2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா

எம். காசிநாதன்   / 2019 ஜூலை 09 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நிதியமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் பின்னணி
பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் நிதி நிலை அறிக்கையை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். 

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள இரண்டாவது பெண் நிதியமைச்சர் இவர். தேர்தலுக்கு முந்தைய நிதி நிலை அறிக்கையின் தொடர்ச்சி என்றாலும், இந்த நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கும், சிறு தொழில் புரிவோருக்கும், மூத்த குடிமகன்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு- “கோர்ப்பரேட்” நிதி நிலை அறிக்கை என்ற கடந்த கால குற்றச்சாட்டை நீக்குவதற்கு முயன்றிருக்கிறார் நிதியமைச்சர்.

சென்ற நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட “நீலப் பொருளாதாரம்” (Blue Economy) உள்ளிட்ட பத்து தொலை நோக்குத் திட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் இந்த நிதி நிலை அறிக்கையில் எடுக்கப்பட்டுள்ளன. “பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகாரமளிக்கும் நிதி நிலை அறிக்கை” என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டியிருக்கிறார். பா.ஜ.க. முன்னணித் தலைவர்களும் பாராட்டியிருக்கிறார்கள். 

மூத்த குடிமகன்களுக்கு வருமான வரிச்சலுகை, மருத்துவ சிகிச்சை சலுகை, சேமிப்பு வட்டி சலுகை போன்றவை வாரி வழங்கப்பட்டு- மாற்று திறனாளிகளுக்கும் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்த இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் “புதிய கல்விக் கொள்கை” வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய கல்விக் கொள்கையின்  ஓர் அம்சமாக உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்க 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்று படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்களுக்குப் பதில், “இந்தியாவில் படிக்க வாருங்கள்” என்று வெளிநாட்டு மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் சில முயற்சிகள் எடுக்கப்படும் என்பது “வெளிநாட்டுக் கல்வியை” இந்தியாவிலேயே படிப்போம் என்ற ஆர்வத்தை இந்திய மாணவர்களுக்கும் ஊட்டுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1 கோடியே 50 இலட்சத்துக்குள் வருடத்துக்கு வியாபாரம் செய்யும் சில்லரை வணிகம் மற்றும் பெட்டிக் கடைகள் வைத்திருப்போருக்கு ஓய்வூதியத் திட்டம் என்ற அறிவிப்பு அடித்தட்டுமக்களின் நலன்களை பாதுகாக்கும்.

நாடாளுமன்றத்துக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 78 பெண் எம்.பி.க்கள் இந்த முறை வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஆகவே அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு தனி அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து “பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தர ஒரு கமிட்டி அமைக்கப்படும்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார்.

பெண் நிதியமைச்சர் ஒருவரின் கீழ் இந்த முயற்சி பெண்கள் இயக்கங்களின் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5,000 ரூபாய் ஓவர் டிராப்ட் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள ஒருவருக்கு 1 இலட்சம் ரூபாய் கடன் வழங்கும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவை பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் நிதி நிலை அறிக்கையாக மாறியிருக்கிறது. ஆக மொத்தம் இந்த நிதி நிலை அறிக்கை- ஏழைகளின், கீழ்த்தட்டு, நடுத்தர மக்களின் அரசு பிரதமர்  மோடியின் அரசு என்ற செய்தியை 130 கோடி இந்திய மக்களிடமும் எடுத்துச் செல்ல அடித்தளம் போடப்பட்டுள்ளது.

“ஒரே நாடு ஒரே தேர்தல்”, “ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை” போன்ற பல திட்டங்களின் அணி வகுப்பில் இப்போது “ஒரே நாடு ஒரே கிரிட்” , “ஒரே நாடு ஒரே போக்குவரத்து அட்டை”, “ஒரே நாடு ஒரே வாடகை சட்டம்” என்பதெல்லாம் சேர்ந்து கொள்ளும் என்பதை பட்ஜெட் அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன. மாநிலங்கள் இதற்கு எல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்றாலும், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசைப் பொறுத்தவரை மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தின் அடிப்படையிலேயே செயற்படுகிறது என்பது 2014இல் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தெரியும் நிலைப்பாடுதான். சென்ற முறை விவசாயிகளின் அதிருப்தியைச் சம்பாதித்த மத்திய அரசு கடைசி நேரத்தில் அதை ஈடுகட்ட “வருடம் 6,000 ரூபாய் பென்ஷன்” விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிக்கிக் கொண்டது. 

தேர்தலுக்கு முன்பே அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தி- தேர்தலில் பா.ஜ.க. விவசாயிகளின் வாக்குகளைப் பெற்றது. அப்படியொரு சூழல் விவசாயிகள் மத்தியில் இனி வரக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆகவே அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு “ஜீரோ பட்ஜெட் விவசாயம்”, “உரத்துக்கு 10 ஆயிரம் கோடி அதிகமாக நிதி ஒதுக்கீடு” போன்ற விவசாயிகள் நலனுக்கு ஏற்ற அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.

ரயில்வே துறை அதிவேகமாக தனியார் மயமாகும் என்பது பட்ஜெட் அறிவிப்பிலிருந்து புரிகிறது. ஏனென்றால் “2018 முதல் 2030க்குள் ரயில்வே கட்டமைப்புகளுக்காக 50 இலட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது” என்று நிதி நிலை அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பது- ரயில்வே எக்ஸ்பிரஸ் வேகத்தில் தனியார் மயமாவதற்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. அதே போல் பொதுத் துறை நிறுவனங்களில் தனியார் முதலீடுகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து இன்றைய பா.ஜ.க. தலைமையிலான அரசு வரை தொடர்ந்தே வருகின்றன.

அந்த வகையில் 51 சதவீதத்துக்கும் குறைவாகக் கூட அரசு தனது பங்குகளைப் பொதுத்துறை நிறுவனங்களில் வைத்துக் கொண்டு, ஒவ்வொரு நிறுவனம் அடிப்படையில் மீதி பங்குகளை தனியாருக்கு விற்கலாம் என்ற முடிவு  வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் “பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு” என்று முழங்கினாலும், பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 1991க்கும் பிறகே படிப்படியாக தனியார் மயம் ஆகி வருவதைத் தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.

2019-20 ஆம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் ஒரு இலட்சத்து 5 ஆயிரம் கோடி தனியார் முதலீட்டைப் பெற்றிட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. கோர்பரேட் கம்பனிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள 400 கோடி மொத்த வணிகம் செய்யும் கம்பெனிகளுக்கும் 25 சதவீத வரி மட்டுமே என்ற வரிச்சலுகை விமர்சனத்துக்குள்ளானாலும்- இது போன்ற வரிச்சலுகைகளும் முந்தைய காங்கிரஸ் அரசுகள் வழங்கியதே. 

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இந்த நிதி நிலை அறிக்கை முற்றிலும் வித்தியாசமாக- எடுத்த எடுப்பிலேயே “ஏழைகள், பெண்கள், இளைஞர்கள்” என்ற பாதையை நோக்கி வேகமாக நகர்கிறது.

இந்த வருடம் “மூன்று டிரில்லியன் எகானமி” என்ற முழக்கத்தை சாதிக்க நினைக்கும் மத்திய அரசு, “ஐந்து டிரில்லியன் எகானமி”யை தன் கனவாக திட்டமிட்டுள்ளது. அந்தக் கனவை எட்டும் விதத்திலேயே இந்த நிதி நிலை அறிக்கையில் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குதல், டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறிய, நடுத்த தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், உலகத் தரம் வாய்ந்த கல்விக்கொள்கை போன்றவற்றை முன் வைத்து இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

தனி நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வருமான வரிச்சலுகைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் அளிக்கப்பட்டுள்ள வரிச்சலுகைகள் எல்லாம் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. “மூத்த குடிமக்கள்” இந்த அரசின் முதல் பார்வையில் பட்டிருப்பது இந்த நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகத் தென்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல், “ தொலை நோக்குப் பார்வையும் இல்லாத, நிதியும் ஒதுக்கீடு இல்லாத ஒரு நிதி நிலை அறிக்கை” என்று குறை கூறியிருக்கிறார். அக்கட்சியின் செய்தி தொடர்பாளரோ, “இலக்கு இல்லாத பட்ஜெட்” என்று விமர்சித்திருக்கிறார்.

எதிர்க்கட்சி அவதாரத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கருத்து எதிர்பார்க்கப்பட்டதே. இன்னொரு பக்கம் பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் “5 டிரில்லியன் எகானமி என்ற இலக்கு வரவேற்கத்தக்கது” என்று பாராட்டியிருக்கிறார்.

ஆனால், அனைவராலும் பாராட்டுப்படும் பட்ஜெட் அறிவிப்பு என்னவென்றால் “ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவோம்” என்ற மத்திய நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புதான்! நாடு முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை- ஆங்காங்கே நிலத்தடி நீர் குறைந்து வருகிறது என்றெல்லாம் வரும் செய்திகளுக்கு இடையில் “ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்” என்ற மாநில அரசின் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது இந்த பட்ஜெட்டின் வித்தியாசமான அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்த நிதி நிலை அறிக்கையில் உள்ள அறிவிப்புகளில் “கதாநாயகன்” இந்த அறிவிப்பாகவே இருக்கும் என்றால் மிகையாகாது. சுருக்கமாக ஏழை,எளியவர்கள் நோக்கியும், கம்பீரமான பொருளாதாரத்தை நோக்கியும் வீறு நடை போடும் நிதி நிலை அறிக்கை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .