2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

2017: இதுவும் கடந்து போகும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2017 டிசெம்பர் 28 , மு.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலம், கடந்த காலத்தின் தொகுப்பல்ல; நிகழ்காலம் என்றென்றைக்குமானதல்ல; எதிர்காலம் எதிர்பாராத புதிர்களைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. கடந்தகாலம் பற்றிய தெளிவு நிகழ்காலத்தை வடிவமைக்கப் பயனுள்ளது. அது எதிர்காலத்தைத் திட்டமிட உதவும். இதனாலேயே கடந்தகாலம் எப்போதும் முக்கியமான திசைவழிகளைக் காட்டுகிறது. கடந்து போகும் காலத்தைக் கணிப்பில் எடுப்பது எதிர்காலத்தைக் கணிக்க உதவும்.   

கடந்து போகும் இவ்வாண்டை மீளத் திரும்பிப்பார்த்தால், குறிப்பான சில அம்சங்களை நோக்கவியலும். 

அவற்றில் சில, வெறும் நிகழ்வுகளாக இருந்துள்ளபோதும், அவற்றின் உலகளாவிய தாக்கம் பெரிது. அவ்வாறான சிலவற்றை இக்கட்டுரை நோக்க விளைகின்றது.   
இவ்வாண்டின் மிக முக்கியமான நிகழ்வு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், தனது ஆட்சிக்காலத்தின் முதலாவது ஆண்டில், தனது நடவடிக்கைகள் மூலம், புதுவிதமான அமெரிக்க எதிர்காலத்தையும் உலகு பற்றிய அமெரிக்காவின் பார்வையில் பாரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி பலரும் எதிர்பாராதது. அமெரிக்கா பற்றிய பிம்பத்தையும் அதன் பெயரில் ஆண்டாண்டு காலமாய் வலியுறுத்திய அறவிழுமியங்களையும் ட்ரம்பின் வெற்றி முற்றாக நொருக்கிவிட்டது.

 ட்ரம்பின் வருகை, அமெரிக்காவின் ஏகாதிபத்திய முனைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. முன்னைய அமெரிக்க ஜனாதிபதிகள் செய்யத் தயங்கியவற்றைச் செய்யக்கூடியவர் என டொனால்ட் ட்ரம்பைப் பற்றி எழுப்பப்பட்டுள்ள பிம்பம் உண்மையானது என்பதை, இஸ்‌ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை, இஸ்‌ரேலின் தலைநகர் டெலவீவிலிருந்து ஜெருசலேத்துக்கு மாற்றுவதற்கு எடுத்த முடிவின் மூலம் நிரூபித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான பாதையை நோக்கிய பயணத்துக்கான அறிவிப்பாகும்.   

இதேவேளை, இவ்வாண்டு முன்னெப்போதும் இல்லாதளவு அமெரிக்காவின் உலகச் செல்வாக்கு சரிவடைந்துள்ளது. 

ரஷ்யாவுக்கெதிரான பொருளாதாரத் தடைகளும் சவூதி அராபியாவுடன் அதிகரித்துள்ள நெருக்கமும் தென்சீனக் கடல் அலுவல்களில் சீனாவை ஆத்திரமூட்டலும் வடகொரியா மீது யுத்த மிரட்டலும் அதன் குறிகாட்டிகள்.

 உலகப் பொலிஸ்காரனாகவும் அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகவுமிருந்த அமெரிக்கா, அத் தகுதியை மெதுமெதுவாக இழக்கிறது என்பதை அமெரிக்காவின் கடந்தாண்டுகால நடத்தை கோடிட்டுக்காட்டியுள்ளது. இன்று, அமெரிக்கா வேகமாக உந்தும் போர் விருப்பு, இயலாமையின் பாற்பட்டதே.   

இங்கு கவனிக்க வேண்டிய விடயமொன்றுண்டு. 9/11க்குப் பின்பான அமெரிக்க, அமெரிக்கச் சார்பு மேற்குலக நடத்தையின், பிரதான சமூகப் போக்குகளாக வெளிப்பட்டுள்ள இரண்டு பண்புகளில் ஒன்று, அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளை நிறவாத அரசியல் சிந்தனையின் எழுச்சி; மற்றையது, இஸ்லாமியப் பகை. 

இரண்டும், நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்குலகைப் பாசிசத்தை நோக்கித் தள்ளியுள்ளன. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸில் மரியான் லெ பான், பிரித்தானியாவில் நைஜல் பராஜ் ஆகியோரின் எழுச்சிக்கு உதவிய வெள்ளை நிறவெறியும் வந்தேறுகுடிகளுக்கு எதிரான கருத்துருவாக்கமும் நெதர்லாந்து, ஒஸ்ற்றிரியா, டென்மார்க் ஆகிய நாடுகளின் மையமான அரசியல் சிந்தனைகளாக உருவெடுத்துள்ளன. 

இதன் உச்சமான நிகழ்வுகள், அமெரிக்காவில் அரங்கேறுகின்றன. இவ்வருட நடுப்பகுதியில் அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தின் சார்லட்வில்லில் சமத்துவத்தையும் சமூகநீதியையும் வேண்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, வெள்ளை நிறவெறிக் கும்பல் நிகழ்த்திய மூர்க்கத்தனமான தாக்குதல், அமெரிக்காவில் நீக்கமற நிறைந்திருந்தபோதும் ஜனநாயக முகமூடியால் மூடி மறைக்கப்பட்டு வந்த நிறவெறியை, துவேசத்தை பொதுவெளிக்கு கொணர்ந்து சேர்த்தது.

கெடுபிடிப்போருக்குப் பிந்தைய, உலக ஒழுங்கு ஜனநாயகம் என்றால் அமெரிக்கா, அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என்று கட்டமைக்கப்பட்ட கற்பிதங்கள் கட்டவிழும் காலமதில், ஜனநாயகமும் விலக்கல்ல, அமெரிக்காவும் விலக்கல்ல என்பதை 2017 உரத்துச் சொல்லிச் செல்கின்றது. 

இவ்வாண்டு ஸ்பெய்னின் பகுதியாகவிருந்து கட்டலோனியா பிரிந்து போவதற்காக வாக்களித்தமையானது ஐரோப்பாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு பிரிந்து போவதற்கான உரிமை தொடர்பிலான நியாயங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. 
அதேவேளை, கட்டலோனியத் தனிநாட்டை கோரிய தேசியவாதிகளால், மக்கள் வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற பின்னர், அதை அடுத்த தளத்துக்கு நகர்த்த இயலாமல் போனதையும் இவ்வாண்டு நாம் கண்டோம். 

அவ்வகையில், தேசியவாதிகள் எவ்வாறு விடுதலைப் போராட்டங்களில் தவறிழைக்கிறார்கள் என்பதையும் சுயநிர்ணய உரிமை என்பது கண்முடித்தனமாகவோ, தேச, தேசிய இனக் கூறுகளின்மேல் அல்லது இனக்குழுக்களின் மேல், அழுத்திச் சுமக்க வைக்கும் ஒன்றல்ல என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது.   

இதேவேளை ஈராக்கின் குர்திஷ்கள் வாழ்கிற பகுதியில் நிகழ்த்தப்பட்ட பொதுசனவாக்கெடுப்பில், தனிநாட்டுக்கு ஆதரவாகக் கிடைத்த பெரும்பான்மை வாக்குகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் மூலோபாய ரீதியிலும் தந்திரோபாய ரீதியிலும் நோக்கப்படாது, தேசியவாத நோக்கில் மட்டும் நோக்கப்படும் விடுதலைப் போராட்டங்களின் ஆபத்துகளையும் சொல்லிச்சென்ற ஆண்டாக இவ்வாண்டைக் கருதலாம்.   

மியான்மாரில் இவ்வாண்டு நடந்தேறிய றோகிஞ்சா முஸ்லிம்கள் மீதான அநியாயங்கள் உலகளாவிய கவனத்தை ஈர்த்தன. றோகிஞ்சா முஸ்லீம்கள் பற்றிச் சொல்லப்படும் கதைகளின் பின்னால் சொல்லப்படாத கதைகள் பலவுண்டு. அங்கு அரங்கேறும் இராணுவ வெறியாட்டமும் இனவழிப்பும் வெறுமனே மதக் காரணங்களுக்காக மட்டும் நிகழவில்லை என்பது வெளிவெளியாகத் தெரியாத உண்மை. அதேவேளை அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற மியான்மார் அரசாங்கத்தின் ஆலோசனைத் தலைவரான ஆங் சான் சூகியின் மௌனம், அமைதி பற்றிய புதிய கேள்விகளை எழுப்பியதோடு உலகமே வேடிக்கை பார்க்க இன்னோர் இனவழிப்புச் சத்தமில்லாமல் நடந்தேறியது.   

ஆசியா மீதான ஆதிக்க ஆவல் கடந்த இரண்டு தசாப்தங்களாக வலுத்துள்ள நிலையில், ஆசியாவின் அதிமுக்கிய கேந்திரமாக வங்காள விரிகுடா மாறி வருகிறது என்பதை இவ்வாண்டு நிகழ்வுகள் எடுத்துக்காட்டியுள்ளன. 

ஒருபுறம் சீனா, ‘ஒருவார்; ஒருவழி’ திட்டத்தின் கீழ், ஆசியாவின் மீதான தனது பொருளாதார நலன்களை உறுதிப்படுத்தும் திட்டங்களை முன்மொழிந்தது. 

மறுபுறம் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகியன ஒன்றிணைந்து வங்காள விரிகுடாவுக்கான புதிய அமைப்பாகிய ‘பிம்ஸ்டெக்கை’ வலுப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றன.

சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றைத் தவிர்த்து, ஒரு பொருளாதார மையக் கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், தனது ஆதிக்கத்தைத் தக்க வைக்க, இந்தியா விரும்புகிறது. அதன் ஒரு வழியாக, ‘பிம்ஸ்டெக்கை’ இந்தியா முனைப்புடன் இவ்வாண்டு முன்தள்ளியது.   

உலகமயமாக்கல் இப்போது பாரிய விமர்சனங்களுக்கு உட்படுகிறது. நிதி மூலதனம் வினைத்திறனுடன் செயற்பட இயலாமைக்கு உலகமயமாக்கலே காரணம் எனவும், அத்தோடு சேர்ந்தியங்கும் திறந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் பற்றிய மாற்றுக் கருத்துகள் வலுப்பெற்று உலகப் பொருளாதார ஒழுங்கை மீள்கட்டமைக்கும் நோக்கில் உரையாடல்களும் கொள்கை மாற்றங்களும் அவை சார்ந்த அரசியலும் நகர்ந்துள்ளன. 

இவை இன்னொரு வகையில், உலகமயமாக்கலின் முடிவுக்கு அறைகூவுகின்றன. வேறுவகையில் சொல்லின், கடந்த அரை நூற்றாண்டாக ஏகாதிபத்தியத்தைக் காவிச்சென்றதோடு, அதைத் தக்கவைக்கும் கருவியாகவும் இயங்கியதன் பயன், முடிவுக்கு வந்துள்ளது என்பதை இவ்வாண்டு முன்னிலும் உறுதியாகக் காட்டி நிற்கின்றது.   
இவ்வாண்டின் முக்கியமான பிரதான போக்குகளாக பின்வரும் ஏழு அம்சங்களை நோக்கல் தகும்:   

1. இவ்வாண்டு 45 நாடுகளைச் சேர்ந்த 83 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடினார்கள். இத்தொகையானது 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 70% அதிகமாகும். போர், காலநிலை மாற்றங்கள், இடப்பெயர்வு, இயற்கை வளங்கள் இன்மை என்பன உணவுப் பாதுகாப்பின்மைக்கான பிரதான காரணமாகும்.   

2. முன்னெப்போதுமில்லாதளவுக்கு மிக அதிகமான காபனீரொக்சைட் இவ்வாண்டு வெளிவிடப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் காலநிலை மாற்ற மாநாட்டில் காபனீரொக்சைட் வெளியீட்டைக் குறைக்க நாடுகள் உடன்பட்டபோதிலும் அது நடைமுறையாகவில்லை என்பதை இவ்வாண்டு சுட்டியது.   

3. இவ்வாண்டு ஏராளமான இயற்கை அழிவுகளை உலகம் கண்டது. 1960களுடன் ஒப்பிடும் போது அதிலிருந்து நான்கு மடங்காக இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளன.   

4. உலகின் வளத்தில் மூன்றில் இரண்டு மனிதவளமாக வளர்ச்சியடைந்துள்ளது. அவ்வகையில் உற்பத்திகள் குறைந்து சேவைத்துறையில் வேலைவாய்ப்பே பிரதான போக்காக மாற்றமடைந்துள்ளது.   

5. கல்வி கற்பதற்கான நெருக்கடி இவ்வாண்டு புதிய கட்டத்தை அடைந்தது. கல்வியறிவானது வளர்முக நாடுகளில் ஐந்தில் ஒருவருக்கே கிடைக்கிறது. இதனால் மனிதகுலம் அறிவுப்புல சமூகம் என இவ்வளவு காலமும் அறியப்பட்ட நிலை நெருக்கடிக்காளாகிய ஆண்டு இவ்வாண்டே.   

6. உலகின் சனத்தொகையானது இளவயதுக்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. ஆனால் இதில் 15 தொடக்கம் 24 வயது வரையான வயதையுடையவர்களில் 60% மானவர்களுக்கு வேலையில்லை.   

7. புதுப்பிக்கத்தக்க சக்தி முக்கியமான மாற்றாக உருமாறி மின்சார உற்பத்திக்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுவது இவ்வாண்டு புதிய கட்டத்தை எட்டியது. உலகின் சக்தித் தேவைகளில் ஐந்தில் ஒன்று புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் மூலம் பெறப்பட்டது. இது புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதானமாக சக்தி மூலமாக மாற்றங்கண்டு வருவதை விளக்கியது.   

2017ஆம் ஆண்டு இரண்டு முக்கிய உலக நிகழ்வுகளை மீட்டுப்பார்க்க வைத்த ஆண்டாகும். முதலாவது, கார்ல் மார்க்ஸால் எழுதப்பட்டு 1867இல் வெளியிடப்பட்ட ‘மூலதனம்’ நூல் இவ்வாண்டு தனது 150வது ஆண்டை நிறைவு செய்தது. இதன் முக்கியத்துவம் பல்வகைப்பட்டது.   

மூலதனம், முதலாளித்துவத்தின் துணையுடன் வளர்ந்து, ஏகாதிபத்தியமாக வளர்ந்து, உலகமயமாக்கலின் ஊடு வியாபகமாகி, 2008இல் நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியுடன் கேள்விக்குட்பட்டு, இன்று உலகமயமாதலின் தோல்வியையும் நவதாராளவாதத்தின் நெருக்கடியையும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற காலமொன்றில், எழுதப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பின்னர், ‘மூலதனம்’ மீளவும் மீளவும் வாசிக்கப்படுகிறது.   

உலகமயமாக்கல் தோல்வியடைந்துள்ள இன்றைய சூழலில், கடும் சந்தைப்போட்டி யுகத்தில், மூடிய சந்தையையும் எல்லைகளின் முக்கியத்துவத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிகையில், அதற்கு நேரெதிராக நவதாரளவாதத்தையும் திறந்த எல்லைகளையும் ஜேர்மன் ஜனாதிபதி அஞ்செலா மேர்க்கலும் அவரது ஐரோப்பிய ஒன்றிய சகாக்களும் உயர்த்திப்பிடிக்கையில் ‘மூலதனத்தின்’ ஆழமான புரிதலை நாம் மேற்கொண்டாக வேண்டும். 

இன்னமும் தீராத உலகப் பொருளாதார நெருக்கடியானது முதலாளித்துவத்தின் மீதான கடும் அதிருப்தியையும் பீதியையும் உருவாக்கியுள்ளது. 

வேலையிழப்புகள், சிக்கன நடவடிக்கைகள், சமூகநல வெட்டுகள் என்பன எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இன்றைக்கு உலகெங்கும் உள்ள மக்கள் மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்படுகிறார்கள்.   

இரண்டாவது முக்கிய நிகழ்வு, விளாடிமிர் லெனின் தலைமைதாங்கி வெற்றிகரமாக நடாத்திக் காட்டிய ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு இவ்வாண்டாகும். நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் ரஷ்யப் புரட்சி உருவாக்கிய நம்பிக்கை, போராட்ட உணர்வு, புரட்சிகர வாழ்வு இன்றும் செந்தீயாய் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது. 

அவ்வகையில் இவ்வாண்டு மக்கள் போராட்டங்களால் வெல்லப்பட்ட ஐந்து காத்திரமான போராட்டங்களை இங்கு நோக்கல் தகும்.   

1. உலகிலேயே உலோக அகழ்வை முற்றாகத் தடைசெய்த பெருமை மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரைச் சேரும். 2014ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு விவசாயிகள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியில் தடைகோரிப் போராடி வந்திருக்கிறார்கள். இவ்வாண்டு இப்போராட்டத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.   

2. நான்கு ஆண்டுகால இடைவிடாத போராட்டம், அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு முகங்கொடுத்த போதும் நிறைவில் பிரான்ஸில், பிரான்ஸை மையமாகக் கொண்ட கம்பெனிகள், அவர்களின் துணை நிறுவனங்கள், அவர்களின் ஒப்பந்தக்காரர்கள் ஆகியனவற்றால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களுக்கு, அந்நிறுவனங்கள் பொறுப்புக்கூறவேண்டும் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   

3. கொலம்பியாவில் ஒருபகுதியில் தொலைத்தொடர்பை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக அதன் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர்சியான போராட்டத்தின் விளைவால் அம்முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போரிட்டுப் பெற்ற வெற்றி என்றவகையில் கவனிப்புக்குரியது. கடந்த சில ஆண்டுகளில் 835 சமூகங்கள் உலகளாவிய ரீதியில் தனியார்மயமாகிய சேவைகளை மீண்டும் அரசுடமையாக்கியுள்ளன.   

4. பிரேஸில் நாட்டின் வரலாற்றின் மிகப்பெரிய பொதுவேலைநிறுத்தம் இவ்வாண்டு நடைபெற்றது. 35 மில்லியன் மக்கள் வீதிகளுக்கு இறங்கி அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தென்னமெரிக்காவையே உலுக்கிய ஒரு நிகழ்வாகும்.   

5. இந்தோனேசியாவின் உச்சநீதிமன்றமானது தண்ணீர் அடிப்படை உரிமை என்பதை ஏற்றுக் கொண்டது. அதன்வழி தண்ணீர் தனியார்மயமாக்கலை குற்றமாகக் கண்டதோடு தண்ணீரின் தனியார்மயமாக்கலானது பல ஏழைகளுக்கு தண்ணீரை இயலாமலாக்கியுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளது. 

இது தண்ணீர் பொதுப்பண்டமாகவும் அடிப்படை உரிமையாகவும் தக்கவைக்கும் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். கடந்த சில ஆண்டுகளில் சமூகங்கள் 
உலகளாவிய ரீதியில் 235 இடங்களில் தண்ணீரைத் தனியார்மயமாக்கலில் இருந்து மீட்டு, மக்களின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளனர்.   

இவை நெருக்கடியான காலத்தில் நம்பிக்கையை விதைக்கின்றன. அவ்வகையில் நம்பிக்கையோடு 2018 ஆம் ஆண்டை எதிர் கொள்வோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .