2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மாவட்டச் சம்பியனாகிய ஆனைக்கோட்டை யூனியன்

குணசேகரன் சுரேன்   / 2019 மார்ச் 31 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய அணியாகவிருந்து சிறிது சிறிதாக வளர்ந்து வந்து, பெரிய அணிகளுக்கெல்லாம் சவாலை வழங்கி, இறுதிப் போட்டியில் வதிரி டயமன்ஸை வீழ்த்தி யாழ்ப்பாணம் கால்பந்தாட்ட லீக்கின் 75 ஆவது ஆண்டு நிறைவு கால்ப்பந்தாட்டத் தொடரில் ஆனைக்கோட்டை யூனியன் சம்பியகாகியது.

யாழ்ப்பாண மாவட்ட லீக்குகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட அணிகளுக்கிடையில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்ட இத்தொடரில் 12 அணிகள் பங்குபற்றி, அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு முதற்சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றது.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன. காலிறுதிப் போட்டிகளிலிருந்து குருநகர் பாடுமீன், டயமன்ஸ், ஆனைக்கோட்டை யூனியன், இளவாலை யங்ஹென்றிஸ் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

முதலாவது அரையிறுதி போட்டியில் டயமன்ஸ், 7-5 என்ற கோல் கணக்கில் பாடுமீனை வீழ்த்தியும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் யங்ஹென்றிஸை ஆனைக்கோட்டை யூனியனும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.

நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆரம்பம் முதல் ஆனைக்கோட்டை யூனியன் மிகச் சிறப்பாக விளையாடி, அனுபவ டயமன்ஸை திக்குமுக்காடச் செய்தது. டயமன்ஸின் நட்சத்திர வீரர் பிறேம்குமாரை முன்னேறவிடாமல் பார்த்துக் கொள்வதில் மிகவும் சிறப்பாகச் கவனம் செலுத்தி, அவ்வணியின் கோல் முனைப்பையும் தடுத்ததுடன், மறுமுனையில், கோல் பெறுவதை முனைப்பாகக் கொண்டு செயற்பட்டது.

எனினும், கோல் பெறஅருமையாகக் கிடைத்த மூன்று சந்தர்ப்பங்களை ஆனைக்கோட்டை யூனியன் தவறவிட்டபோதும், போட்டியின் 21ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்ற அவ்வணியின் சாந்தன், தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.  அதே உத்வேகத்துடன் அவ்வணியின் ஆட்டம் மேலும் வளப்பெற்றது. 34ஆவது நிமிடத்தில் அவ்வணியின் அபிசேக் ஒரு கோலைப் பெற்று தமதணியின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார். அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அவ்வணியின் மதியராஜ் பெற்ற கோலுடன் 3-0 என்ற கோல் கணக்கில் ஆனைக்கோட்டை யூனியன் முன்னிலை பெற்றதுடன் முதற்பாதி நிறைவுக்கு வந்தது.

எதிர்பாராத இந்த மூன்று கோல்களால் அதிர்ச்சியடைந்த டயமன்ஸ், இரண்டாம் பாதியில் பதில் கோல் பெறும் முயற்சியில் ஈடுபட்டது. பிறேம்குமார் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய பந்தொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. தொடர்ந்தும் கோல் பெறும் சந்தர்ப்பங்கள் இரண்டு டயம்ஸுக்கு கிடைத்தும், ஆனைக்கோட்டை யூனியனின் கோல் காப்பாளரின் அபாரமான தடுப்பால் அது நிறைவேறாமல் போனது. இந்நிலையில், 71ஆவது நிமிடத்தில் டயமன்ஸுக்கு கிடைத்த பெனால்டியையும் ஆனைக்கோட்டை யூனியனின் கோல் காப்பாளர் தடுத்திருந்தார்.

இவ்வாறாக டயம்ஸின் கட்டுப்பாட்டில் இரண்டாம் பாதி இருந்தபோதும், அடுத்த நான்காவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற ஆனைக்கோட்டை யூனியனின் சயந்தன், தனதணிக்கு 4-0 என்ற முன்னிலையை வழங்கினார். அடுத்த எட்டாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியொன்றை பிறேம்குமார் கோலாக்கியதோடு, போட்டியின் இறுதி நிமிடங்களில் டயமன்ஸ் மேலுமொரு கோலைப் பெற்றபோதும் இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்ற ஆனைக்கோட்டை யூனியன் சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X