2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தர்ம முழக்கத்தில் முழங்கிய முழங்காவில்

குணசேகரன் சுரேன்   / 2017 ஜூன் 05 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


தர்ம முழக்கம் கிரிக்கெட் போட்டியில், விக்னேஸ்வரன் பிரணவனின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் கைகொடுக்க, தர்மபுரம் மத்திய கல்லூரியின் தொடர் வெற்றியை தடுத்து நிறுத்தி, முதலாவது வெற்றியை, முழங்காவில் மகா வித்தியாலயம் சுவைத்தது.   

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் மகா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் கிரிக்கெட் அணிகளுக்கிடையில், தர்ம முழக்கம் என்னும் இரண்டு நாட்களைக் கொண்ட, மட்டுப்படுத்தப்படாத ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டி, 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது.   

2015, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில், தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டுக்கான போட்டி, தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (02) ஆரம்பமாகியது.  

நாணயச் சுழற்சியில் வென்ற முழங்காவில் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தர்மபுரம் அணி, பிரணவனின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் நிலைதடுமாறியது. தர்மபுரம் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில், அன்ரனி குவைரோ லோகேந்திரன் 35 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், பிரணவன், 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.   

தொடர்ந்து, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய முழங்காவில் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், கிருஷ்ணகுமார் 30, பிரணவன் 29, கஜன் 29, டிலக்சன் 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், சயந்தன், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

55 ஓட்டங்கள் பின்னிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய தர்மபுரம் அணி, மீண்டும் பிரணவனின் பந்துவீச்சில் தடுமாறி, 81 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தின், நிதுசன் 24 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், பிரணவன், நிசாந்தன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.   
பதிலுக்கு, 27 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய முழங்காவில் அணி, 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.   

இந்த வெற்றியுடன், தர்மபுரம் அணியின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்திய முழங்காவில் அணி, தமது வெற்றி எண்ணிக்கையையும் ஆரம்பித்துள்ளது.   

முழங்காவில் அணியின் பயிற்றுவிப்பாளராக சற்குணராஜா துஷ்யந்தன் செயற்பட்டார். தேசிய பாடசாலையான முழங்காவில் மகா வித்தியாலயம், வளங்கள் என்ற ரீதியில் பின்தங்கிய இருக்கும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கான வளங்களும் மிகக்குறைந்தளவே கொண்டுள்ளது. குறைந்த வளங்களைக் கொண்டு, வீரர்களைத் தயார்படுத்தி போட்டியொன்றில் வெற்றியையும் பெற்றுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .