2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அ.தி.மு.க அணிகளின் தீராத விளையாட்டு?

எம். காசிநாதன்   / 2017 ஒக்டோபர் 02 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்து, ஒரு வருடத்தை அண்மித்த நிலையில், அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்க தமிழக அரசே ‘விசாரணை ஆணையம்’ அமைத்திருக்கிறது.   

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி விசாரணை ஆணைக்குழுவின் நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளும் குறிப்பாக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து ‘விசாரணை ஆணையம்’ வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.   

முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு, ஜெயலலிதா சமாதியில் திடீர் தியானம் செய்து ‘தர்மயுத்தம்’ தொடங்கிய ஓ. பன்னீர் செல்வம், ‘உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டார். சசிகலா முதலமைச்சராக வருவதற்காக, தன் பதவியை இராஜினாமாச் செய்த பிறகு, ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை என்பது அ.தி.மு.கவுக்குள் இருந்து முதலில் வந்த கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.  

ஓ. பன்னீர்செல்வம் இராஜினாமாவைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றதால், அவர் பெங்களூர் சிறைக்குச் செல்லும் முன்பு, தேர்வு செய்தவர்தான் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. இவரும் சரி, சசிகலாவின் தயவில் அமைச்சர்களாக தொடர்ந்தவர்களும் சரி, பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை.   

‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு இருக்கும் போது, விசாரணை ஆணைக்குழு அமைக்க முடியாது’ என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் பெரும்பாலானோர் அறிவித்தார்கள். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிகள் இணைவதற்கு முன்பு தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் வைத்தது இரு கோரிக்கைகள்.   

முதல் கோரிக்கை சசிகலா பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட வேண்டும். இரண்டாவது கோரிக்கை ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிக்க, விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதுதான். இந்த இரு கோரிக்கைகளும் இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ஏற்கப்பட்டு, இந்த விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.  

அதேநேரத்தில் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை வரம்புகள் மிக முக்கியமானவை. முதல் வரம்பு. ‘அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள்’ பற்றி விசாரிக்கும் என்பதாகும். இது போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன, அவருக்கு அங்கு நேர்ந்தவை என்னென்ன என்பது குறித்து விசாரிக்கும் வரம்பாக இருக்கிறது.  

 இந்த விசாரணை வரம்புக்கு முதல் ஆளாக வரப் போகும் நபர் சசிகலாதான். ஏனென்றால் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு அருகில் இருந்தவர் சசிகலா மட்டுமே. இது பற்றி விசாரிக்க விசாரணை ஆணைக்குழு தரப்பில் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்படுமா? இன்னொரு மாநில சிறையில் இருப்பவரை விசாரணை ஆணைக்குழு முன்பு ஆஜராக அழைத்து வருவது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதெல்லாம் பரபரப்புக் காட்சிகளாக இருக்கப் போகிறது.   

ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு சசிகலாவே பொறுப்பு என்ற ரீதியில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில் விசாரணை ஆணைக்குழுவின் ‘போயல் கார்டன் இல்ல விசாரணை’ பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. அது சசிகலாவுடன் நிற்குமா அல்லது அவரது உறவினர்கள் வரை போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

இன்னொரு விசாரணை வரம்பு, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விசாரணை. இங்குதான் இடியாப்பச் சிக்கல் இருக்கிறது.   

ஏனென்றால், ஜெயலலிதா தனி ஆள் அல்ல; அவர் தமிழகத்தின் முதல்வராக அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகவே, அவரது பாதுகாப்புக்கு முதலும் முக்கியமானதுமான பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு. அதை இன்னும் மாற்றிச் சொல்வதென்றால், முதலமைச்சருக்கு உண்டு.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, முதலமைச்சராக இருந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அப்பல்லோவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் அமைச்சர்கள் அனைவரும் அப்பல்லோவில் முகாமிட்டிருந்தார்கள். முதலமைச்சரும் கூட அங்குதான் இருந்தார். தமிழகத்தின் ‘மினி தலைமைச் செயலகமே’ அங்கு செயல்பட்டது. தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் எல்லாம் அங்கு இருந்தார்கள்.

காவல்துறையின் ஒட்டு மொத்த பாதுகாப்பு வளையத்துக்குள் அப்பல்லோ மருத்துவமனை வந்தது. ஆகவே அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கும் போது, இவர்களிடம் எல்லாம் விசாரணை செய்ய வேண்டிய நிலை விசாரணை ஆணைக்குழுவுக்கு எழும். அந்தச் சிக்கலை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பது மில்லியன் டொலர் கேள்வியாகவே இருக்கிறது.  

இது ஒரு புறமிருக்க, ஜெயலலிதாவுக்கு முக்கிய சிகிச்சை கொடுத்த டொக்டர் ரிச்சர்ட் பீலே, இலண்டனில் இருந்து வந்தார். அது மட்டுமின்றி ஜெயலலிதாவின் சிகிச்சைகள் பற்றி ஆராய வந்த, ‘டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை’ மருத்துவர்கள் அப்பல்லோவின் சிகிச்சையை பாராட்டியிருக்கிறார்கள்.

ஐந்து முறை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் ஒத்துழைத்த ‘எய்ம்ஸ்’ டொக்டர்கள் எந்த கட்டத்திலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டவும் இல்லை. 

ஏன் மத்திய அரசுக்கே இது தொடர்பான அறிக்கை ஏதேனும் ‘எய்ம்ஸ் மருத்துவக் குழு’ அளித்துள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு முதலமைச்சரின் உடல் நிலை குறித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவர்களிடமோ அல்லது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடமோ விசாரித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கெல்லாம் மத்திய அரசுக்கு என்ன பதில் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

எல்லாவற்றையும் விட இரு முறை அப்பல்லோவுக்கு வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் ‘ஜெயலலிதா உடல் நிலை பற்றி’ நிச்சயமாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை கொடுத்திருக்க வேண்டும்.   

அந்த அறிக்கை என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. இப்படியொரு நிலையில் விசாரணை ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள அப்பல்லோ சிகிச்சை பற்றிய, இரண்டாவது வரம்பு படி விசாரணை நிறைவு பெறுவதற்கு மாநில அரசு, மத்திய அரசு உள்ளிட்ட இரு அரசுகளின் ஒத்துழைப்பும் விசாரணை ஆணைக்குழுவுக்குத் தேவைப்படும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.  

ஆகவே, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ‘விசாரணை ஆணைக்குழு’ அமைக்கப்பட்டு விட்டாலும், அதன் விசாரணை வரம்பை அரசு கொடுத்துள்ள மூன்று மாத காலத்துக்குள் விசாரித்து முடித்து விட முடியுமா என்ற இமாலய கேள்வி எழுகிறது.

இந்த கேள்வியின் பின்னணியில்தான் திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை எல்லாம், “விசாரணை ஆணைக்குழுவை விட சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்து வருகின்றன.   

ஏனென்றால், சி.பி.ஐ விசாரணை ஒன்றே ‘எல்லை கடந்து சென்றும்’ விசாரிக்கும் அதிகாரத்தை தன்னகத்தே பெற்றிருக்கிறது. அந்த அதிகாரம் ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி உண்மையான விசாரணை நடத்துவதற்கு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவுக்குத் தேவை என்பதால், இதை எப்படிப் பெறப் போகிறது இந்த ஆணையம் என்பது சுவாரஸ்யமான கேள்வியாக இருக்கிறது.   

இது ஒரு புறமிருக்க, எதிர்க்கட்சிகளை விட ஆளும் அ.தி.மு.கவுக்குள் உள்ள அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பேட்டிகளை ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் போதும் கொடுத்தார்கள். அவர் இறந்த பிறகும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். “அம்மா இட்லி சட்னி எல்லாம் சாப்பிடவில்லை.

நாங்கள் பார்க்கவே இல்லை. எங்களை மன்னித்து விடுங்கள்” என்று அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் உள்ள அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசனே அறிவித்திருப்பது மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.   

ஒரு நபர் விசாரணை ஆணைக்குழு விசாரணைக்கு அமைச்சர்களின் பேட்டிகள்தான் முதல் உபத்திரவமாக இருக்கப் போகிறது என்பது அனைவரும் எதிர்பார்க்கும் விடயமாகும். அமைச்சர்களின் பேட்டிகள், தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகை குறிப்புகள், இலண்டன் டொக்டர் ரிச்சர்ட் பீலே அளித்த பேட்டிகள், ‘எய்ம்ஸ்’ டொக்டர்கள் அளித்த அறிக்கைகள் அனைத்துமே ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் பற்றி நடைபெறும் விசாரணைக்கு அமைந்திருக்கும் சவால்கள்.  

 இந்தச் சவால்களை எப்படி சமாளித்து, விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியே வரப் போகிறது என்பதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் கூறப்படும் ‘மர்மங்களின்’ திரை விலகும் என்று நம்பலாம். அதுவரை விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படுவது ஓர் அரசியல் விளையாட்டு- அதுவும் அ.தி.மு.கவுக்குள் உள்ள பல்வேறு அணிகளின் ‘தீராத விளையாட்டாகவே’ இருக்கும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .