2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிகாரப் பரவலாக்கலா, அபிவிருத்தியா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, நவம்பர் 18ஆம் திகதி, இலங்கையின் ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்து, 24 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவர், அழைப்பின்றியும் ஒரு நாளுக்கு முன்னராவது அறிவிக்காமலும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார். 

அதேபோல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக, நவம்பர் 29 ஆம் திகதி, இந்தியாவுக்கு விஜயம் செய்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, நாடு திரும்பினார். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியொன்றுடனேயே நவம்பர் 19 ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் செய்து, ஜனாதிபதி கோட்டாபயவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, விரைவாக நாடு திரும்பினார். அதேமாதம் 29ஆம் திகதி, இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு அத்தோடு அவர் ஜனாதிபதிக்கு அழைப்பொன்றையும் விடுத்துவிட்டே சென்றுள்ளார். 

இலங்கையின் தலைவர் ஒருவர், தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக, இந்தியாவை நோக்கிப் பயணிப்பது, புதிய விடயம் ஏதுமில்லை. ஆனால், தாம் பதவிக்கு வந்து, இரண்டு வாரங்களாவது பூர்த்தியாவதற்கு முன்னரே, இந்தியப் பிரதமரைச் சந்தித்ததன் மூலம், ஜனாதிபதி கோட்டாபய, தமது வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்துள்ளார் என்பது தெளிவாகிறது. 

இலங்கை அரசியலில், இந்தியா எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு என்பதை, ஜனாதிபதி கோட்டாபய போல், வேறு எவரும் அறிந்துள்ளாரா என்பது சந்தேகமே. அதை அவர், புலிகளுக்கு எதிராகப் போர் நடைபெற்ற காலத்திலேயே, நன்றாக அறிந்து இருந்தார் என்பதை, பின்னர் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துகள் மூலம், விளங்கிக் கொள்ளலாம். 

‘இன்டியன் டிபென்ஸ் ரிவீவ்’ இணையத்தளத்தில், வி.கே. சசிகுமாருடன் 2010ஆம் ஆண்டு நடத்திய பேட்டியொன்றில், இலங்கைக்கு, இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் என்ன என்பதைக் கோட்டாபய விளக்கியிருந்தார்.

“இந்தியா என்பது, எமக்கு அருகில் உள்ள பாரியதொரு சக்தி. அத்தோடு, இலங்கையில் நடைபெறுபவற்றை ஆர்வத்துடன் நோக்கும், ஆறு கோடித் தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டுக்கு அருகில் எமது நாடு அமைந்து இருப்பதானது, எமக்கு மிகவும் சிக்கலானதொரு நிலைமையை உருவாக்கியிருந்தது. ஏனைய நாடுகளுக்கு, எம் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும்; அந்நாடுகள், அவ்வாறான தடைகளை விதிக்கும் என்ற நிலைமை இருந்த போதிலும், எமது போர் நடவடிக்கைகள் மீது, இராணுவ ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பலம், இந்தியாவிடம் மட்டுமே இருந்தது” என, கோட்டா அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். 

போர்க் காலத்தில், இந்திய நலன்களையும் கவனத்தில் கொண்டே, போர் தொடர்பான எமது முடிவுகளை எடுத்தோம் எனவும், அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். 

இந்தியா விடயத்தில், தாங்கள் எந்தளவு எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என்பதை, ‘பாரத் சக்தி’ இணையத் தளத்தின் பிரதம ஆசிரியர் நித்தின் ஏ. கொக்கலேயுடன், நவம்பர் 25 ஆம் திகதி கொழும்பில் வைத்து, கோட்டா நடத்திய பேட்டியின் போதும், தமது இந்திய விஜயத்தின் போது, ‘ஹிந்து’ பத்திரிகையின் சுஹாசினி ஹைதருடன் நடத்திய பேட்டியின் போதும் குறிப்பிட்டுள்ளார். 

கோக்கலே, தனது முதலாவது கேள்வியாகவே, “இந்தியா விடயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன” என்று கேட்ட போது, “இந்திய நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய எதையும் நாம் செய்ய மாட்டோம்” எனக் கோட்டா கூறியிருந்தார். சுஹாசினியிடமும் அவர் இதே கருத்தைக் கூறியிருந்தார்.

ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தைப் பற்றிச் செய்தி வெளியிட்ட ‘இந்தியா டுடே’ ஏடு, இலங்கை அரசாங்கத்துக்கு, அவர் வலியுறுத்திக் கூறிய ஒரு விடயத்தை மட்டுமே, வெளியிட்டு இருந்தது. அதாவது, “தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி,  கௌரவம் ஆகியவற்றை அடையும் வகையில், இலங்கை அரசாங்கம் இன நல்லிணக்கச் செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்பதே அவரது அந்தச் செய்தியாகும். 

அதேபோல், புதுடெல்லிக்குக் கோட்டா சென்றிருந்த போது, மோடியும் இதே கருத்தை, ஏறத்தாழ இதே சொற்களில் வலியுறுத்தியிருந்தார். அத்தோடு அவர், இந்த வசனத்தோடு இணைத்து, நல்லிணக்கச் செயற்பாடு என்றால், 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை பூரணமாக அமுலாக்குவதும் உட்பட்டதாகும் என்றும் கூறினார். 

இதனால், இலங்கையில் தமிழ்த் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மோடி 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்க வேண்டும் என்று கூறியதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, கோடிட்டுக் காட்டியிருந்தார். வேறு பல தமிழ்த் தலைவர்களும் 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்க வேண்டும் என, அதையடுத்துக் கூறியிருந்தனர்.

இதற்கு முன்னர் இருந்த, இலங்கைத் தலைவர்களைப் போலல்லாது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஒழிவு மறைவின்றியே, இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை, இந்தியாவில் இருக்கும் போதே வெளியிட்டார். வழமையாக, இதற்கு முன்னர் இந்தியத் தலைவர்கள், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக ஏதேனும் கூறினால், இலங்கைத் தலைவர்கள் அதை ஏற்காவிட்டாலும் அதை மறுத்துப் பேசியதில்லை. 

ஆனால், மோடியின் முன் அவரது கருத்தைக் கோட்டா மறுக்காவிட்டாலும், இந்தியாவில் இருந்தே அதை மறுத்து, இந்திய ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து இருந்தார். 

அவர், சுஹாசினி ஹைதருடன் நடத்திய பேட்டியின் போது, “13ஆவது அரசமைப்புத் திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்க முடியாது” என்று, திட்டவட்டமாகவே கூறினார். அந்தத் திருத்தம், அரசமைப்பின் ஓரங்கம் என்றும், அதில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பான வாசகங்கள் மட்டும், இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை என்றும், பெரும்பான்மை மக்கள் விரும்பாத அந்த வாசகங்களை, அமுலாக்க முடியாது என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

அதேவேளை, தாம் 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக, எதையும் செய்யப் போவதில்லை என்பதை, வேறு வார்த்தைகளிலும் அந்தப் பேட்டியின் போது எடுத்துரைத்தார். “30 வருடங்களுக்கு மேலாக, அதிகாரப் பரவலாக்கல், அதிகார பரவலாக்கல் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள்; ஆனால், எதுவும் நடைபெறுவதில்லை. தமிழ் மக்களுக்கு வேண்டியது தொழில்வாய்ப்பு, கல்வி போன்றவையே. அதையோ, அபிவிருத்தியையோ அவர்களுக்கு வழங்க வேண்டாம் எனச் சிங்கள மக்கள் கூறவில்லை” என, ஜனாதிபதி கோட்டா கூறியிருந்தார். 

கோக்கலேயுடன் நடத்திய பேட்டியின் போது, “நீங்கள் சிறுபான்மை மக்களுடன், நல்லிணக்கத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகிறீர்கள்” என்று கேட்டபோது, “அபிவிருத்தியே அதற்கான வழி;  கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்த் தலைவர்களும் சிங்களத் தலைவர்களும் மக்களை ஏமாற்றும் நோக்கில், நடைமுறைச் சாத்தியமில்லாதவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள். முதலில் நாம், எம்மால் செய்ய முடிந்தவற்றைப் பற்றிக் கவனம் செலுத்துவோம். இலங்கையர்களாக இந்த நாட்டில் வாழ்வதற்கும் நல்ல கல்வியையும் நல்லதொரு வாழ்க்கையையும் நல்லதொரு தொழிலையும் கௌரவமான வாழ்க்கையையும் பெறுவதற்கான சந்தர்ப்பத்தை, எல்லோருக்கும் வழங்குவது தொடர்பாகக் கவனம் செலுத்துவோம்” என்று ஜனாதிபதி கோட்டாபய பதிலளித்துள்ளார். 

“நாம், இந்திய நலன்களுக்கு குந்தகம் விளைவிப்பதில்லை. அதேவேளை, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை, நாம் அபிவிருத்தி செய்வோம். ஆனால், அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில், தற்போதுள்ளதை விட, எதையும் செய்ய மாட்டோம் என்பதே, இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  விடுத்துள்ள செய்தியாகும். 

தமிழருக்காக இந்தியா முன்வருமா?

  இந்தியா ஒரு வல்லரசு; இலங்கை ஒரு சிறிய நாடு. ஆனால், இலங்கையில் புதிய ஜனாதிபதியொருவர் பதவியேற்றவுடனேயே, ஏனைய நாடுகளுக்கு முன்னர், இந்தியப் பிரதமர் தமது வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பியதும், இலங்கை ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வாரங்களுக்குள், அவரைத் தமது தலைநகருக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியதும், இந்தியாவுக்கு இலங்கை எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதையே, எடுத்துக் காட்டுகிறது.  

இலங்கை அரசாங்கம், மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இருந்தே சீனாவுடன் மேற்கொண்டு வரும் நெருங்கிய உறவை, எப்போதும் சந்தேகக் கண் கொண்டே, இந்தியா நோக்கியது. 

பிராந்தியத்தில், தாமே பெரிய அண்ணனாக இருக்க வேண்டும் எனக் கருதும் இந்தியா, சீனா விடயத்தில் இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்புகிறது. அத்தோடு, இலங்கைத் தமிழர்கள் விடயத்தில், தமிழ் நாட்டில் கொந்தளிப்புகள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். அதுவே, இந்தியாவுக்கு இலங்கையின் முக்கியத்துவமாகும். 

“நீங்கள், சீனாவுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது” என, நேரடியாக இலங்கையிடம் இந்தியாவால்க் கூற முடியாது. அது, சீனாவுடன் அநாவசிய முரண்பாட்டைத் தோற்றுவிக்கும். எனவே, இந்த விடயத்தில், இலங்கை அரசாங்கத்தை ஆட்டுவிக்க, இந்தியாவுக்கு ஒரு தூண்டுகோல் வேண்டும்; அதுதான், இலங்கையின் இனப்பிரச்சினை. 

“தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை அடையும் வகையில், இலங்கை அரசாங்கம் இனநல்லிணக்கச் செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்பது, ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது, வலியுறுத்திய ஒரு முக்கிய விடயமாகும். இதை மோடியும் கோட்டாவின் இந்திய விஜயத்தின் போது வலியுறுத்தினார்.   

அவ்வாறாயின், இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியா இன்னமும் அவ்வளவு அக்கறையாக இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். அவ்வாறுதான், இந்தியா பல சந்தர்ப்பங்களில் காட்டிக் கொள்கிறது. இம்முறையும் அதுவே நடைபெற்றுள்ளது. 

ஆயினும், கடந்த காலத்தில் இந்தியா அந்த விடயத்தில், அவ்வளவு ஈடுபாட்டைக் காட்டவில்லை என்பதும் உண்மையே. 13 ஆவது திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்க வேண்டும் என்பதை, 2014 ஆம் ஆண்டிலும் 2015 ஆம் ஆண்டிலும் மோடி கூறியிருந்தார். இது புதிய விடயமல்ல!

1990 ஆம் ஆண்டு, இந்தியப் படைகள் இலங்கையிலிருந்து விலகிச் சென்றதன் பின்னர், இந்திய அரசாங்கம், இலங்கை விடயத்தில் கடும் போக்கை ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. இந்தியாவின் கண்ணோட்டத்தில், அதற்கான தேவையும் இருக்கவில்லை. ஏனெனில், அதன் பின்னர் இலங்கை அரசாங்கம், இந்திய நலன்களை, மோசமான முறையில் பாதிக்கும் வகையில், நடந்து கொள்ளவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினையை, இந்தியா தனது நலன்களுக்காகவே பாவிக்கிறது. இது, அந்நாடு 1980 களில் இருந்தே கடைப்பிடித்து வரும் உத்தியாகும். 1977 ஆம் ஆண்டு, இலங்கையில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், கடும் அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தது. 

அக்காலத்தில், முழு உலகமும் அமெரிக்கச் சார்பு நாடுகளாகவும் சோவியத் ஒன்றியம் சார்பான நாடுகளாகவும் பிரிந்து செயற்பட்டு வந்தன. இந்தியா அப்போது, சோவியத் ஒன்றியத்தின் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. 

எனவே, அமெரிக்கச் சார்புக் கொள்கையைக் இலங்கை கடைப்பிடித்ததனால், இதைத் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, இந்தியா கருதியது. இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இந்தியா எண்ணியது. அதன் விளைவாகவே, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசாங்கம், அக்காலத்தில் இலங்கையில் உருவாகியிருந்த தமிழ்ப் பிரிவினைவாதக் குழுக்களுக்கு ஆயுதம், பணம், ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்கியது. 

ஆனால், இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவாவதையும் இந்தியா விரும்பவில்லை. ஏனெனில், இலங்கையில் தனித் தமிழ் நாடொன்று உருவானால், இந்தியாவில் தமிழ் நாட்டிலும் பிரிவினைவாதம் தலைதூக்கும் என்பது, இந்தியத் தலைவர்களுக்குத் தெரியும். எனவே, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர், இந்தியா, இலங்கைத் தமிழர்களை ஏறத்தாழ கைவிட்டுவிட்டது என்றே கூற வேண்டும்.

புலிகளுக்கு எதிரான பேரின் போதும், இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா உதவியது. அதன் பின்னர், இறுதிப் போரின் உச்சக் கட்டத்தில், அதாவது 2008 ஆம் ஆண்டு, இலங்கையின் உயர்நீதிமன்றம், இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அந்த இணைப்பை இரத்துச் செய்த போது, இந்தியா மௌனமாகவே இருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தொடர்ந்தும் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, இந்தியா இனிமேலும் வலியுறுத்தப் போவதில்லை என, ஜெய்சங்கரே இந்திய வெளியுறுவுச் செயலாளராக 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கூறியிருந்தார். அது தான், தற்போது இந்தியாவின் நிலைப்பாடாகும். 

இப்போது, இலங்கை அளவுக்கு அதிகமாகச் சீனாவை நெருங்காமலிருக்கவே இந்தியா, தமிழரைப் பற்றிப் பேசுகிறது. அதனை அறிந்தே ஜனாதிபதி கோட்டாபய “நாம், இந்திய நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் எதையும் செய்ய மாட்டோம்” என்கிறார். இந்தநிலை தொடருமேயல்லாது, இந்தியாவிடம் இலங்கைத் தமிழர்கள் எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .