2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

1983 கறுப்பு ஜூலை: களம்

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஜூன் 19 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 97)

இலங்கையின் வரலாறு  

இலங்கையின் இன முரண்பாடு, வரலாற்று ரீதியில் எப்போது தோன்றியது என்பது தொடர்பிலான குறிப்பிடத்தக்க ஆய்வுகளேதுமில்லை. அதற்குக் காரணம் இலங்கையின் வரலாறு பற்றியும் இங்கு வாழ்ந்த மக்கள் பற்றியுமான ஆய்வுகளே இன்னமும் முழுமையாகச் செய்யப்படவில்லை எனலாம்.   

ஆனால், நாம் பொதுவாக அறிந்த, இலங்கையில் கற்பிக்கப்படும் வரலாறு என்பது மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, விஜயனுடைய வருகையோடு இலங்கையின் வரலாற்றை ஆரம்பிக்கிறது.  

வரலாறுகள் என்பவை, ஏதோவொரு புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால், அந்தப் புள்ளியை தேர்ந்தெடுப்பதற்கு வலுவான காரணம் ஒன்று இருக்க வேண்டும்.   

விஜயனது வருகையோடு, இலங்கையின் வரலாற்றை எழுதுவதானது, ஏறத்தாழ ஆங்கிலேயர்களின் வருகையோடு அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய வரலாறுகளை எழுதுவதைப் போன்றது. அது, அதற்கு முன், அங்கு வாழ்ந்த மக்களைச் சத்தமின்றிப் புறக்கணித்துவிடும் செயலாகிறது. நிற்க.   

துட்டகைமுனு எதிர் எல்லாளன்   

விஜயனின் வருகையோடு தொடங்கும் இலங்கை வரலாறு, பின்னர் அசோகனின் மகன் மஹிந்தவின் வருகையோடு, இலங்கையின் தேரவாத பௌத்த வரலாறுரைக்கும் பணியைச் செவ்வனே செய்கிறது.  

உண்மையில் பாளி மொழியில் எழுதப்பட்ட முக்கிய இலக்கியங்களில் மகாவம்சம் ஒன்று என்பது பாளி மொழி அறிஞர்களின் கூற்று. வரலாற்றுக் காலம் முதற்கொண்டு நடந்தவற்றை, 500 வருடங்களின் பின், மஹாநாம என்ற பௌத்த துறவியால் பாளி மொழியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் மகாவம்சம், இலங்கையை ஆண்டதாக அது சுட்டும் அரசர்கள் அனைவரிலும், துட்டகைமுனுவை உயர்த்தி நிற்கிறது.  

மகாவம்சத்தை ஒரு காவியமாகப் பார்த்தால், அதன் காவிய நாயகன் துட்டகைமுனு (அல்லது துட்டகாமினி அல்லது துட்டுகமுனு). துட்டகைமுனு உயர்த்தப்படுவதற்கான காரணம் என்னவென்று ஆராய்கையில், மகாவம்சம் சுட்டும் அத்தனை அரசர்களிலும், ‘அந்நியன்’ என்று சுட்டப்படும் ஓர் அரசனோடு போராடி, அவனைத் தோற்கடித்து, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய அரசன் துட்டகைமுனு என்ற விடயம் முன்னிலைப்படுத்தப்படுவதை அவதானிக்கலாம்.   

துட்டகைமுனு தோற்கடித்ததாகச் சொல்லும் மன்னன் சோழப் பரம்பரையில் வந்த, ‘மனுநீதிச் சோழன்’ என்று விளிக்கப்படும் அநுராதபுரத்தை கிறிஸ்துவுக்கு முன் 205 முதல் 161 வரை ஆண்ட, எல்லாளன் (சிங்களத்தில் எலாற) மன்னனாவான்.  

 எல்லாளனை நீதிதவறாத, நல்லாட்சி புரிந்தவன் என்றே மகாவம்சமும் சுட்டுகிறது என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். ஆனாலும், அவன் அந்நியனாகவே பார்க்கப்படுகிறான்.   

இன்றுவரை, இலங்கையின் வேறெந்தவொரு மன்னனும் கொண்டாடப்படாத அளவுக்கு துட்டகைமுனு கொண்டாடப்பட, எல்லாளன் மன்னனை தோற்கடித்தமை முக்கிய காரணமாகிறது.   

2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், மஹிந்த ராஜபக்ஷவை துட்டகைமுனுவுக்கு ஒப்பிட்டவர்கள் அதிகம். இதன் நுண்ணரசியல் வெறும் யுத்தவெற்றி மட்டுமல்ல; துட்டகைமுனு ‘அந்நியன்’ என்று அவர்கள் சுட்டும் தமிழ் மன்னனைத் தோற்கடித்து, மீண்டும் நாட்டைக் கைப்பற்றினான் என்பதுதான்.   

யார் ‘அந்நியன்’ என்ற கேள்வி மிகச் சிக்கலானது. பாரதக் கண்டத்தின் கிழக்கிலமைந்த வங்காளத்திலிருந்து வந்த விஜயனதும் அவனது தோழர்களதும், விஜயன் மணந்து கொண்ட தென்பாரதத்தின் மதுரையிலிருந்து வந்த இளவரசியினதும் அவளது தோழிகளதும் வழிவந்தவர்கள் ‘அந்நியர்களா’? பூமிபுத்திரர்களா? பின்னர் தென்பாரதத்திலிருந்து வந்து இலங்கையை ஆண்டவர்கள் ‘அந்நியர்களா’?   
இந்த வரலாற்றுக் கேள்விகள், ஒரு புறமிருந்தாலும் இதன் முக்கியத்துவம் என்னவெனில், இந்த வரலாறு இன்றுவரை இலங்கை மக்களுக்கு போதிக்கப்படுகிறது. அதன்வழி, மகாவம்ச மனநிலையொன்று இங்கு கட்டியமைக்கப்படுகிறது.   

இந்த மண் சிங்கள-பௌத்தர்களது மண்; பெளத்தத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு, இங்கு வாழும் ஒவ்வொரு சிங்கள பௌத்தனுக்கும் உரியது என்ற மனநிலையது. அது, சிங்கள - பௌத்தரல்லாதோர் மீதான ஒருவகை அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கிவிடுவதோடு, ஒருவகை மேலாதிக்க மனப்பாங்கையும் தோற்றுவித்துவிடுகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான முக்கிய அடிப்படைக் காரணங்களுள் இதுவும் ஒன்று என்பது மறுக்க முடியாதது.  

மகாவம்ச மனநிலை   

தமிழ் அரசியல் தலைமைகள், மகாவம்சம் கட்டியமைத்த வரலாற்றைத் தொடர்ந்து சவாலுக்குட்படுத்தி வந்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. 1939 இல் ஜீ.ஜீ. பொன்னம்பலம், நாவலப்பிட்டியில் உரையாற்றும்போது, “இங்கு சிங்கள மன்னர்கள் என்று சுட்டப்படும் காசியப்பன், பராக்கிரமபாகு உட்பட பலரும் உண்மையில் தமிழர்களே” என்று பேசியிருந்தமை அன்று பெரும் பரபரப்பையும் நாவலப்பிட்டி, பசறை, மஸ்கெலிய பிரதேசங்களில் கலவரங்களையும் ஏற்படுத்தியிருந்தது.   

உண்மையில், இவர்கள் தமிழர்கள்தான் என்று நிறுவுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. இங்கு, இலங்கையின் வரலாறு, ஆழமாக ஆராயப்படவில்லை; அல்லது ஆராயப்பட வேண்டிய தேவை தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று சொல்வதுதான் பொருத்தமானது.   

இந்த மகாவம்ச வழிவந்த மனநிலையைப் புரிந்து கொள்வது, இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றைப் புரிந்துகொள்ள இன்றியமையாததாகிறது. சிங்கள-பௌத்தத்தைப் புரிந்து கொள்ளாமல், இலங்கை அரசியலைப் புரிந்துகொள்ள முடியாது.இலங்கை அரசியலைப் புரிந்து கொள்ளாமல், இலங்கை இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ளவோ, அதற்கான தீர்வுகளைத் தேடவோ முடியாது.   

1958 ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றபோது, ஓர் அநாமதேயத் துண்டுப்பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டதாக ‘அவசரநிலை - 58’ (ஆங்கிலம்) என்ற டாஸி விட்டாச்சியின் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த துண்டுப் பிரசுரத்தில், “எச்சரிக்கப்படுகிறீர்கள்! மரணம் உங்கள் வாசல்படியில் நிற்கிறது.

இப்பொழுது எழுந்துகொண்டு, தமிழர்கள் மற்றும் அந்நியர்களான முஸ்லிம்கள், மலாயர்கள், பறங்கியர்கள் ஆகியோரிடமிருந்து விடுதலை பெறுவதற்கான போரிலே பங்கு பெறுங்கள். அவர்கள் இலங்கையில் இருக்க விரும்பினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குச் செல்லலாம்” என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் அந்த மகாவம்ச மனநிலை தோற்றுவித்திருக்கும் ஐயம் நிறைந்த, பாதுகாப்பற்ற, மேலாதிக்க மனநிலை.   

இதையொத்த மனநிலை 1983 இலும் இலங்கையில் காணப்பட்டது. ஜே.ஆர், பிரித்தானிய பத்திரிகைக்கு வழங்கிய ‘தமிழர்களைப் பற்றி யோசிக்க முடியாது’என்ற கருத்தாகட்டும், அதையொத்த லலித் அத்துலத்முதலியின் கருத்துகளாகட்டும் அவை, இதே மனநிலையிருந்து வந்தவையாகும்.   

இது, அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல, சாதாரண மக்களிடமும் இருந்த மனநிலை என்பதுதான் இங்கு கவலைக்குரியது. உதாரணமாக, 1983 மே 19 ஆம் திகதி, ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் பிரசுரமான, டி சில்வா என்ற ஒரு வாசகர் எழுதிய கடிதமானது, பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான வழிகளை முன்வைத்தது.  

 அவர் முன்வைத்த வழிமுறையின் சுருக்கமானது: ‘வடக்கு மற்றும் கிழக்கில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட வேண்டும். பொலிஸ் மற்றும் இராணுவப் படைகள் மேலதிகமாக அனுப்பப்பட்டு, பயங்கரவாதிகள் வேட்டையாடப்பட வேண்டும். 

அவர்களைக் கண்டவுடன் சுட வேண்டும். பாரம்பரிய தமிழர் தாயகம் என்று சொல்லப்படும் பிரதேசங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ஈழம்’ என்ற ஒன்று வழங்கப்படாது என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படைகளை வைத்திருப்பதற்கான மேலதிக செலவானது, அங்கு வதிவோரின் மீது விசேட வரியொன்றை விதிப்பதனூடாக ஈடுசெய்யப்படலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோருக்கு எந்த நட்டஈடும் வழங்கக் கூடாது’ என்றவாறாகக் காணப்பட்டது.   

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமல்ல   

இலங்கையில், குறிப்பாக தெற்கில் எவ்வகையான மனநிலை நிலவியது என்பதற்கு இது ஒரு சாட்சி. ஆனால், இங்கு ஒன்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டேயாக வேண்டும். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற கருத்து இங்கு பொருந்தாது. இது தெற்கில் வாழ்ந்த சகல மக்களினதும் மனநிலையல்ல.   

1983 கலவரங்களில் தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் அநேகர் உள்ளனர். தம்முடைய உயிரைக் கூடப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள்.

இத்தகைய சம்பவங்களைப் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே, ஒட்டுமொத்த சிங்கள இனமும் தமிழ் மக்கள் மீது வெறிகொண்டெழுந்தது என்று சொல்வது அபத்தம். ஆனால், ‘தமிழ் வெறுப்பு’ என்பது தெற்கில் மிகப்பெரியளவுக்குப் பரவியிருந்தது என்பது மறுப்பதற்கில்லை.   

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தின் பின்னணியில், இதுபோன்ற கடும் தமிழ் வெறுப்பு மனநிலை இருந்தது. இது ஒரே நாளில் வந்ததல்ல; கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்பட்டது. இதில் இலங்கை அரசியலின் பங்கு முக்கியமானது.   

எந்தவொரு நாட்டிலும் அந்த மக்களின் மனநிலையைக் கட்டமைப்பதில் அரசின், அரச இயந்திரத்தின் பங்கு முக்கியமானது. பல இனங்கள் வாழும் சிங்கப்பூரின் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அங்கு கட்டியமைக்கப்பட்ட மனநிலை முக்கிய காரணம்.  

ஏற்கெனவே திருக்கோணமலை, பேராதனை, வவுனியா என நாட்டின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதான வன்முறைகளும் இனவெறித் தாக்குதலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் 13 இராணுவ வீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நடத்திய தாக்குதலில் பலியாகியிருந்தனர்.   

இலங்கை இனப்பிரச்சினைப் போரிலே, முதன் முதலாக ஒரே தாக்குதலில் இத்தனை இராணுவ வீரர்கள் பலியாகியது இதுவே முதல்முறை. 

ஆகவே, இது மக்கள் மத்தியில் பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை அரசாங்கமும் அதிகார மட்டமும் அறிந்தே இருந்தது.   

குறித்த தாக்குதலின் பின்னர், திண்ணைவேலியில் இராணுவம் புகுந்து, அப்பாவி மக்கள் மீது, இனவெறித்தாக்குதலை நடத்தியிருந்தது.

கட்டுக்கோப்பாக இருக்க வேண்டிய அரச படைகளே இவ்வாறு வெறியாட்டத்தில் ஈடுபட்டு, அப்பாவி மக்களைக் கொன்று குவிக்குமானால், நாட்டிலுள்ள ஏனைய காடையர்களும் இனவெறிக் கும்பலும் அமைதியாக இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.   

அதனால் மரணித்த இராணுவ வீரர்களின் இறுதிக் கிரியைகள் கலவரங்களைத் தோற்றுவிக்கும் என்ற அச்சம் பலருக்கும் இருந்தது. ஆகவே, இறுதிக் கிரியைகள் எங்கே நடத்தப்பட வேண்டும் என்பது கவனமாகத் தீர்மானிக்கப்பட வேண்டியதொரு விடயமாகியது.

இதுபற்றி, பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹ தன்னுடைய நூலொன்றில் குறிப்பிடும் போது, ‘இடம்பெற்ற கலவரங்களுக்கு இறுதிக் கிரியைகளை முகாமைசெய்த விதமும் முக்கிய காரணமாகிறது. உடல்கள் யாழ்ப்பாணத்திலேயே வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டிருக்கலாம். இது பாதிப்புகளை மிகக்குறைந்த அளவில் வைத்திருந்திருக்கும். 

ஆனால், மனிதாபிமான ரீதியில் பார்த்தால், இறந்த இராணுவத்தினரின் உறவினர்களைப் பொறுத்தவரையில், இது முறையானதொன்றாக இருந்திருக்காது. அத்தோடு இராணுவமும் இதை ஏற்றுக் கொண்டிருக்காது. அடுத்ததாக இராணுவ வீரர்களின் உடல்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், இதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறையவிருந்தன. ஆகவே, பெரியளவிலான இறுதிக்கிரியைகள் 1983 ஜூலை 24 ஆம் திகதி கொழும்பு, பொது மயானத்தில் நடத்தப்படத் தீர்மானிக்கப்பட்டது’ என்கிறார்.   

இந்த முடிவு பற்றி, ‘1983 இனக்கலவரம்’ பற்றிய நூலொன்றில் குறிப்பிடும் ரீ.டீ.எஸ்.ஏ. திசாநாயக்க, இறந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் உடல்கள் முன்பு அவர்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அங்கும், அதனையண்டிய பிரதேசங்களிலும் கலவரங்கள் உண்டாகியிருந்தன.

ஆகவே, 13 உடல்களை, 13 வேறுபட்ட பிரதேசங்களுக்கு கொண்டு சென்று, அந்த 13 இடங்களிலும் 13 கலவரங்கள் உருவாகினால், அதைக் கட்டுப்படுத்துவதிலும், ஒரே இடத்தில் இறுதிக்கிரியைகளை நடத்தினால், அங்கு கலவரம் உருவாகினால் அதைக் கட்டுப்படுத்துவது சுலபம். மேலும் கொழும்பில் பாதுகாப்பும் அதிகம்; ஆகவே, அரசாங்கம் கொழும்பில் இறுதிக்கிரியைகளை வைக்கத் தீர்மானித்தது சரிதான்’ என்று ஜே.ஆர் அரசாங்கம் சார்பான கருத்தை முன்வைக்கிறார்.   

எது எவ்வாறிருப்பினும் குறித்த இறுதிக் கிரியைகளின் பின்னர் கலவரம் ஒன்றும், தமிழ் மக்கள் மீதான இனவெறித் தாக்குதலும் ஏற்படுவதற்கான உச்ச வாய்ப்புகள் இருந்தமையை அரசாங்கம் அறிந்திருந்தது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அதைத் தடுக்க அரசாங்கம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது என்பதுதான் இங்கு கேள்விக்குறி.   

கொழும்பு, பொது மயானத்தை ஒட்டிய பிரதேசங்களில் ஆரம்பமான 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் தீச்சுவாலையாக, நாட்டின் பலபகுதிகளுக்கும் பரவியது. இது, உணர்ச்சிப் போக்கில் நடந்த கலவரமாக அன்றி, மிகவும் திட்டமிட்ட முறையில், தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதொரு இனவழிப்பாகவே நடந்தேறியது.   

இதில் கொடுமை என்னவென்றால், மிகப் பெரியளவில் பாதிக்கப்பட்டது, கொழும்பிலும் தெற்கிலும் வாழ்ந்த தமிழர்கள். இவர்கள், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழர்கள் அல்ல; மாறாகப் பெருமளவில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்த தமிழர்களாவார்.  
(அடுத்த வாரம் தொடரும்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .