2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்?

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா

கொரோனா வைரஸூம் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலமும் ஒட்டுமொத்தமாக, இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பெரும் தலையிடியையும் எதிர்பாராத சவால்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன.  

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் சாம்பலில் இருந்தும், மனவடுக்களில் இருந்தும் மீண்டெழுவதற்கு, இலங்கை முயற்சித்துக் கொண்டிருக்கையில், முதலாம் கட்டக் கொரோனா வைரஸ் அலையும் இரண்டாம் கட்ட அலையும், அரசமைப்பில் இன்னுமொரு திருத்தத்தைக் கொண்டு வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும் புதியபுதிய நெருக்கடிகளுக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன.   

1977ஆம் ஆண்டு, ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்தன, தனக்குக் கிடைத்த ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மன்னரைப் போல கோலோச்சினார். புதியதோர் அரசமைப்பைக் கொண்டு வந்து, அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி, அந்த நிறைவேற்றதிகாரத்தின் அனுகூலங்கள் எல்லாவற்றையும் சுகித்தார். அப்படியான ஒரு வாய்ப்பைக் காலம், அதற்கு, முன்னரும் பின்னரும் எந்த ஓர் ஆட்சியாளருக்கும் வழங்கவில்லை.    

இருப்பினும், நிறைவேற்றதிகாரத்தின் வரப்பிரசாதங்களை அதற்குப் பின்வந்த ஜனாதிபதிகள், தமது விருப்பத்துக்கு ஏற்றபடி பயன்படுத்தினர். உலக நாடுகள் பலவற்றின் ஜனாதிபதி முறைமையை விடவும், இலங்கையின் முறைமை பலம்பொருந்தியதாக நோக்கப்பட்டது. இந்த நிறைவேற்றதிகாரத்தில் சில அதிகாரக் குறைப்புகளை மேற்கொள்ளும் தோரணையிலேயே, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை மைத்திரி - ரணில் அரசாங்கம் கொண்டு வந்து, நிறைவேற்றியது.   

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை இல்லாது ஒழிப்பதற்காகவே, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை முன்வைப்பதாக, தற்போதைய அரசாங்கம் கூறியது. ஆனால், 19ஐ ஒழிக்கும் உள்ளடக்கங்களுக்கும் அப்பால், பல சூட்சுமமான திருத்த யோசனைகள் இதில் உள்ளதாக, சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.  20 தொடர்பில், இந்த அளவுக்கு எதிர்ப்பலை கிளம்புவதற்கு, சிக்கலானதும் சர்ச்சைக்குரிய சரத்துகளே காரணங்கள் எனலாம்.   

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய பொதுஜன பெரமுன, ஆறில் ஐந்தை வைத்துக் கொண்டு, ஜே.ஆர். செய்ததைப் போன்று, தமக்கு அவசியமான மாற்றங்களை, அரசமைப்பில் கொண்டு வருவதற்குப் பிரயாசைப்படுகின்றது.  

அந்தவகையில், அறுதிப் பெரும்பான்மை பலம் தம்மிடம் இருப்பதால், மிக இலகுவாகவே 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றிவிடலாம் என்று, அரசாங்கம் எண்ணியது. அந்த நம்பிக்கையிலேயே, அரசமைப்பு மறுசீரமைப்புக்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. 

இந்த நிலையிலேயே, கொரோனா வைரஸ் பரவுகையின் இரண்டாவது அலையும் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தின் மீதான எதிர்ப்பலையும் பின்னிப்பிணைந்து மேற்கிளம்பி இருக்கின்றன.   

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட இரண்டாம் கட்ட வைரஸ் பரவலானது, அந்தக் கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள், தொடர்பில்லாதவர்களை ஆட்கொண்டுள்ளது. இதன்மூலம், தொற்றுக்கு உள்ளானவர்களாக இதுவரை 2,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 20 இற்கு மேற்பட்ட மாவட்டங்களில் இன்று, கொரோனா வைரஸ் பரவியுள்ளது.   

எனவே, நாட்டை முற்றாக முடக்க வேண்டிய தேவை காணப்படுவதாகச் சொல்லப்படுகின்ற போதிலும், தற்போதுள்ள அரசியல், பொருளாதார, சமூக சூழலில் அவ்வாறான தீர்மானத்தை எடுக்க முடியாத இக்கட்டான நிலையில் அரசாங்கம் உள்ளது.    

எவ்வாறு இருப்பினும், நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கும் முடக்கமும் அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், இரண்டாவது அலை சற்று வீரியத்தோடு பரவி வருகின்றமையாலும் நாடு தழுவிய ரீதியில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குச் சமாந்தரமாகவே, உத்தேச திருத்தத்தை நிறைவேற்றுவதில் புதிய புதிய முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன.   

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலமானது, ஜனநாயகத்தை இல்லாதொழித்து, அதிகாரத்தை ஒருபுள்ளியில் குவிப்பதற்கான முயற்சி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அதற்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதித் தீர்மானத்தை, உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு எடுத்திருக்கின்றது.   

அதன்படி, முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தில் 3, 4, 14, 22 ஆகிய சரத்துகளை, அப்படியே நிறைவேற்றுவதாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, உயர்நீதிமன்றம் வியாக்கியானம் எழுதியுள்ளது. இதில் இரு சரத்துகளை, குழுநிலையின் போது நிறைவேற்றிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் கூட, 4ஆம், 22ஆம் சரத்துகளுக்கு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு கட்டாயமானது என்று, உயர்நீதிமன்றம் வியாக்கியானப்படுத்தி உள்ளது.    

இதுவொரு சட்டச் சிக்கலாகும். ஆயினும், அரசாங்கத்துக்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் நோக்கமில்லை என்று, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். குழுநிலை விவாதத்திலேயே திருத்தங்களைச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   

அதுமட்டுமன்றி, 20 என்பது தற்காலிக ஏற்பாடு என்பதுடன், 2021ஆம் ஆண்டு இறுதிக்குள், நிரந்தரமான புதிய அரசமைப்பொன்று கொண்டு வரப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அலி சப்ரி சுட்டிக்காட்டி இருக்கின்றார்.  

இது எதிர்பார்த்ததுதான். அதாவது, இந்தச் சிறிய காரியத்தை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாது. மாறாக, சட்டத்தின் நுணுக்கங்களைப் பயன்படுத்தியோ, சில சரத்துகளில் சிறிய மாற்றங்களைச் செய்தோ, ராஜபக்‌ஷர்களின் அரசாங்கம், 20 ஐ நிறைவேற்றிக் கொள்ளும் என்பதே, பரவலான அனுமானமாக இருக்கின்றது.   

ஆயினும், சிங்கள சமூகத்தின் மத்தியில் இருந்தும், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான கருத்துகள், முன்வைக்கப்பட்டுள்ளன. சுதந்திரக் கட்சி, அபிப்பிராய பேதங்களை வெளிப்படுத்தியிருப்பது மட்டுமன்றி, ராஜபக்‌ஷ ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட விஜேதாச எம்.பி. போன்றவர்களே, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலைமை நாளுக்குநாள் வலுத்து வருகின்றது.   

இந்தச் சந்தர்ப்பத்தில், பௌத்த மகா சங்கங்கள் இரண்டு இணைந்து, உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தீர்மானமொன்றை நிறைவேற்றியிருப்பதுடன், அது தொடர்பான அறிக்கையையும் பொதுவெளியில் வெளியிட்டுள்ளன. அமரபுர, ராமான்ய ஆகிய பௌத்த உயர் பீடங்களே இத்திருத்தத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றன. ஏனைய தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோது, அமைதி காத்த பௌத்த பீடங்கள், இன்று நீதிமன்ற வியாக்கியானத்தை அடுத்து, பகிரங்கமாக எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.   

ஜனநாயகம், நீதித்துறை சுதந்திரம், இறையாண்மை, பேச்சுச் சுதந்திரம் போன்றவற்றில், பாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற தொனியில், இப்பீடங்கள் கருத்து வெளியிட்டுள்ளன. 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றக் கூடாது என்பதுடன், ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிலைநாட்டக் கூடியதான ஒரு புதிய அரசமைப்பை வரைய வேண்டுமென்றும் மேற்படி பீடங்கள் கோரியுள்ளன.  

இந்த அறிக்கை தொடர்பாக, சில பௌத்த தேரர்கள் கருத்துக்கூற மறுத்தாலும், மதகுருமார் அரசியலில் தலையிடக் கூடாது என்ற அபிப்பிராயங்கள் இருந்தாலும் கூட, அமரபுர, ராமன்ய ஆகிய மகா சங்கங்களின் மேற்படி அறிக்கையானது, பெருந்தேசிய அரசியலின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமன்றி, 20 ஐ நிறைவேற்றுவதற்கான சவால்களை, மேலும் அதிகரித்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.  

அரசியலில் மதகுருக்களின் செல்வாக்கு இருக்கக் கூடாது என்ற கருத்தியல் வாதங்கள் அடிக்கடி முன்வைக்கப்பட்டாலும், இலங்கையில் யதார்த்தம் என்பது, வேறுமாதிரியானது என்பதை நாமறிவோம். பொதுவாக, இலங்கை அரசியலில் பௌத்த பீடங்கள், மகா சங்கங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஏன், ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கின்ற தனிப்பட்ட துறவிகளைக் கூட நாம் கண்டிருக்கின்றோம்.   

இலங்கை அரசியலைப் பொறுத்தமட்டில் அஸ்கிரிய, மல்வத்து பீடங்கள், அமரபுர, ராமான்ய நிக்காயக்கள் முக்கியமானவை. குறிப்பாக, மல்வத்து, அஸ்கிரிய பீடங்களே அதிக செல்வாக்கைச் செலுத்தி வருகின்றன. அதற்கடுத்த நிலைகளிலேயே மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ள இரு பீடங்களும் இருக்கின்றன என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.   

எவ்வாறிருப்பினும், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சரி, எல்லாப் பௌத்த பீடங்களுக்கும் மதிப்பும் மரியாதையும் வழங்குவது மரபு. பௌத்தத்துக்கான முன்னுரிமையை அரசமைப்பே வழங்குகின்றது. இந்நிலையில், பௌத்த மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள பொதுஜன பெரமுனவானது, அமரபுர, ராமன்ய ஆகிய மகா சங்கங்களின் ஆட்சேபத்தையும் மீறி, 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுமா என்ற கேள்வி இன்று பரவலாக எழுந்திருக்கின்றது.   

இலங்கை அரசியலை வழிநடத்திய வரலாறு, பௌத்த பீடங்களுக்கும் முக்கியமாகத் தேரர்களுக்கும் உள்ளது. அவர்களின் ஒப்புதல், ஆசி இன்றி முன்னைய அரசாங்கங்கள் அரசியல் நகர்வுகளைச் செய்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகும்.   
அந்த வகையில், கொரோனா வைரஸ் பரவுகை அலையை எதிர்கொள்வதுடன், 20ஆவது திருத்தம் தொடர்பான எதிர்ப்பலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பௌத்த பீடங்களுக்குத் தெளிவுபடுத்தியோ, அவர்களைச் சமாளித்தோ 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய இக்கட்டில், அரசாங்கம் இருக்கின்றது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .