2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அந்தரத்தில் தொங்கும் அரசமைப்பு முயற்சிகள்

Gopikrishna Kanagalingam   / 2017 ஒக்டோபர் 26 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இப்போது அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன, 2014ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி, எதிரணியின் பொது வேட்பாளராகத் தன்னை அறிவித்து, அதன் பின்னர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்த போது, அதில் முக்கியத்துவம் பெற்றிருந்த விடயமாக, அரசமைப்புச் சீர்திருத்தம் காணப்பட்டது. பின்னர், ஓகஸ்ட் 2015இல் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து உருவான தேசிய அரசாங்கத்தின்கீழ், இது தொடர்பான கலந்துரையாடல்கள் அதிகரித்தன.  

அரசமைப்பு உருவாக்க முயற்சிக்காக, முழு நாடாளுமன்றமுமே அரசமைப்புச் சபையாக உருவாக்கப்பட்ட போது, சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அதன் பின்னர், அரசமைப்புத் தொடர்பில் பெருமளவிலான கவனம், பரந்தளவில் காணப்பட்டிருக்கவில்லை.  

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால வரைவு அறிக்கையை, இவ்வாண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்ததைத் தொடர்ந்து தான், அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள், ஏராளமாக அதிகரித்திருக்கின்றன. அரசியல்வாதிகள், ஊடகங்கள் தொடக்கம் சமூக ஊடக இணையத்தளப் பயனர்கள், தேநீர்க் கடையில் தேநீர் அருந்துவோர் வரை என, இக்கலந்துரையாடல்கள் நீண்டிருக்கின்றன.  

இந்த இடைக்கால அறிக்கையில் காணப்படும் சிறப்பம்சம் என்னவென்றால், இன முரண்பாட்டில் பிரதானமாகச் சம்பந்தப்பட்ட பிரதான இரு தரப்புகளான சிங்களவர்களையும் தமிழர்களையும், இது கோபப்படுத்தியிருக்கிறது. அதேபோல, இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டாலும், பிரதான இனப்பிரச்சினை காரணமாகப் பெருமளவுக்குப் பிரச்சினைகள் மீது கவனஞ்செலுத்தப்படாத முஸ்லிம்களும், இதை எதிர்த்திருக்கிறார்கள். 

இந்த மூன்று தரப்புகளும், தங்கள் தரப்புக்கான உரிமைகள் வழங்கப்படவில்லை அல்லது எதிர்பார்த்த விடயங்கள் வழங்கப்படவில்லை என்று கூறுகின்றன. சிங்களத் தரப்போ, தங்களுடைய உரிமைகளும் சலுகைகளும் பறிக்கப்படுகின்றன என்கிறது. தமிழர் தரப்போ, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எந்த முயற்சிகளும் இதில் இல்லை என்கிறது. முஸ்லிம் தரப்போ, மற்றைய இரண்டு தரப்புகள் மீது காணப்பட்ட கவனம், தங்கள் மீது காட்டப்படவில்லை என்கிறது.  

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை, ஆங்கிலத்தில் 96 பக்கங்களையும் தமிழில் 116 பக்கங்களையும் சிங்களத்தில் 89 பக்கங்களையும் கொண்டுள்ளது. ஆனால், இது தொடர்பான கலந்துரையாடல்கள், சில விடயங்களுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ போன்றோர், இடைக்கால அறிக்கையில் தாங்கள் ஏற்றுக்கொள்ளாத விடயங்கள் என, கிட்டத்தட்ட அறிக்கையின் முழுவதையும் சுட்டிக்காட்டுகின்ற போதிலும், பொதுவான கலந்துரையாடல் என்பது, பிரதானமான சில விடயங்களையே மையமாகக் கொண்டுள்ளது.  

இலங்கை அரசின் தன்மை, பௌத்தத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமை ஆகியன தான், முன்னுரிமை பெறும் இரண்டு விடயங்களாக உள்ளன. அடுத்ததாக, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஆகியன, அடுத்தகட்டமாக, அதிக கவனத்தை ஈர்த்துள்ள விடயங்களாக உள்ளன.  

இலங்கையில் சமஷ்டி முறையைக் கொண்டுவர வேண்டுமென்பது, பெரும்பாலான தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருந்தாலும் கூட, அதைக் கொண்டுவரப் போவதாக தமிழ் அரசியல்வாதிகள் உறுதியளித்திருந்தாலும் கூட, யதார்த்தத்தில் அது சாத்தியமானதா என்ற கேள்வியும் கூடவே இருக்கிறது. வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியதைப் போன்று, சமஷ்டி என்பது, தீய ஒரு சொல்லாக்கப்பட்டு விட்டது. சமஷ்டித் தீர்வு என்பதை, தெற்கில் கொண்டுபோய், மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது, தற்போதைய நிலையில் சாத்தியமில்லாத ஒன்றாகவே காணப்படுகிறது.  

இதனால் தானோ என்னவோ, தற்போது காணப்படும் ஒற்றையாட்சி என்பதை நீக்கி, “ஒருமித்த நாடு” (அல்லது ஏகிய ராஜ்ய) என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டது.

ஒற்றையாட்சிக்கான ஆங்கிலமான “unitary state” என்பது, வெளிநாடுகளில் பல்வேறு விதமாக வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளமையால், அதைப் பயன்படுத்தாமல், ஒற்றையாட்சியைப் பலப்படுத்துவதற்காகவே “ஒருமித்த நாடு” என்பது பயன்படுத்தப்படுகிறது என அரசாங்கத் தரப்புக் கூறினாலும், அதை ஏற்றுக் கொள்வதற்கு, அரசாங்கத்தின் விமர்சகர்கள் தயாராக இல்லை என்பதே உண்மையானது.  

அதேபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, “ஒற்றையாட்சியை நீக்கிவிட்டோம்” என்று தமது மக்களிடம் காட்டுவதற்கு, இந்த மாற்றம் அவசியமானது. ஆகவே, ஒருமித்த நாடு என்பதற்கு, தெற்கில் “ஒற்றையாட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது” என்பதுவும், வடக்கில் “ஒற்றையாட்சியின் தன்மை மாற்றப்பட்டுள்ளது” என்பதுவும் விளக்கமாக வழங்கப்படலாம். எனவே தான், ஒற்றையாட்சி என்ற சொற்பிரயோகத்துக்கு மீண்டும் செல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பாமல் இருக்கலாம்.  

அதேபோல, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற விடயத்திலும், இரு தரப்புகளுமே வெவ்வேறான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. பௌத்தத்துக்கு முன்னுரிமை என்பதில் சிறிய விட்டுக்கொடுப்புகளைக் கூட வழங்காமல் இருக்க வேண்டுமென, பெரும்பான்மையினத் தரப்புகள் எண்ணுகின்றன. அதில் வழங்கப்படும் விட்டுக்கொடுப்பு, தங்களுக்கு ஆபத்தானது என, அத்தரப்புகள் கருதுகின்றன.  

மறுபக்கமாக, மதச்சார்பற்ற நாட்டை விரும்பும் தமிழ்த் தரப்புகள், ஆகக்குறைந்தது “ஏனைய மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும்” என்பதையாவது சேர்க்க எதிர்பார்க்கின்றன. பௌத்தம் மீதான தமிழ்த் தரப்பின் பார்வையைப் புரிந்துகொள்வது இலகுவானது. பௌத்தத்தை, சிங்கள ஆதிக்க மனப்பாங்கின் ஓர் அங்கமாகவே, தமிழ் மக்கள் கருதுகின்றனர். வடக்கில் ஆங்காங்கே அடிக்கடி முளைக்கும் புத்தர் சிலைகள், அவர்களின் இவ்வெண்ணங்களில் முக்கிய தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன.  

இவ்வாறு, இரு தரப்புகளும் வெவ்வேறான பார்வைகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், வடிவேலுவின் “ஆணியே பிடுங்க வேணாம்” பாணியில், “புதிய அரசமைப்பும் வேண்டாம். இருப்பதில் திருத்தமும் வேண்டாம்” என்று கூறும் கருத்துகள் அதிகரித்திருப்பதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது. இக்கருத்துகள் தான், அரசமைப்பின் அடுத்தகட்ட நகர்வுகளை அப்படியே நிறுத்திவிடும் ஆபத்தை வழங்கியிருக்கின்றன.  

கரக சபாக்கள் என அழைக்கப்படும், பௌத்த மத பீடங்களின் நிர்வாக சபைகள் தான், இம்முடிவுகளை எடுப்பதில் முன்னிலை வகிக்கின்றன. இதில் “முடிவு” என்ற சொல்லின் பயன்பாடு முக்கியமானது. அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் இணைந்த நிர்வாக சபை, இந்த முடிவை எடுத்த போது, “புதிய அரசமைப்போ அல்லது தற்போதிருக்கின்ற அரசமைப்பில் திருத்தங்களோ தேவையில்லை என நாம் முடிவுசெய்திருக்கிறோம்” என்று தான் அறிவிக்கப்பட்டது. இது, சாதாரணமான, எதேச்சையான மொழிப் பாவனையாக இருக்கலாம். இல்லாவிடில், இலங்கை அரசியல் பௌத்த மத பீடங்கள், முடிவெடுக்கும் அதிகாரங்களை எவ்வாறு கொண்டிருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதாக அமையலாம்.  

மேற்படி நிர்வாக சபை தவிர, கோட்டே ஸ்ரீ கல்யாணி சமகிரி தர்ம மகா சங்கமும், மேற்படி நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இன்னும் பல பௌத்த அமைப்புகளும், இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.  

இவர்கள் அனைவரினதும் நிலைப்பாட்டில் முக்கிய விடயமாக, “இடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம். புதிய விடயங்களை உருவாக்கி, திருத்திய வடிவமொன்றை வெளியிடுங்கள்” என்பது, அவர்களது கருத்தாக இல்லை. மாறாக, “புதிய அரசமைப்பு வேண்டாம்; திருத்தமும் வேண்டாம். அரசமைப்பு உருவாக்க முயற்சிகளை உடனடியாக நிறுத்துங்கள்” என்பது தான், இவர்களின் கருத்தாக இருக்கிறது. 

இதன்மூலமாக, இவ்விடயத்தில் எந்தவித முன்னேற்றங்களுக்கும் அவர்கள் இடம்வழங்கத் தயாராக இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.  

அவர்களின் முக்கிய குற்றச்சாட்டாக, புதிய அரசமைப்பு, நாட்டைப் பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்பது காணப்படுகிறது. ஆனால், தற்போதிருக்கும் அரசமைப்புக் காரணமாகத் தான், பிரிவினைக்கான அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள, அவர்கள் தயாராக இல்லை. இலங்கையில் பிரிவினைக்கான போர், புதிய அரசமைப்பின்படி இடம்பெற்றிருக்கவில்லை.  

அத்தோடு, புதிய அரசமைப்பு முயற்சி தோற்கடிக்கப்பட்டால், தமிழர் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிதவாதக் கட்சியான, அரசாங்கத்திடம் சரணாகதி அடைந்திருக்கும் கட்சி என விமர்சகர்களால் சொல்லப்படும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, பாரிய பின்னடைவாக அமையும். அத்தோல்வி, தமிழர் தரப்பை மாத்திரம் தோல்வியடையச் செய்யப் போவதில்லை. மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக, கடும்போக்கு அரசியலை வெளிப்படுத்தும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பாக அமையும்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதன் மூலமாக, தமிழர் அரசியலைப் பலவீனப்படுத்தலாம் என்ற எண்ணம் காணப்படுமாயின், அது நிச்சயமாக, பெரும்பான்மையினத் தரப்புக்குச் சாதகமற்ற நிலையையே ஏற்படுத்தும். தமிழ்த் தரப்பில் கடும்போக்குக் கொள்கையுடைவர்கள் அதிகாரம் பெற்ற பின்னர், பிரிவினைக்கான கோரிக்கைகள் வெளிப்படையாக முன்வைக்கப்படும் போது, இதன் தாக்கத்தை, பெரும்பான்மையினத் தரப்பு அறிந்துகொள்ளும்.  

பௌத்த பீடங்களின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக, அரசமைப்பு முயற்சிகள், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்ற எண்ணப்பாடே ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றை உயிர்ப்பிப்பதற்கான முயற்சிகளில், அரசாங்கம் ஈடுபட வேண்டும். இதில் முக்கியமான விடயமாக, அரசமைப்பு உருவாக்கம் பற்றிய, தெளிவான தொடர்பாடல்களை, அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில், அரசமைப்பு விடயத்தில் அரசாங்கம், தெளிவான தொடர்பாடல்களை மேற்கொண்டுள்ளது என, 58 சதவீதமான மக்களே தெரிவித்துள்ளனர். இவற்றைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய தேவை, அரசாங்கத்துக்குக் காணப்படுகிறது. இது, இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விடயமென்பதை, அரசாங்கம் மறந்துவிடக்கூடாது என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X