2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அதிகாரம் இல்லாத ஜனாதிபதிப் பதவிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது, அக்கட்சியின் சார்பில் நிறுத்தப் போவது, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையா அல்லது, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவையா அல்லது, சபாநாயகர் கரு ஜயசூரியவையா என்பது, இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது.    

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, அதன் வேட்பாளராக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்த வேண்டும் என, அக்கட்சியில் பெரும்பாலானவர்கள் கோருவதாகத் தெரிகிறது. ஆனால், அக்கட்சியை வழிநடத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தமது சகோதரரான கோட்டாவை, இன்னமும் அங்கிகரிக்கவில்லை. கோட்டா, உண்மையிலேயே, அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்து கொண்டாரா என்பதும் தெளிவில்லை?  

ஜனாதிபதித் தேர்தலின் போது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன செய்யப் போகிறார்? அவரைப் போட்டியில் நிறுத்தப் போவதாக, அவரது கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர போன்றோர்கள் கூறி வந்த போதிலும், வெற்றி பெறுவது ஒரு புறமிருக்க, தேர்தலின் போது, அவரால் ஓரளவு தாக்கத்தையாவது ஏற்படுத்த முடியுமா என்பதும் சந்தேகமே.   

இவைதான், இந்நாள்களில் ஊடகங்களில் பேசுபொருள்களாக இருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதித் தேர்தலின் போது, ஒரு வேட்பாளரை நிறுத்துவதாகக் கூறுகின்றது. ஆனாலும் அது, பெரிதாக மக்கள் மத்தியில் எடுபடவில்லை.  

 சட்டத்தரணி என்ற நிலையை இழந்த, நாகாநந்த கொடிதுவக்கு போன்ற சிலரது பெயர்களும் ஜனாதிபதி வேட்பாளர்களாக அடிபட்ட போதிலும், பொதுவாக மக்கள் அவற்றைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.  

அரசியலில் ஆர்வமுள்ளவர்கள், ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு இவ்வாறு, இந்நாள்களில் முக்கியத்துவத்தை அளித்த போதிலும், 19ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஜனாதிபதிப் பதவிக்கு முன்னர் இருந்த அதிகாரமோ, அந்தஸ்தோ இப்போது இல்லை.   

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை, நாட்டில் அமுலில் உள்ளதாகக் கருதப்பட்ட போதிலும், நாட்டில் மிகவும் பலவீனமானதொரு ஜனாதிபதிப் பதவியே, இப்போது இருக்கிறது. இந்த உண்மையை, அண்மைக் காலச் சம்பவங்கள் எடுத்துக் காட்டியுள்ளன. 

எனவே, இந்தத் தேர்தலுக்கு, இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.  

1978ஆம் ஆண்டு, நிறைவேற்றப்பட்ட குடியரசின் இரண்டாவது அரசமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவி, உண்மையிலேயே ஒரு சர்வாதிகாரிக்கு உரிய வகையிலேயே, அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தது.   

ஜனாதிபதியே, அமைச்சர்களின் எண்ணிக்கையையும் அவர்களுக்கான அமைச்சுப் பொறுப்புகளையும் அவற்றின் கீழான அலுவல்களையும் தீர்மானிப்பார். அவருக்குப் பிரதமரைப் பதவி நீக்கம் செய்யவும் ஒரு வருடத்தில், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் அதிகாரம் இருந்தது.  

முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர், உயர் மட்ட நீதிபதிகள், சட்ட மாஅதிபர், தேர்தல் ஆணையாளர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற, சகல உயர் பதவிகளுக்கும் ஜனாதிபதியே ஆள்களை நியமிப்பார். அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு இருந்தது.

எனவே, அக்காலத்தில் சகல உயர் மட்ட அதிகாரிகளும் ஜனாதிபதிக்குப் பயந்தே செயற்பட்டனர். எனவே, அக்கால ஆட்சி, உண்மையிலேயே சர்வாதிகாரமாகவே இருந்தது.   

2001ஆம் ஆண்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னர், ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, மக்கள் விடுதலை முன்னணி, சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியோடு இணைந்து, ‘நன்நடத்தை அரசாங்கம்’ என்ற பெயரில், 20 அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்கியது.   

அக்காலத்தில், மக்கள் விடுதலை முன்னணியின் வற்புறுத்தலில், சந்திரிகா அரசாங்கம் சுயாதீன ஆணைக்குழுக்களை அறிமுகப்படுத்தும் அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது. அதன்படி, மேற்படி நியமனங்களை ஜனாதிபதி, தம் விருப்பப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.   

அரசமைப்புச் சபை, சுயாதீன ஆணைக்குழுக்களின் பரிந்துரை அல்லது ஒப்புதலுடனேயே, ஜனாதிபதி அந்நியமனங்களை மேற்கொள்ள வேண்டும். அரசமைப்புச் சபையின் பரிந்துரைப் படியே, சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவும் வேண்டும்.  

பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேன்முறையிட்டு நீதிமன்றத்தின் தலைவர், அந்நீதிமன்றத்தின் நீதிபதிகள், நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்ட மாஅதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ் மாஅதிபர், நாடாளுமன்ற ஒம்புட்ஸ்மன், நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் போன்ற பதவிகளுக்கு, ஆள்களை நியமிக்கும்போது, அரசமைப்புச் சபைக்கு, ஜனாதிபதி பரிந்துரை செய்து, அச்சபையின் ஒப்புதலின் பின்னர், ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுவர்.   

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2010ஆம் ஆண்டு, அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தின் மூலம், இந்த அரசமைப்புச் சபையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் இரத்துச் செய்து, முன்னரைப் போல், தாமே சகல நியமனங்களையும் செய்யும் வகையில் சட்டத்தை மாற்றினார்.   

தற்போதைய அரசாங்கம், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்து, மீண்டும் அரசமைப்புச் சபையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் இயங்கச் செய்தது. 

அத்தோடு, அத்திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் குறைக்கும் வகையில், சில பிரமாணங்களையும் அறிமுகப்படுத்தியது.   

அதன்படி, ஜனாதிபதி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் வாசகம் நீக்கப்பட்டது. பிரதமருடன் கலந்தாலோசித்தே, அமைச்சரவையை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். அரசமைப்புச் சபைக்கான பெயர்களை, சபாநாயகர் பரிந்துரை செய்யும் போதும், அச்சபை, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான பெயர்களைப் பரிந்துரை செய்யும் போதும், ஜனாதிபதி, 14 நாள்களுக்குள் அவற்றைப் பற்றிய தமது கருத்தைத் தெரிவிக்காவிட்டால், அந்நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகக் கருதப்படும். இவ்வாணைக்குழுக்கள், நாடாளுமன்றத்துக்கே வகை சொல்ல வேண்டும்.   

ஜனாதிபதிக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்ற வாசகம் மாற்றப்படவில்லையாயினும், ஜனாதிபதி செய்த ஒரு காரியம் தொடர்பாக, சட்ட மாஅதிபருக்கு எதிராக, அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்து, அதன் மூலம், ஜனாதிபதியின் செயல் தொடர்பாகத் தீர்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.   

கடந்த நவம்பர் மாதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்த போது, அது சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு, அவ்வாறே பெற்றுக் கொள்ளப்பட்டது.  

அதாவது, இப்போது ஜனாதிபதிக்குச் சுயமாக எதையும் செய்ய முடியாது. உயர் பதவிகளுக்கு, ஆள்களை நியமிக்கவோ, அவர்களைப் பதவி நீக்கம் செய்யவோ முடியாது. பிரதமரின் ஆலோசனையின் படியே, அமைச்சர்களை நியமிக்க வேண்டும்.   

அரசாங்கம் எதைச் செய்தாலும், பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது. இவ்வாறான நிலையில், அரசாங்கத்தைக் கலைப்பதென்றாலும் அதற்கும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தில், நான்கரை ஆண்டுகள் செல்லும் வரை, காத்திருக்க வேண்டும். அதன் பின்னர், கலைப்பதிலும் அர்த்தமும் இல்லை. போதாக்குறைக்கு, ஜனாதிபதியின் செயல்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யவும் முடியும்.  

அவ்வாறாயின், இவ்வாறான ஜனாதிபதி பதவி எதற்கு? இவ்வாறானதொரு ஜனாதிபதியைப் பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து, தேர்தல் நடத்திப் பொது மக்களின் வாக்கினால் தெரிவு செய்ய வேண்டுமா?   

இந்தியாவைப் போல், நாடாளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யலாமே! 
கோட்டா, ரணில், சஜித், மைத்திரி போன்றோர் அதிகாரம் இல்லாத ஜனாதிபதி பதவிக்காக, ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? அப்பதவிக்கான சலுகைகளுக்காகவா?  

ஜனாதிபதி-பிரதமர் மோதல், அடுத்த அரசாங்கத்திலும் தொடரலாம்

ஏதாவது ஒரு வகையில், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர், ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, அடுத்த பொதுத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைத்ததாக வைத்துக் கொள்வோம்.   

அல்லது, பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஐ.தே.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றது என்று வைத்துக் கொள்வோம். இப்போது போலவே, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல், அப்போதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். காரணம், அரசமைப்பின்  19ஆவது திருத்தமே ஆகும்.  

இத்திருத்தத்தின் பிரகாரம், அரசமைப்புச் சபையினதும் பிரதமரினதும் ஒப்புதலின்றி, ஜனாதிபதி எதையும் செய்ய முடியாது.   

புதிய நாடாளுமன்றமொன்று, முதன் முறையாகக் கூடி, நான்கரை ஆண்டுகள் சென்ற பின்னர், அதைக் கலைப்பதை மட்டுமே, ஜனாதிபதி எவரது ஒப்புதலும் இன்றிச் செய்ய முடியும். ஆனால், அரசாங்கத்தின் பணிகளுக்கு, முட்டுக்கட்டைகளைப் போட அவருக்கு அதிகாரம் இருக்கிறது.  

உதாரணமாக, அமைச்சரவையைக் கூட்டாமல், ஜனாதிபதி இருக்கலாம். ஜனாதிபதியே, அமைச்சரவையின் தலைவர் என, அரசமைப்புக் கூறுகிறது. அண்மையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வதிகாரத்தை ஒரு வாரம் பரீட்சித்துப் பார்த்தார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் ஒரு வாரம் அமைச்சரவையைக் கூட்டாமல் இருந்தார்.  

அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமானம் செய்து வைக்காமலும், ஜனாதிபதி இருக்கலாம். அப்போது, அரசாங்கம் செயலற்றுப் போகலாம். அமைச்சரவை மாற்றங்களையும் செய்யாமல் இருக்கலாம். ஆனால், அதில் என்ன பயன்?   

2017ஆம் ஆண்டு, பிரதமர் தலைமையிலான தேசியப் பொருளாதார குழுவைக் கலைத்து, ஜனாதிபதி, தமது தலைமையில், தேசியப் பொருளாதார சபையொன்றை உருவாக்கினார். ஆனால், அமைச்சரவையின் உதவியின்றி, தேசியப் பொருளாதார சபையை ஜனாதிபதியால் வழிநடத்த முடியாது.  

தமது அதிகாரங்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பறித்துக் கொண்டுள்ளதாக, இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டுகிறார். உண்மையில், இதற்காக அவரும் கடுமையாக உழைத்தார் என்பதை, ஜனாதிபதி மறந்துவிட்டார் போலும்.   

ஜனாதிபதியின் அதிகாரங்களின் பெரும் பகுதி, அரசமைப்பின்  19ஆவது திருத்தத்தின் ஊடாக, இப்போது, அரசமைப்புச் சபை மூலம், நாடாளுமன்றத்திடம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் சபாநாயகர், அநேகமாகப் பிரதமரின் கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார். எனவே, ஜனாதிபதியின் அதிகாரங்கள், பிரதமரிடம் சென்றடைந்துள்ளது என்றும் கூறலாம்.  

இதற்கு, ஜனாதிபதி மைத்திரி, எவரையும் குறை கூற முடியாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து, நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தையும் நாடாளுமன்றத்திடம் கையளிப்பதே, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேன வழங்கிய பிரதான வாக்குறுதியாகும்.   

ஆயினும், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றில்லாமல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை, முற்றாக இரத்துச் செய்ய முடியாது என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலேயே, 19ஆவது திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் அதிகாரங்கள், கூடியவரை குறைக்கப்பட்டன.   

அத்திருத்தத்தை நிறைவேற்ற, 2015ஆம் ஆண்டு, ஐ.தே.க தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு வாக்குப் பலம் இருக்கவில்லை. அப்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த, ஜனாதிபதி சிறிசேனவே, மஹிந்த ஆதரவாளர்களைப் பணிய வைத்து, அத்திருத்தத்தை நிறைவேற்றச் செய்தார்.   

அந்தத் திருத்தத்தை, இப்போது பலர் விமர்சிக்கின்றனர். மஹிந்த ராஜபக்‌ஷவும் விமர்சிக்கிறார். ஆனால், அவரது ஆதரவாளர்களே அதனை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கி, கூடுதலான வாக்குகளை வழங்கியிருந்தார்கள். ஜயம்பதி விக்கிரமரத்ன எம்.பியும் இதை, அண்மையில் விமர்சித்து இருந்தார். அவர், அத்திருத்தத்தை வரைவதில் முக்கிய பங்காற்றியவராவார்.   

உண்மையிலேயே, என்ன நடந்தது என்றால், சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படாமல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைப் பூரணமாக இரத்துச் செய்ய முடியாது என, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, ஜனாதிபதியின் அதிகாரங்களில் ஒரு பகுதி மட்டும், நாடாளுமன்றத்திடம் கைமாறியது. அதன் காரணமாக, ஜனாதிபதி, பிரதமர் என்ற இரண்டு அதிகார மய்யங்கள் உருவாகியுள்ளன.   

மஹிந்த ராஜபக்‌ஷ, சர்வாதிகாரியாக செயற்பட்டமையாலேயே, பலர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய உடன்பட்டனர். ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்துச் செய்த பின்னர், மோசமான பிரதமர் ஒருவர் தெரிவானால், என்ன செய்வது என்ற கேள்வியை, அப்போது எவரும் எழுப்பவில்லை. பிணைமுறி விவகாரம் போன்ற பிரச்சினைகளால், இப்போது சிலர் அக்கேள்வியை எழுப்புகிறார்கள்.   

உண்மையிலேயே, இதற்குத் தீர்வு காண்பது கடினம். ஏனெனில், நிறைவேற்று அதிகாரம் என்பது, ஒன்றில் ஜனாதிபதியிடம் அல்லது பிரதமரிடம் குவியும். அவ்வதிகாரங்கள் இல்லாமல் போய்விடாது. அதிகாரம், ஊழலுக்கு இட்டுச் செல்லும்.   

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் கீழ், ஜனாதிபதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. பிரதமரை, நாடாளுமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கலாம். ஜனாதிபதியின் தலைமையிலான ஆட்சி முறைக்கும், பிரதமர் தலைமையிலான ஆட்சி முறைக்கும் இடையில், அவ்வளவு தான் வித்தியாசம்.   

நிறைவேற்று அதிகாரங்களில் அரைவாசி, ஜனாதிபதியிடமும் மற்றைய அரைவாசி, பிரதமரிடமும் இருக்கும் நிலையிலேயே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப் போகிறது. எனவேதான், அடுத்த அரசாங்கத்திலும் ஒரே கட்சியினராக இருந்தாலும் ஜனாதிபதி, பிரதமர் மோதல் இடம்பெறும் வாய்ப்புகள் இருக்கிறன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .