2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விக்கியும் அவருக்கான அரசியல் நாகரிகமும்

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்ற பதற்றம் கடந்த சில வாரங்களாக தமிழ் அரசியல் பரப்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்த பா.டெனீஸ்வரனிடம், வழக்கை மீளப்பெறுமாறு, அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புகளினால் தொடர்ந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அவரும் அதற்கு இணங்கியிருக்கிறார்.

இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், வழக்கை மீளப்பெறுவது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நடைமுறையில் வந்திருக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கும் டெனீஸ்வரனுக்கும் இடையில் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக்கொள்வது தொடர்பிலான இணக்கப்பாடு மற்றும் அதுசார் நிபந்தனைகளில், சிக்கல் நீடிப்பதாகத் தெரிகின்றது. இந்தப் பத்தி வெளியாகும் சமயத்தில், சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, வழக்கு மீளப்பெறப்பட்டிருக்கலாம் (நேற்று மீளப்பெறப்பட்டது). அப்படியான நிலை ஏற்பட்டிருந்தால், அது வரவேற்கப்பட வேண்டியது.

நிற்க, நீதிமன்ற அவமதிப்பு வழக்கினூடாக விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்கிற பதற்றத்தின் பின்னணி தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது. ஏனெனில், அது எவ்வகையான அரசியலையும் அதுசார் அறத்தையும் மக்களிடம் முன்வைக்க விளைகின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவும்.

1.    நீதியரசர் ஒருவர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வதையும் அவர் நீதிமன்றத்தின் சாட்சிக் கூண்டில் ஏறுவதையும், தமிழ்ச் சூழல் விருப்பவில்லை.

2.    சிலவேளை, விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டு அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடலாம் என்கிற அச்சம்.

உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த சமயத்தில், அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்த டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம் ஆகியோரை, இயற்கை நீதிக்கு எதிராகப் பதவி நீக்கியிருந்தார். அதுவும், மாகாண அமைச்சர்களுக்கு எதிராக எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து, முதலமைச்சராலேயே நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கைகளில், டெனீஸ்வரனும் சத்தியலிங்கமும், குற்றங்களை இழைத்திருக்கவில்லை என்று அறிவிக்கப்பட்ட பின்னரும், அவர்களைப் பதவி நீக்கியிருந்தமையே சிக்கலின் ஆரம்பம். அத்தோடு, அவர்களைப் பதவி நீக்கும் போது, அவர்களுக்கு எதிராக முதலமைச்சரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், இன்னும் மோசமான ஓர் அரசியல் கலாசாரத்தை, தமிழ்ச் சூழலில் தோற்றுவித்தது.

அப்படியான நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதி நியாயத்தைக் கோருவது, எந்தவிதத்திலும் தப்பாகாது. தங்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து நியாயமான முறையில் விடுபட எடுக்கும் நடவடிக்கை, ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமை. அப்படியான நிலையில்தான், நீதிமன்றத்தினூடாக, தனக்கான நீதியை நாடுவது சார்ந்து, டெனீஸ்வரன் முயற்சிகளை முன்னெடுக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெறுகிறார்.

சட்டத்துக்கு முரணாக டெனீஸ்வரனைப் பதவி நீக்கியது தவறு என்று விக்னேஸ்வரனுக்கு எதிரான தீர்ப்பை மேல் நீதிமன்றம் வழங்கியது. அதனை ஏற்றுக்கொள்ளாது, உயர்நீதிமன்றத்தை விக்னேஸ்வரன் நாடியிருக்கிறார். அதுதான், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் தொடுப்பதற்கும் காரணமானது.
சட்டத்துக்கும் இயற்கை நீதிக்கும் முரணாக, அமைச்சர்களை விக்னேஸ்வரன் பதவி நீக்கியபோது, சமரசத்தின் வழியாகப் பிரச்சினையைத் தீர்க்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் முன்வராத தரப்புகள் எல்லாமும், விக்னேஸ்வரன் நீதிமன்றத்தினூடாகத் தண்டிக்கப்படலாம் என்ற சூழல் உருவானதும், இப்போது அவருக்காக ஓடோடி வருகின்றன.

டெனீஸ்வரன்- விக்னேஸ்வரன் விடயத்தில், பாதிக்கப்பட்டது டெனீஸ்வரன். தனக்கான நீதியைப் பெறுவதற்காக, நீதிமன்ற வழக்குகளுக்காக இலட்சக்கணக்கில் பணத்தைச் செலவளித்திருக்கிறார். விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவராக, நீதிக்கு முரணான நடவடிக்கைகளுக்குச் சொந்தக்காரராக, தன்முனைப்போடு (ஈகோவோடு) மட்டுமே இயங்கிய ஒருவராக இருக்கிறார். அப்படியான ஒருவரைக் காக்கவேண்டிய தேவை பற்றி, அவருக்காக வாதாடும் தரப்புகள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில், ஒருவருக்காக பரிந்து பேசிக்கொண்டு, அதற்கு அரசியல் நாகரிகம் என்று வகுப்பெடுக்க முயலும் தரப்புகள், தார்மீக அறத்தின்பால், இயற்கை நீதியின் வழி, டெனீஸ்வரனுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளையும் வெளிப்படையாக அறிவித்து இயங்க வேண்டும். அதுதான், உண்மையான அரசியல் நாகரிகம். ஆனால், இங்கு அரங்கேறும் காட்சியைக் காணும் போது, விக்னேஸ்வரன் என்கிற மேட்டுக்குடித் தன்மையுள்ள ஒருவருக்குக் குடைபிடிக்கும் செயலாகவே தோன்றுகிறது. ஏனெனில், அரசியல் நாகரிகமும் அதுசார் இயக்கமும், என்றைக்குமே ஒரு வழிப்பாதையாக இருக்க வேண்டியதில்லை. அது, இரு வழிப்பாதையாக அல்லது பல வழிப்பாதையாக இருக்க வேண்டும். அதனை, அந்த முயற்சிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் தரப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.

நல்லிணக்கம் பற்றிய உரையாடல்களில், விட்டுக்கொடுப்பு என்பது தமிழ் மக்களினாலேயே செய்யப்பட வேண்டும் என்கிற தொணி, தென் இலங்கையினால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. அது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ, அதேயளவுக்கு அயோக்கியமான செயற்பாட்டையே இன்றைக்கு விக்னேஸ்வரனுக்காக டெனீஸ்வரனிடம் தூது சென்ற தரப்புகளும் அதற்கு அரசியல் நாகரிகம் என்கிற அடையாளம் பூசியவர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள்.  

இன்னொரு கட்டத்தில், விக்னேஸ்வரனைப் பாதுகாக்க ஓடிக்கொண்டிருக்கும் தரப்புகள், அவரின் நாடாளுமன்ற உரைகள், தென் இலங்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்றும் அதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவருக்கு எதிரான துரும்பாக, தென் இலங்கை கையாண்டுவிடும் என்ற கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றன.

உண்மையில், விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக ஆற்றிய உரைகள், தென் இலங்கையில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றனவா என்றால், ‘ஆம்’ என்பதுதான் பதில். ஆனால் உண்மையில், அந்த உரைகள் தமிழர் நலன்சார் ஏற்பாடுகளில் ஏதாவது முன்னோக்கிய கட்டங்களைத் தோற்றுவிக்குமா?

இலங்கையின் இனமுரண்பாடுகள் என்பவை, பௌத்த சிங்கள மேலாதிக்கச் சிந்தாந்தத்தின் வழியாகத் தோற்றம் பெற்ற ஒன்று. அது, வெளிப்படையாக மேலாதிக்க மனநிலையை வெளிப்படுத்தினாலும், அதன் இன்னொரு பக்கம் என்பது, அச்சவுணர்வினால் தோற்றுவிக்கப்பட்டது. அது, கடந்த கால தென் இந்தியப் படையெடுப்புகளின் வழியாக, தலைமுறைத் தலைமுறையாகக் கடந்தப்பட்டது.

அப்படியான ஓர் அரசியல் சித்தாந்தம், அதுசார் உள்ளுணர்வினால் வளர்ந்துவரும் சனக்கூட்டத்திடம், தமிழ் மொழியின் பாராம்பரியம் பற்றியும் அதுதான் பெருமைகள் பற்றியெல்லாம் பேசுவதென்பது,  உண்மையிலேயே பயனுள்ள ஒன்றா? ஏனெனில், இவ்வாறான பேச்சுகளை, தமிழ்த் தலைவர்கள், எழுபது ஆண்டுகளுக்கு முன்னரேயே பேசி விட்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கும் விக்னேஸ்வரனுக்கும், கிட்டத்தட்ட ஒரே வயது. அவர் வளர்ந்து வந்த காலம் தோறும் தமிழர் அரசியலைப் பார்த்திருந்தால், இன்று அவர் ஆற்றிய நாடாளுமன்ற உரைகள், எப்போதோ ஆற்றப்பட்ட ஒன்று என்பதை அவரால் புரிந்துகொண்டிருக்க முடியும்.

அவரது உரைகள், உண்மையிலேயே ஆக்கபூர்வமான உரைகள் என்றால், அவை தமிழ்ச் சூழலில் பெரியளவில் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறான காட்சிகள் பெரிதாக, பதிவாகவில்லை. மாறாக, தென் இலங்கையின் அடிப்படைவாதச் சக்திகளை, இனவாதத் தீயை, கக்கவே வைத்திருக்கின்றன.

இனவாதத் தீயை நாடு பூராகவும் பரவவிட்டு, அதில் குளிர்காய்ந்து கொண்டு, ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கட்டிலில் ஏறியிருக்கின்ற நிலையில், அது தொடர்பில் தமிழ் மக்கள் பேரச்சம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான நிலையில், அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று யோசிக்காமல், தமிழின் பெருமையை, தென் இலங்கைக்கு புரியவைத்தால் பிரச்சினை தீர்த்துவிடும் என்கிற உணர்திறனோடு இயங்கும் விக்னேஸ்வரனை எவ்வாறு காண்பது?

தென் இலங்கைக்கும் அதன் சித்தாந்தத்துக்கும், தமிழ் குறித்தும் அதன் பாரம்பரியம் குறித்தும் தெளிவாகவே தெரியும். அதுவும்தான், அவர்களின் பெரும் பயம் என்பதை முதலில் விக்னேஸ்வரன் புரிந்துகொள்ள வேண்டும். பழைய பெருமைகளைப் பேசுவது, ஒவ்வொருவருக்குமான உரிமை. அதில், தவறில்லை. ஆனால், பழைய பெருமை பேசிப் பேசியே அழிந்துவிட்ட ஒரு சனக்கூட்டமாகத் தமிழ் மக்கள் ஏற்கெனவே தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அப்படியான நிலையில், அதனை மீளவும் நிரூபிக்க வேண்டியதில்லை. நடைமுறை உலகை எதிர்கொள்ளும் சிந்தனைகளோடு அரசியலை நகர்த்துவதுதான்,  இன்றைய தேவை.

ஆக, விக்னேஸ்வரன் ஆற்றிய பழைய பெருமை உரைகள் எல்லாம், ஏதோ அரசியல் புரட்சிக் கருத்துகள் என்கிற தோரணயைத் தோற்றுவித்து, தென் இலங்கைக்கு எதிரான பெரிய கதாநாயகத் தோற்றத்தை விக்னேஸ்வரனை நோக்கிக் கட்டமைப்பதை, சம்பந்தப்பட்டவர்கள் முதலில் கைவிட வேண்டும். அதனை ஒரு சாக்காக வைத்து, விக்னேஸ்வரனின் கடந்தகாலத் தவறுகளை மறைப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இயற்கை நீதியின் வழி நோக்கின், டெனீஸ்வரனைப் பதவி நீக்கிய விடயத்தில், விக்னேஸ்வரன் குற்றமிழைத்தவர். பெருந்தன்மையின் வழியாகக் குற்றமிழைத்தவரை மன்னிப்பது மனித மாண்புதான். அந்த மாண்பை டெனீஸ்வரன் வெளிப்படுத்தினால் அவர் மெச்சப்பட வேண்டியவரே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X