2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

5G: நியாயமான கேள்விகளும் மழுப்பல் பதில்களும்

Editorial   / 2019 ஜூலை 18 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று 5ஜி தொடர்பில் சில முக்கியமான கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடபகுதியில் 5ஜி தொழில்நுட்பத்தைப் பொருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மக்கள் சில போராட்டங்களைச் செய்துள்ளார்கள். அவர்கள் பல நியாயமான கேள்விகளையும் எழுப்பி உள்ளார்கள்.   

இந்தக் கேள்விகள், பதில்களை வேண்டுவன. இந்தப் போராட்டங்களை ஜனநாயகமயமான சமூகத்தின் ஒரு செயற்பாடாகவே கருத வேண்டும். இது ஆரோக்கியமான திசைவழியுமாகும்.   

உலகளாவிய ரீதியில் 5ஜி என்கிற தொழில்நுட்பம் தொடர்பான முக்கியமான ஆய்வுகள் வெளியாகியுள்ளன. இவை, இதைப் பயன்படுத்துவதன் ஆபத்துகள் குறித்து, தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றன.   

குறிப்பாக, இவை ஏற்படுத்தும் சுகாதாரப் பாதிப்புகள் உடல்நலக் கோளாறுகள் குறித்து, சான்றாதாரங்களுடன் நிறுவியுள்ளன; இதை மறுக்கவியலாது. இவ்விடயம் தொடர்பிலான மருத்துவ விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகள், சர்வதேச ரீதியில் அங்கிகாரம் பெற்ற இதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.   

எனவே, அந்த ஆய்வின் விஞ்ஞானத் தன்மை குறித்து, கேள்வி எழுப்புவது சிரமம். அதேவேளை, இந்தத் தொழில்நுட்பத்தைப் பாவனைக்கு அனுமதிக்கக் கூடாது எனப் பல மேற்குலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் எனப் பலர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்தக் குரல்கள் வெற்றுக் கூச்சல்கள் என ஒதுக்கிவிட முடியாத படி, அறிவியல் உலகில் மதிப்புமிக்க நபர்களாலும் மருத்துவ ஆய்வுத் துறையில் முன்னிலை வகிக்கும் விஞ்ஞானிகளாலும் முன்வைக்கப்படும் கருத்துகளின் குரல்கள் என்பதை, இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.   

5ஜி தொடர்பில் உரையாடும்போது, சில முக்கியமான கேள்விகளை இங்கு கேட்டாக வேண்டும். முதலாவது, இலங்கை 5ஜி பயன்படுத்துவதற்கான அனுமதியை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கும் ஆக இருந்தால், இதை அனுமதிப்பதற்கு முன்னர், இவற்றைக் கண்காணித்துச் சரிபார்த்து ஒப்புதல் வழங்குவதற்கான திறமை, இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கிறதா?  5ஜி தொடர்பிலான எந்த ஓர் ஆவணமும் ஆணைக்குழுவின் இணையத் தளத்தில் இல்லை என்பதும் முக்கியமானது. ஆனால், இலங்கையில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் 5ஜி நடைமுறைப்படுத்துவது பற்றித் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.  

இரண்டாவது, 5ஜி விடயம் தொடர்பில் மக்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்; கேள்விகள் தொடுக்கிறார்கள் என்றால் மக்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது அதனுடன் தொடர்புடைய அனைத்து அரசியல்வாதிகளினதும் நிர்வாகிகளினதும் கடமை ஆகும். இலங்கைத் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் பொறுப்பை விட்டுவிட்டு, அவர்கள் வழங்கினால் அது சரியானதுதான் என்ற போக்கில் பதில் அளிப்பது, பொறுப்பான பதில் ஆகாது.   

குறித்த விடயம் தொடர்பில், யாழ். மாநகர மேயரால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றை வாசிக்க கிடைத்தது. அந்த அறிக்கையில், மக்களால் முன்வைக்கப்பட்ட வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் எந்தவிதமான பதிலும் வழங்கப்படவில்லை. இந்த மழுப்பலான பதில்கள், பலத்த சந்தேகத்தைக் கிளப்புகின்றன.  

இதில் நகைச்சுவை என்னவென்றால், இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், யாழ்ப்பாணத்தை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவது குறித்து, அந்த அறிக்கையில் பேசப்படுகிறது. ஒரு மாநகர சபைக்கான இணையத் தளத்தையே ஒழுங்காக நடத்த முடியாத மாநகர சபை நிர்வாகம், 5ஜி உடன் பயணித்து, யாழ்ப்பாணத்தை ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றுவது குறித்து பேசுகிறது. யாழ். மாநகர சபையின் இணையத் தளத்துக்குச் செல்வீர்கள் ஆயின், அந்த இணையத்தளம் இப்பொழுது பாவனையில் இல்லை.   

ஓர் இணையதளம் கூட இல்லாத ஒரு மாநகரசபை, 5ஜி உதவியுடன் யாழ்ப்பாணத்தை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்குவது குறித்தும் உச்சபட்ச தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவத்தை, இந்தப் போராட்டக்காரர்கள் வீண்புரளி கிளப்பித் தடுக்கப் பார்க்கிறார்கள் என்றும் குற்றம் சொல்கிறது. இவை அடிப்படையில், ஜனநாயகம் சார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன.   

குறித்த ஒரு நவீன தொழில்நுட்பம் சார்ந்து, உலகளாவிய ரீதியில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அந்தக் கேள்விகளை எழுப்புவது நியாயமானது. அதற்கான உரிமை அந்த மக்களுக்கு உண்டு. இதை முதலில் மக்களின் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்; அதற்கு நியாயமான பொறுப்பான முறையில் பதில் அளிக்க வேண்டும். அதைவிடுத்து, ‘மாட்டை மரத்தில் கட்டிவிட்டு, மரத்தை பற்றி பேசுவது போல, அறிக்கைகளை வெளியிடுவதால் எந்தப்பயனும் இல்லை.   

இன்று யாழ்ப்பாண மாநகர சபை செய்ய வேண்டிய பல உடனடி நடவடிக்கைகள் உண்டு. இன்றைய அவசரத் தேவை 5ஜி அல்ல! முதலில் இணையத்தளத்தைச் சரிசெய்யுங்கள்; மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குங்கள்; இணையத்தின் வழி தொடர்பு கொள்வதற்கும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வழி செய்யுங்கள். அதன் பின்னர் ‘ஸ்மார்ட் சிற்றி’ பற்றிப் பேசுவோம்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X