்கள் கால்பந்தாட்டம், கபடி அடங்கலாக பல விளையாட்டுக்களில் பங்குபற்றியிருக்கிறார்கள். அதில பெரிய பங்குள்ளது.

கே: வடக்கு, கிழக்கு போன்ற இடங்களில் விளைட்டுக்குள் சிறுவர்களை கொண்டுவருவது, மற்றும் விளையாட்டுக்குக்கான ஆதரவு எவ்வாறு காணப்படுகிறது?

ப: குடும்ப ஆதரவு மிகவும் குறைவாக உள்ளது.  சிங்களவர்களை பார்த்தல் அவர்கள் மிகவும் ஆதரவாக உள்ளார்கள். பிள்ளைகளின் போட்டிகளுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இடம் கிடைக்குதோ இல்லையோ ஆதரவாக மைதானத்துக்கு வருகிறார்கள். அவர்களே கூட்டி வந்து அவர்களை கவனிக்கிறார்கள். உற்சாகப்படுத்துகிறார்கள். ஆனால் எங்கள் தமிழ் பிரதேசங்களில் பெற்றோரின் ஆதரவு கிடைப்பதில்லை. போட்டிகளில் பிள்ளைகள் மட்டுமே வந்து பங்குபற்றுகிறார்கள். சில பெற்றோர்கள் மட்டுமே வருவார்கள். எங்கட வீட்டில என்னுடைய போட்டிகளை பார்க்க யாருமே வர மாட்டார்கள். எனக்கும் என்னுடைய பெற்றோர் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.  நான் கேட்பேன். ஆனால் "நீ போய் பாய். நாங்கள் ஏன் வரவேண்டும் என கேட்பார்கள்". அப்படியான மனநிலைதான் காணப்படுகிறது. எனக்கு அது தாக்கமாக இருந்தது. மற்றைய பெற்றோர் வருகிறார்கள். என்னுடைய பெற்றோர் வருகிறார்கள் இல்லையென கவலைப்படுவேன். யாழ்ப்பாணத்தை பொறுத்தளவில் சரி வட மாகாணத்தை பொறுத்தளவில் பெற்றோரின் ஆதரவு குறைவடைந்து வருகிறது. சிறுவர்களைப் பொறுத்தளவில் அவர்களின் விளையாட்டுத் திறன் குறைவடைந்து வருகிறது. அவர்கள் விளையாட்டில் நல்ல நிலைக்கு வர வேண்டுமென்றில்லை. ஆனால் ஆரோக்கியமான பிள்ளையாக வரவேண்டும் என்ற நிலை இல்லை. விளையாடுவது இல்லை என்ற நிலை வந்துவிட்டது.  இப்போது செல்லிடப்பேசி என்ற விடயம் வந்துவிட்டது. கேம் என்றால் தொலைபேசையில் விளையாடும் கேம் என்றே நினைக்கிறார்கள்.

கே: தமிழ் சமூகத்துக்கு சாதனை வீராங்கனை என்ற அடிப்படையில் என்ன செய்தியை சொல்வீரக்ள்?

ப: நான் சொல்லுற ஒரே ஒரு விடயம். விளையாட்டுக்கு முக்கியத்துவம் வழங்குங்கள். மற்றைய துறைகள் போன்றே விளையாட்டும் ஒரு துறை. அதனால் எதிர்காலம் இல்லை என்று நினைக்காதிங்க. நான் போட்டிகளில் பங்குபற்றினேன். எனக்கும் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தது. குடும்ப நிலை காரணமாக செல்ல முடியவில்லை. ஆனால் விளையாட்டுகளில் பங்குபற்றிய பலர் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள். நல்ல நிலையிலுள்ளார்கள். தயவு செய்து விளையாட்டுகளில் பங்குபற்றுபவர்களுக்கு நல்ல வாழ்க்கை இல்லை என்ற மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள். எங்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கை உள்ளது விளையாட்டில் உள்ள நாங்கள் நல்லா வருவோம் என்பதே அது. விளையாட்டில் உள்ளவர்கள் படிக்கமாட்டான் என்பதை தாண்டி நல்ல ஆளுமை உள்ளவனாக அவன் வருவான். தலைமத்துவ பண்பு அவனுக்கு நிறையவே கிடைக்கும். அதனால் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருப்பார்கள். ஒரு சமுதாயத்தில் வாழ விளையாட்டு கற்றுக்கொடுக்கிறது. விளையாட்டின் வெற்றி தோல்விகளை பார்த்து வாழ்க்கையை கற்றுக்கொண்டு நல்ல முறையில் வாழ்க்கையை கொண்டு செல்ல முடிகிறது.  அனைவரும் விளையாட்டை மதித்து, அதற்க்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்ற கோரிக்கையை நான் உங்களிடம் முன் வைக்கிறேன்.

ஒரு சாதனைப் பெண்ணின் கடந்த காலம், ஏன் நிகழ்காலம் கூட எவ்வாறு காணப்படுகிறது என்பதனை எம்மால் அறிய முடிகிறது. விளையாட்டுக்கும், உள்ளூர் வீர வீராங்கனைகளுக்கும் ஆதரவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் அரசை நம்ப முடியாது. இவ்வாறான வீராங்கனைகளுக்கு நாமாக முன்வந்து உதவ வேண்டும். அவருக்கு என்ன தேவை என்பதனை கணித்து அவருக்கான சிகிச்சைகளை வழங்க வேண்டும். சர்வதேச ரீதியில் அவரை பங்குபற்ற வைக்கவேண்டும். அவர் கூறுவது போல் இரண்டு ஆண்டுகளில் தன் மனநிலை உடைந்து விடும் என கூறினாலும் அத்தனையும் சீர் செய்ய முடியும். இந்த கட்டுரையை சமூக சேவையாளர்களுக்கும், செல்வந்த விளையாட்டு பிரியர்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும். அவர்கள் மூலமாக இவருக்கு உதவலாம்.

இவர் போன்ற பலர் வெளி வராதவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் இனி வெளிவருவார்கள். வாழ்வாதரம், மருத்துவம் என பல வழிகளில் பலரும் பலருக்கும் உதவி வருகிறார்கள். அதே போன்று விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு உதவுங்கள். நல்ல மைதானங்களை உருவாக்கி கொடுங்கள். எங்கள் வீர வீராங்கனைகள் ஒலிம்பிக் வரை சென்று பதக்கம் வெல்வார்கள். எம்மவர்களை நாமே வளர்ப்போம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X