2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2019: இந்தியத் தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்குமா?

எம். காசிநாதன்   / 2018 மே 07 , மு.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல், இப்போது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது.   

மே 12 ஆம் திகதி வாக்குப் பதிவைச் சந்திக்கும் அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில், பாரதீய ஜனதாக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் முக்கிய போட்டியாளர்களாகக் களத்தில் நிற்கின்றன.   

இங்கு, மாறிமாறி ஆட்சியைப் பிடித்து வரும் இரு கட்சிகளுக்கும் போட்டியாக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி முட்டி மோதியது. ஆனால் அந்தக் கட்சிக்கும் - பா.ஜ.கவுக்கும் ஒருமுறை கூட்டணி அமைந்து, ஆட்சி அமைத்த பிறகு, இப்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு விழும் வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்கே போய் விடுகின்றன என்பதுதான் கர்நாடக தேர்தலில் எதார்த்தமான நிலை.  

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் கூட, காங்கிரஸ் ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் பா.ஜ.க 17 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றினாலும், மதச்சார்பற்ற ஜனதாத் தளத்தால் இரண்டு தொகுதிகளில் மட்டுமே, வெற்றி பெற முடிந்தது. அதனால் இன்றைய திகதியில், காங்கிரஸுக்கும் பா.ஜ.கவுக்குமான போட்டிக் களமாக அமைந்துள்ளது.  

காங்கிரஸின் முதலமைச்சராக சித்தாராமையா இருக்கிறார். ஆனால், பிரதமர் நரேந்திரமோடியின் பிரச்சாரம் எல்லாம், ராகுல் காந்தியைத் தாக்கியே அமைந்திருக்கிறது.   

ஆனால், காங்கிரஸ் கட்சியோ பிரதமர் மோடியைத் தாக்கிப் பேசினாலும் பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா மற்றும் நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய ஜனார்த்தன் ரெட்டி ஆகியோரைக் குறிவைத்துத் தாக்குதலைத் தொடுத்துள்ளது.   

எடியூரப்பாவை முன் நிறுத்தினால், பா.ஜ.கவுக்கு வாக்குக் கிடைக்காது என்ற நோக்கில், பா.ஜ.கவின் பிரச்சாரம், ராகுல் மீதான தாக்குதல் மற்றும் “கர்நாடக வளர்ச்சிக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்ற பிரதமர் நரேந்திரமோடியின் வாக்குறுதி ஆகியவற்றை நம்பி, தேர்தல் களத்தில் அனல் பிரச்சாரம் நடக்கிறது.   

இதற்கிடையில், இலவசங்களை முற்றிலும் வெறுக்கும் பா.ஜ.கவின் சார்பில், அதன் மாநில முதலமைச்சர் வேட்பாளர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், “தாலிக்கு இலவச தங்கம். ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம்” என்று கவர்ச்சி வாக்குறுதிகளை இறக்கி விட்டுள்ளார்.   

இந்தக் ‘கவர்ச்சி வாக்குறுதிகள்’, பா.ஜ.கவின் வெற்றிக்கு வித்திடும் மூன்றாவது ஆயுதமாக, பா.ஜ.க மேலிடம் நினைக்கிறது. நாடு முழுவதும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுகின்ற நேரத்தில் எல்லாம், “அது மத்திய அரசாங்கத்தின் வேலை அல்ல” என்று கூறி வந்த பா.ஜ.கவின் சார்பில், கர்நாடக மாநிலத் தேர்தல் அறிக்கையில், “விவசாயிகள் கடன் தள்ளுபடி” என்று இன்னொரு கவர்ச்சி வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.   

இந்தக் கவர்ச்சி வாக்குறுதிகளைத் தாக்குப் பிடிக்க, என்ன யுக்தி என்ற ரீதியில், காங்கிரஸ் கட்சி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.  

பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், இங்கு 2008இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள கர்நாடக சட்டமன்றத்தில், இது அறுதிப் பெரும்பான்மை இல்லை. என்றாலும், எடியூரப்பா முதலமைச்சரானார்.   

ஆனால், அவர் மீது எழுந்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், பா.ஜ.கவுக்கு அம்மாநிலத்தில், 2013 சட்டமன்றத் தேர்தலில் பேரிழப்பை ஏற்படுத்தியது.   

2008இல் 34 சதவீத வாக்குகளைப் பெற்ற பா.ஜ.க,2013இல் 20 சதவீத வாக்குகளைப் பெறுவதற்கே, போராட்டம் நடத்தி, வெற்றி வாய்ப்பை இழந்தது.   

அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், 2008 சட்டமன்றத் தேர்தலில், வெறும் 0.90 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.கவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், 2013 சட்டமன்றத் தேர்தலில், 122 தொகுதிகளில் வெற்றி பெற்று, கர்நாடக மாநிலத்தின் ஆட்சியைப் பிடித்தது.   

மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து வந்த சித்தாராமைய்யா, காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு வித்திட்டார். ஆகவே, அவரே முதலமைச்சரானார்.  

இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸால் இந்த வெற்றி வாய்ப்பை, 2018இல் நடக்கும் இந்தச் சட்டமன்றத் தேர்தலில், தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதுதான் இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வியாகும்.  

வெற்றி வாய்ப்பு, பா.ஜ.கவுக்கும் காங்கிரஸுக்கும் குரல் வளையைப் பிடிக்கும் நிலையில், இழுபறி இருக்கிறது என்பது, ஒரு பக்கக் கள நிலவரம்.   

ஆனாலும், பா.ஜ.கவின் மிக முக்கியமான வாக்கு வங்கியான ‘லிங்காயத்’ வாக்கு வங்கியை, சித்தாராமைய்யா அசைத்துப் பார்த்து விட்டார் என்றே தோன்றுகிறது.  

‘லிங்காயத்’ஐத் தனி மதம் என்று அங்கிகரிக்க வேண்டும் என்று, தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் சார்பில், கர்நாடகத்தில் மேற்கொள்ளப்பட்ட நகர்வுக்கு, அந்த ‘லிங்காயத்’ சமுதாய மக்கள் மத்தியில் கடும் வரவேற்பு உள்ளதாகவே தெரிகிறது.   

ஊழல் புகார்கள், அரசாங்கத்தின் செயல்பாடுகள் போன்றவற்றால், ஆட்சிக்கு எதிரான வாக்குகள் காங்கிரஸுக்கு, சென்ற தேர்தலை விட, இந்தத் தேர்தலில் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.   

ஆனால், அதைச் சமாளிக்கும் விதமாகவே, ‘லிங்காயத்’ வாக்குகளைக் காங்கிரஸுக்கு விழ வைக்க, சித்தாராமையா முயற்சி மேற்கொண்டார். அதில் பாதி கிணற்றைத் தாண்டி விட்டார். ஆனால், மீதிக் கிணற்றையும் தாண்டி விட்டாரா என்பதை, கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகுதான் தெரியவரும்.  

இந்த ‘லிங்காயத்’ வாக்குகளில் ஏற்படும் வாக்கு இழப்பைச் சமாளிக்கவே, பா.ஜ.கவும் இலவச திட்டங்கள் என்ற தங்களுக்கு வேண்டாத வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறது. அது மட்டுமின்றி, ‘லிங்காயத்’ வாக்குகளுக்கு இணையாக இருக்கும், ‘கவுடா’ வாக்குகளைக் கவருவதற்குப் பிரதமர் நரேந்திரமோடியே முன்னாள் பிரதமர் தேவகவுடாவைத் தேர்தல்ப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ‘ஓஹோ’ என்று பாராட்டினார்.   
‘கவுடா’ வாக்காளர்களுக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் இளம் தலைவர் குமாரசாமி மீது கோபமிருக்கிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக இருக்கும் சித்தாரமையா, தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர் என்ற சந்தேகமும் அவர்களுக்கு இருக்கிறது.   

இதன் காரணமாக, பிரதமரின் பாராட்டை நம்பி, ‘லிங்காயத்’ வேட்பாளராக இருக்கும் எடியூரப்பா முதலமைச்சராக வாக்களிப்பார்களா என்பதும் இதுவரை முடிவு தெரியாத, வாக்கு எண்ணிக்கை போலவே இருக்கிறது.   

ஆகவே காங்கிரஸும் - பா.ஜ.கவும் கர்நாடக மாநிலத் தேர்தலில், வெற்றி முகட்டைத் தொட்டு விட வேண்டும் என்று கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றன.   

கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல், ஒரு மாநிலத் தேர்தல் என்றாலும், இன்றைக்கு இந்தியாவில், மூன்றே மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சி பதவியில் இருக்கிறது. வட மாநிலங்களில் பஞ்சாப் மாநிலத்திலும் தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்திலும், புதுச்சேரியிலும் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது.  

கர்நாடக மாநிலத் தேர்தலில் தோற்றால், தென் மாநிலங்களில் ஒன்று, வடமாநிலங்களில் ஒன்று என்ற பரிதாப நிலைக்கு, காங்கிரஸ் கட்சி வந்துவிடும். அதுவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைப்பதில், காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தி விடும்.   

இப்போது மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், 
தி.மு.கவின் சார்பில் ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருமே, “பா.ஜ.கவைத் தேசிய அளவில், காங்கிரஸால் தோற்கடிக்க முடியாது” என்ற சிந்தனையில்தான் ‘பெடரல் பிரன்ட்’ என்று புது அணியைத் தேசிய அளவில் உருவாக்குவது பற்றி, ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.   

ஆகவே, கர்நாடக மாநிலத் தோல்வி என்பது, காங்கிரஸ் கட்சியின் 2019 தேர்தல் வியூகத்துக்குப் பெரிய ஆபத்தாக முடியும். ஆகவே, காங்கிரஸ் கட்சி போராடினாலும், ராகுல் காந்தி மட்டுமே முன்னின்று பிரச்சாரம் செய்வது பலனிக்குமா என்ற கேள்வி எழுகிறது. பா.ஜ.கவின் சார்பில் அமைச்சர்களும் அகில இந்தியத் தலைவர்களும், பிரதமர் நரேந்திரமோடியும் முழு வேகப் பிரச்சாரத்தில் இருக்கிறார்கள்.   

ஆனால், காங்கிரஸ் கட்சியின் சார்பில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் யாரையும் காணவில்லை என்பது, காங்கிரஸ் கட்சியின் பிரச்சார வேகத்துக்கும் மக்கள் மன்றத்தில் ஓர் எழுச்சியை உருவாக்கவும் போதுமானதாக இல்லை என்றே கருதப்படுகிறது.   

அதனால்தான், சித்தாராமையா தன்னை முன்னிறுத்தி, எடியூரப்பாவை எதிர்த்தாக்குதல் நடாத்தி, தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்.  

பா.ஜ.கவுக்கோ கர்நாடகத் தேர்தல் வெற்றி என்பது, தென் மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி என்ற முழக்கத்துக்கும், 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என்பதை மக்களுக்கும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கும்- ஏன் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள கட்சிகளுக்கும் செய்தியாக இருக்கும் என்று கருதுகிறது.   

இங்கு தோல்வியடைந்தால், தென் மாநிலங்களில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள வேறு மாநிலங்கள், பா.ஜ.கவுக்கு இல்லை என்பது தெளிவாகிவிடும். எந்தநிலையிலும், கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல், அகில இந்திய அளவில் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.   

பா.ஜ.க முன்னிறுத்தும் முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா மீது, எழுந்த ஊழல் புகார்களும், ஐந்து வருடம் ஆட்சியில் இருந்து அதிருப்தியை சந்தித்துள்ள காங்கிரஸ் முதலமைச்சர் சித்தாராமையாவும் அகில இந்திய அளவில் ‘பா.ஜ.க’ மற்றும் ‘காங்கிரஸ்’ கட்சிகளில் ஒன்றின் வெற்றியைக் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் நிர்ணயம் செய்யும்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .