2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வதிரி டயமன்ஸ், பலாலி விண்மீன் அணிகள் வெற்றி

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ். மாவட்ட கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான 9 பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளில், வதிரி டயமன்ஸ், பலாலி விண்மீன் அணிகள் வெற்றிபெற்றன.

உரும்பிராய் சென். மைக்கல் விளையாட்டுக் கழகம், யாழ். மாவட்ட கழகங்களுக்கிடையில், அணிக்கு 9 பேர் கொண்ட கால்பந்தாட்டத் தொடரை, உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடத்தி வருகின்றது.

முதற்சுற்றுப் போட்டிகள் நொக்கவுட் முறையில் நடைபெற்று, அதிலிருந்து 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்று, காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. காலிறுதிப் போட்டிகளில் இருந்து வதிரி டயமன்ஸ், பாசையூர் சென். அன்ரனீஸ், நாவாந்துறை சென். நீக்கிலஸ், பலாலி விண்மீன் அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றன.

அரையிறுதிப் போட்டிகள் லீக் முறையில் நடத்தப்படுகின்றன.

வதிரி டயமன்ஸ் வெற்றி

முதலாவது லீக் அரையிறுதிப் போட்டி, சனிக்கிழமை (02) இரவு நடைபெற்றது. இதில் பாசையூர் சென். அன்ரனீஸ் அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணி மோதியது.

போட்டியின் தொடக்கம் முதல் டயமன்ஸ் அணி, போட்டியைத் தம்பக்கம் வைத்திருந்தனர். அதன் பயனாக முதலாவது கோலை டயமன்ஸ் அணி அடித்தது. 2 ஆவது பாதியிலும் டயமன்ஸ் அணியின் ஆதிக்கம் நிலைபெற, இரண்டாவது கோலையும் டயமன்ஸ் அணி அடித்தது.

எனினும், இறுதி நேரத்தில் விடாது போராடிய சென். அன்ரனீஸ் அணி, ஒரு கோலைப் போட்டு, போட்டியை உற்சாகமாக்கியது. எனினும், அதன் பின்னர் சுதாகரித்தாடிய டயமன்ஸ் அணி, போட்டியைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். முடிவில் வதிரி டயமன்ஸ் அணி, 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

பலாலி விண்மீன் வெற்றி

இரண்டாவது லீக் அரையிறுதிப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை (03) இரவு நடைபெற்றது. இதில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணி மோதியது.

போட்டி ஆரம்பமாகி 5 ஆவது நிமிடத்தில் நீக்கிலஸ் அணி, முதல் கோலைப் பதிவு செய்து, போட்டியைத் தம்பக்கம் மாற்றியது. அந்த நிலையை மாற்றுவதற்கு பலாலி அணியினர் பலமுறை முயன்றும், அது பயனளிக்கவில்லை. முதற்பாதி, அந்தக் கோலுடன் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியில், நாவாந்துறை சென். நீக்கிலஸ் அணி தடுப்பாட்டம் ஆடியது. இதனால், எதிரணியின் தடுப்புகளை உடைத்து கோல் அடிப்பதில், பலாலி அணி மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டது. இருந்தும் அதற்கான வாய்ப்பு, போட்டி முடிவடைய 2 நிமிடங்கள் இருக்கும் போது, பலாலி அணிக்குக் கைகூடியது. பலாலி அணி தனது முதலாவது கோலை அடித்தது.

போட்டி நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தன.

வெற்றியாளரைத் தீர்மானிக்க, சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. இதில் பலாலி விண்மீன் அணி 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X