2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். மத்திய கல்லூரியை வென்றது சென். ஜோன்ஸ்

குணசேகரன் சுரேன்   / 2019 மார்ச் 17 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்தோனிப்பிள்ளை சுகேதன், அணித்தலைவர் முர்பின் அபிநாஸ் ஆகியோரின் அரைச்சதங்கள், தெய்வேந்திரம் டினோசனின் இறுதிநேர அதிரடி என்பன கைகொடுக்க, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியுடனான 50 ஓவர்கள் கொண்ட போட்டியை சென். ஜோன்ஸ் கல்லூரி வென்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று  நடைபெற்ற இரண்டு அணிகளுக்கும் இடையிலான 17ஆவது 50 ஓவர்கள் கொண்ட போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தலைவர் செல்வராசா மதுசன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, முதல் விக்கெட்டை 24 ஓட்டங்களுக்குள் இழந்தாலும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் எச். சாரங்கன், மூன்றாமிலக்க வீரர் பி. இந்துஜன் மூலம் ஓட்டங்களைச் சேர்த்தது.

இந்துஜன் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தொடர்ந்து அணித்தலைவர் மதுசன் (15) உட்பட இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. அதன்பின்னர் நிதுசன், சாரங்கனுடன் ஜோடி சேர்ந்தார். அந்த இணை அணியை சற்று பலப்படுத்தியபோது, சாரங்கன் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்வரிசையில் களமிறங்கிய குகசதுஸ் 26, ராஜ்கிளின்டன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். நிதுசன் 32 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க, 46 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பெற்றது. பந்துவீச்சில், அன்ரன் அபிஷேக் 4, அன்ரன் சரண் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 222 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி, முதல் விக்கெட்டை ஒன்பது ஓட்டங்களுடன் இழந்தது. எனினும், அதன் பின்னர் களம்நுழைந்த அந்தோனிப்பிள்ளை சுகேதன் ஒரு பக்கத்தில் நிலைத்தாடினார். சௌமியன் 18, ஹேமதுசாந்த் இரண்டு ஓட்டங்களுடன் வெளியேறினர். சுகேதன் அரைச்சதம் கடந்து 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களம்நுழைந்த அணித்தலைவர் முர்பின் அபினாஸ், ஒருபக்கத்தில் நிலைத்து பொறுப்புடன் ஆடினார். அவருடன் இணைந்த கரிசன் அணியை வெற்றிநோக்கி அழைத்துச் சென்றனர். கரிசன் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அபினாஸ் 53 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர் போட்டியில் விறுவிறுப்பு அதிகரித்தது. ஒரு பக்கத்தால் விழும் விக்கெட்டை பாதுகாத்து வெற்றியைப் பெறவேண்டிய நிலைக்கு சென்.ஜோன்ஸ் தள்ளப்பட, அதனை தனியாளாக கையில் எடுத்த தெய்வேந்திரம் டினோசன், அடுத்தடுத்து இரண்டு ஆறு ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை பதற்றமில்லாமல் பெற்றுக்கொடுத்தார். டினோசன் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். 48 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை சென். ஜோன்ஸ் கல்லூரி அடைந்திருந்தது. பந்துவீச்சில், செல்வராசா மதுசன் 3, விதுசன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக அந்தோனிப்பிள்ளை சுகேதன் தெரிவானார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .