2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

GMOA எனும் ஆபத்தான சக்தி

Gopikrishna Kanagalingam   / 2018 ஓகஸ்ட் 09 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அண்மைக்கால அரசியலை ஊன்றிப் பார்த்தவர்களுக்கு மாத்திரமன்றி, தினசரிச் செய்திகளை வாசிப்பவர்களுக்கும், GMOA என்று அறியப்படுகின்ற, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பெயர், மிகவும் பரிச்சயமாக இருந்திருக்கும். வேலைநிறுத்தங்கள், மிரட்டல்கள் என்று, கடந்த பல மாதங்களாக, இலங்கையின் அநேகமான பத்திரிகைகளின் முதற்பக்கங்களை ஆக்கிரமித்தவர்களாக, இக்குழுவினரே இருக்கின்றனர்.  

மிகவும் கௌரவமாகப் பார்க்கப்படுகின்ற வைத்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான தொழிற்சங்கம் என்ற அடிப்படையில், அவர்களுக்கான முக்கியத்துவம் வழங்கப்பட்டமையில் தவறேதும் இல்லை. ஊடகத் துறை என்பதே, மக்களுக்கு முக்கியமான விடயங்களை முக்கியத்துவப்படுத்துவது தானே? ஆனாலும் கூட, ஊடகத் துறையினரால் வழங்கப்பட்ட அதிகபட்ச முக்கியத்துவம், அக்குழுவுக்கு அளவுக்கு மீறிய பலத்தை வழங்கிவிட்டதோ என்ற கேள்வியைத் தான் எழுப்ப வேண்டியிருக்கிறது.  

இவ்வாண்டில் மாத்திரம், பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, பணிப்புறக்கணிப்பை, இச்சங்கம் மேற்கொண்டிருக்கிறது இல்லாவிட்டால் மேற்கொள்ளப் போவதாக எச்சரித்திருக்கிறது. போக்குவரத்துப் படி தாமதம் என்ற குற்றச்சாட்டு; இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக; இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட எதிர்பார்க்கப்படும் ‘எட்கா’ உடன்படிக்கைக்கு எதிராக; வைத்திய அதிகாரிகளுக்கான தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரங்களுக்கான கட்டுப்பாடு; ‘சைட்டம்’ தொடர்பான சர்ச்சைகள் போன்றன, அவர்களின் முக்கியமான சில கோரிக்கைகளாகும்.  

இதில், அண்மைக்காலத்தில் அவர்கள் முன்வைத்திருக்கும் முக்கியமான கோரிக்கை, போக்குவரத்துப் படியாக, மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாயை, தங்களுக்கு வழங்க வேண்டுமென்பது தான். இதன் மூலமாக, வைத்தியர் ஒருவருக்கு, ஆண்டொன்று 1.2 மில்லியன் ரூபாயை, அரசு வழங்க வேண்டியிருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக, மருத்துவ நிர்வாகிகளுக்கு மாதாந்தம் 30,000 விசேட படியும், தங்களுக்கான வரி, 12 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதுவும், அவர்களது கோரிக்கைகளாகும்.  

இக்கோரிக்கைகளுக்கு மத்தியில், இலங்கையின் புள்ளிவிவரத் திணைக்களத்தால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கையிலுள்ள வீடொன்றுக்கான மாதாந்த சராசரி வருமானம், வெறுமனே 43,511 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கூற வேண்டியிருக்கிறது. நகர்ப்புறங்களில் அது, 57,833 ரூபாயாக இருக்கிறது.  

அதேபோல், கனடாவின் கியூபக் நகரைச் சேர்ந்த சுமார் 700 வைத்தியர்கள், தங்களது ஆண்டு வருமானம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக, ஆர்ப்பாட்டமொன்றை இவ்வாண்டு நடத்தியிருந்தனர். தமக்கு வழங்கப்பட்ட ஊதிய அதிகரிப்பை, வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துமாறு அவர்கள் கோரியிருந்தனர்.  
இவற்றின் பின்னணியில் தான், வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசியல் காரணங்களுக்காகச் செயற்படுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்ப வேண்டியிருக்கிறது. அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை அல்லது எதிர்ப்புகளை, தமது பணிக்குக் கிடைக்கும் மரியாதை, கௌரவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வெளிப்படுத்த, இச்சங்கம் முனைகிறதோ என்பது தான், இப்போதிருக்கின்ற கேள்வி. ஏனென்றால், வைத்திய அதிகாரிகள் சங்கம், மஹிந்த அணி அல்லது ஒன்றிணைந்த எதிரணி என்று சொல்லப்படுகின்ற குழுவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இயங்கும் ஒரு சங்கம் என்ற குற்றச்சாட்டு, முன்னைய காலங்களில் முன்வைக்கப்பட்டிருந்தது.  

ஆனால், அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள், இச்சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்திருக்கின்றன. அதிலொன்று, ஒன்றிணைந்த எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்‌ஷவுடனான நிகழ்வொன்றில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனிய கலந்துகொண்டிருந்தார். தொழிற்சங்கமொன்றின் தலைவராக இருக்கும் ஒருவர், அரசியல் கலப்பற்றவராக இருக்க வேண்டுமென்ற எந்த நிபந்தனையும் கிடையாது. ஆனால், அரசியல் கலப்பற்ற ஒரு தொழிற்சங்கத்தின் தலைவர், அதை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகப் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு, முக்கியமானதொரு குற்றச்சாட்டாகும்.  

அதில் அடுத்த காரணமாக, “தாய்நாட்டுக்கு எதிராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும், துரோகிகளான ஊடகவியலாளர்களின் பட்டியலை உருவாக்குவதற்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்ற அவரது கருத்து. பொதுவாகப் பார்க்கும் போது, ஊடகவியலாளர்கள் என்பவர்கள், வைத்தியர்களைப் போலவே, விமர்சனங்களுக்கு அப்பாற்படாத ஒரு பிரிவினர் தான். ஆகவே, ஊடகவியலாளர்களில் தவறு காணப்படுமாயின், அவை நிச்சயமாகவே சுட்டிக்காட்டப்பட வேண்டியன.

ஆனால், அவ்வாறான தவறுகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர, பொத்தாம் பொதுவாக, “துரோகி” என்ற பட்டம் சூட்டுவது, ஆபத்தான ஒரு செயற்பாடு. ஒரு வகையில், தனது பக்கத்தில் நியாயமான நிலைப்பாடுகள் எவையுமில்லாமல், தனது வாதத் திறமையேதும் இல்லாமல், குறித்த விவாதத்தை வெல்ல விரும்பும் ஒருவரின் நிலைப்பாடு தான், “துரோகி” பட்டம் கட்டும் செயற்பாடு.  

எனவே, வைத்திய அதிகாரிகள் சங்கமென்பது, மோசமான, தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்ற, ஆபத்தான சக்தியாக மாறிவருகிறது என்பதைத் தான், எம்மால் தெளிவாகப் பார்க்க முடிகிறது.   

இதில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீதான விமர்சனங்கள், வைத்தியர்கள் மீதான விமர்சனங்களாகப் பார்க்கப்படக் கூடாது என்பது முக்கியமானது. ஏனென்றால், வைத்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சங்கமாக அது இருந்த போதிலும், ஓரளவுக்கு மேல் வளர்ந்த பின்னர், எச்சங்கமும் எவ்வமைப்பும், அதன் கொள்கைகளிலிருந்து வெளியேறி, தடுமாறுவது வழக்கமானது.

மக்களுக்கானவை என்று சொல்லி ஆரம்பிக்கப்படுகின்ற தொழிற்சங்கங்களும் கட்சிகளும், ஓரளவுக்கு வளர்ந்த பின்னர், விரும்பியோ, விரும்பாமலோ, தாம் விரும்பும் வகையில் அம்மக்களை வழிநடத்துகின்ற பாணியைக் காண்கிறோம்.   அதேபோல், நாமனைவருமே, ஏதோவொரு வகையில், வைத்தியர்களில் தங்கியிருக்கிறோம்.

ஏனைய ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது, இலங்கையின் சுகாதார அளவுச் சுட்டிகள் சிறப்பான நிலையில் இருப்பதற்கு, இலங்கையின் சுகாதாரத் துறையின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்பதை, யாரும் மறுத்துவிட முடியாது. அதிலும், ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, குறைவான ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளும் வைத்தியர்கள், அரச வைத்தியசாலைகளில் ஆற்றுகின்ற சேவைகளை, யாரும் குறைத்து மதித்துவிட முடியாது.  

வைத்தியர்களுக்கான ஊதியங்கள், காலக்கிரமத்தில் அதிகரிக்கப்பட்டு, சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய மட்டத்துக்கு அவை மாற்றப்பட வேண்டுமென்பதில், யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், வைத்தியர்களுக்கான ஊதியங்கள் மாத்திரம், விசேட அடிப்படையில் தனித்து அதிகரிக்கப்பட வேண்டுமா என்று கேட்டால், இல்லை என்பது தான் பதிலாக இருக்க முடியும். அனைவரின் ஊதியங்களும் அதிகரிக்கும் போது, வைத்தியர்களின் ஊதியங்களும் அதிகரிக்க வேண்டும் என்பது தான், நியாயமாக இருக்கும். சுகாதாரத் துறை தவிர, ஆசிய அளவில் இலங்கையால் சிறப்பான இடம் வகிக்கப்படும் இன்னொரு துறையாக, கல்வித் துறை இருக்கிறது.

ஆனால், ஆசிரியர்களோடு, தமது நாளாந்த வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியாத அளவிலான ஊதியத்தைத் தான் பெறுகிறார்கள். வைத்தியர்கள் முக்கியமானவர்கள் என்றால், வைத்தியர்களை உருவாக்குகின்ற ஆசிரியர்கள் முக்கியமானவர்கள் இல்லையா? விவசாயிகள்? தெருக்களைக் கூட்டிச் சுத்தம் செய்யும் தொழிலாளிகள்?   

எனவே, வைத்தியர்களின் முக்கியத்துவமென்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயமாக இருந்தாலும், அவர்கள் மாத்திரமே நாட்டில் முக்கியமானவர்கள் என்ற பாணியில் செயற்படும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைக் கண்டு, அரசாங்கம் தொடர்ந்தும் அஞ்சுமாயின், பொருத்தமான விளைவுகளை அது ஏற்படுத்தாது. இலங்கையில் இன்று ஏற்பட்டிருக்கின்ற, “எதற்கெடுத்தாலும் பணிப்புறக்கணிப்பு அல்லது வேலைநிறுத்தம்” என்ற நிலைமை, இவ்வாறான பணிப்புறக்கணிப்புகளுக்கு, அரசாங்கம் தொடர்ந்தும் செவிசாய்த்து வருவதால் தான் ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  

நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் எந்தத் தொழிற்சங்கத்துக்கும், அரசாங்கம் தனது செவியைக் கொடுத்துக் கேட்பதில் தவறில்லை. ஆனால், நோயாளிகளை கேடயங்களாகப் பயன்படுத்தி, மோசமான முறையில் தொழிற்சங்க உரிமையை வெளிப்படுத்தும் தரப்புகளுக்கு, அரசாங்கம் செவிகொடுத்துக் கொண்டிருந்தால், சாதாரண மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அது பார்க்கப்பட வேண்டியதாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .