2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அனர்த்தங்களின் போது அரசியல்வாதிகள் மூடை சுமக்க வேண்டுமா?

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஜூன் 14 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் பகுதியில் வெள்ளத்தாலும் மண்சரிவுகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று, அவர்களுக்குத் தமது வீடுகள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை சுத்தம் செய்து கொள்ள உதவி செய்வதற்காக, வட பகுதியில் இருந்து அரசியல்வாதிகளும் தொண்டர் அமைப்புகளும் சென்றிருந்தனர்.

ஆனால், அந்த நல்ல காரியத்துக்கு சிங்கள மக்கள் மத்தியில் போதிய பிரசாரம் கிடைத்ததா என்பது சந்தேகமே. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அதற்குப் போதிய இடம் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

ஆனால், சில தென்பகுதி அரசியல்வாதிகளின் செயல்களுக்கு அந்தப் பிரசாரம் கிடைத்தது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் தொடர்பாகப் பத்திரிகைகளில் நூற்றுக் கணக்கான படங்கள் பிரசுரிக்கப்பட்ட போதிலும், நான்கு தென்பகுதி அரசியல்வாதிகள் சம்பந்தமான படங்களுக்குப் பிரதான பிரவாகத்தின் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் முக்கிய இடம் வழங்கப்பட்டு இருந்தன. 

ஒரு படத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஒரு மூதாட்டியைச் சுமந்து கொண்டு நடந்து செல்லும் காட்சி காணக்கூடியதாக இருந்தது.

மற்றொன்றில் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் மகனும் பிரதி அமைச்சருமான அனுராத ஜயரத்ன ஏதோ ஒரு மூடையைத் தோளில் சுமந்து செல்கிறார்.

மூன்றாவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்.

நான்காவது படத்தில் உள்நாட்டு, கலாசார அலுவல்கள் மற்றும் வட மேல் அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும, மூடையொன்றைச் சுமந்து செல்கிறார்.

முதல் மூன்று படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளியான போதும், அவர்களுக்குச் சாதகமான குறிப்புகள் அவற்றின் கீழ் அவ்வளவாக இருக்கவில்லை. அனேகமாக ஏளனம் கலந்த குறிப்புகளே பெருமளவில் காணப்பட்டன. அதற்கு, அவர்கள் அரசியல்வாதிகள் என்பதே காரணமாக இருந்தது. 

ஆனால், அரசியல்வாதியாக இருந்தாலும் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவின் இது போன்ற படங்கள் பலவற்றோடு, அவர் பாராட்டப்பட்டு இருந்தமை வித்தியாசமாக இருந்தது.

அவரது எந்தவொரு படமும் இகழப்படவில்லை.அவர் சாதாரண மக்களோடு பழகி, அவர்களது பிரச்சினைகளில் பங்கு கொள்ளும் நபர் என்பதால் அவர் அவ்வாறு புகழப்பட்டு இருக்கலாம்.

எனினும், இந்தப் படங்கள் பிரசுரிக்கப்பட்டதன் பின்னர், அனர்த்தங்களின்போது, அரசியல்வாதிகளின் வகிபங்கு என்ன என்பதைப் பற்றிய ஒரு விவாதம் சமூக வலைத்தளங்கள் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக, சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது.

அதேவேளை, ஊடக நிறுவனங்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமா என்பதைப் பற்றியும் மற்றொரு விவாதம் நடைபெற்று வருகிறது.

அனர்த்தங்களின்போது, அரசியல்வாதிகள் தாமாக உடல் உழைப்பால் தொண்டு செய்யத் தேவையில்லை என்றும் நிர்வாக ரீதியில் அவர்கள் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ உள்ளன என்றும் அவற்றுக்கு இந்த உடல் உழைப்பு இடையூறாக அமையும் என்றும் பலர் வாதிடுகின்றனர்.

அதேவேளை அரசியல்வாதிகள் நேர்மையாக அந்த உடல் உழைப்பில் ஈடுபடவில்லை என்பதும் பொதுவான கருத்தாக இருக்கிறது.

நாமல் ராஜபக்ஷ எம்.பி, ஒரு மூதாட்டியைச் சுமந்து சென்ற விடயத்தைப் பற்றித் தொலைக்காட்சிப் பேட்டியொன்றின்போது, அவரிடம் கேட்கப்பட்டது. “அனர்த்தங்களின் போது, சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று, நிலைமையை அவதானித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி, சம்பந்தப்பட்டவர்களுக்கு உதவுவதை ஒரு புறம் வைத்துவிட்டு, முதியவர்களையும் பொருட்களையும் சுமந்து செல்ல வேண்டுமா” என்பதே அந்தக் கேள்வியாகும். 

அவர்களைச் சுமந்து செல்வது தமது பணியாக இல்லாவிட்டாலும், மக்களுக்குத் தனிப்பட்ட முறையில் உதவி தேவைப்பட்டால், அதையும் செய்யத் தாம் தயாராக இருப்பதாக அவர் அதற்கு பதில் அளித்தார். 

உண்மையிலேயே சூழ்நிலையின் காரணமாக மனம் இரங்கித்தான் நாமல், அவ்வாறு அந்த மூதாட்டியை அவரது வீட்டில் இருந்து பாதுகாப்பான இடமொன்றுக்கோ அல்லது வாகனமொன்றுக்கோ சுமந்து சென்றார் என்றால், அதைப் பாராட்டத்தான் வேண்டும். 

ஆனால், உண்மையிலேயே என்ன நடந்து இருக்கலாம்? அந்தப் பெண்ணைச் சுமந்து செல்ல, அவளது உறவினர்களோ அல்லது அந்த ஊரில் வேறு எவருமோ இருக்கவில்லையா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. 

அரசியல்வாதிகள் அது போன்ற வேலைகளைப் பகட்டுக்காகவும் அரசியல் இலாபம் கருதியுமே செய்கிறார்கள் என்பதே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.வெள்ள நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடச் சென்ற முன்னாள் பிரதமரின் மகனான பிரதி அமைச்சர் அனுராத ஜயரத்ன, மூடை சுமக்க வேண்டுமா?

அவர் அந்த மூடையைச் சுமக்கும் போதும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அங்கே இருந்திருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பு வழங்க, மக்கள் சூழ்ந்து பார்த்திருக்கப் புகைப் படப்பிடிப்பாளர்கள் படம் பிடிக்க, இவர் மூடை சுமக்கிறார். இது தேவையா?

ஆனால், பிரதி அமைச்சர் தெவரப்பெருமவின் கதை வேறு. மக்களோடு ஒருவனாக இருந்து அவர்கள் செய்வதைத் தாமும் செய்வது அவரது பழக்கம். கடந்த வருடம் மத்துகம, இத்தேபான என்ற கிராமத்தில் ஒருவர் கிணற்றில் விழுந்து மரணமடைந்திருந்தார். 

மரண விசாரணைக்காக சடலம் கிணற்றில் இருந்து வெளியே எடுக்க வேண்டியிருந்தது. அங்கு குழுமியிருந்தவர்கள் அதற்கு முன்வரவில்லை. தெவரப்பெரும ஐந்து மீட்டர் ஆழமான அந்த கிணற்றில் இறங்கிச் சடலத்தை வெளியே சுமந்து வந்தார். 

அண்மையில் தமது மாடுகளைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக நள்ளிரவில் ஒருவர் தெவரப்பெருமவுக்கு தொலைபேசியில் தெரிவித்தார். உடனே புறப்பட்ட தெவரப்பெரும திருடர்களைத் துரத்திச் சென்றார்.

இடையில் திருடர்கள் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியைக் கைவிட்டுத் தப்பி ஓட முயற்சித்தனர். தமது வாகனத்தை விட்டு இறங்கிய பிரதி அமைச்சரும் அவர்களைத் துரத்திச் சென்றபோது, தடக்கிவிழுந்து அவரது காலொன்று முறிந்தது. ஆனால், அவரோடு சென்றவர்கள் திருடர்களை மடக்கிப் பிடித்தனர்.

2014 ஆம் ஆண்டு பொதுபல சேனாவின் தூண்டுதலில் பேருவளை, அளுத்கம மற்றும் வெலிபென்னை பகுதிகளில் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் தாக்கப்பட்ட போது, தெவரப்பெரும முஸ்லிம்களைப் பாதுகாக்க முன்வந்து, பல இடங்களில் தனிப்பட்ட முறையில் தலையிட்டார்.

எனவே, மக்களினது பிரச்சினைகளின்போது தனிப்பட்ட முறையில் தலையிடுவது அவரது சுபாவம். பெரும்பாலான, ஏனைய அரசியல்வாதிகள் மூடை சுமப்பது அரசியல் இலாபத்துக்கே. எனவே தான் அரசியல்வாதிகள் தனிப்பட்ட முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டுமா என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

அரசியல்வாதிகளின் இந்தப் பகட்டான வேலைகளுக்குப் பொது மக்களும் காரணமாகின்றனர். அனர்த்தங்களின் போது அரசியல்வாதிகள் தமது பிரதேசத்துக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அவர்கள் தமக்குத் தனிப்பட்ட முறையில் உதவ வேண்டும் என நினைக்கின்றனர்.

அதை அறிந்திருக்கும் அரசியல்வாதிகளும் அனர்த்தங்களின்போது, நிலைமையை நேரில் அவதானிப்பதில் நின்றுவிடாது மூடைகளைச் சுமப்பது, முதியோர்களைச் சுமப்பது போன்றவற்றைச் செய்து, அவற்றைப் படம் பிடித்து, அரசியல் இலாபம் தேடுகிறார்கள்.
இந்த விடயத்தில், மக்கள் விடுதலை முன்னணியும் தமிழீழ விடுதலை புலிகளும் வித்தியாசமான அமைப்புகளாகவே செயற்பட்டுள்ளனர்.

2004 ஆம் ஆண்டு இலங்கையைச் சுற்றி, கரையோரப் பகுதிகளைச் சுனாமி தாக்கியபோது, உடைந்த வீடுகள், வீட்டுத் தளபாடங்கள், மரங்கள் செடிகள், மனித சடலங்கள், மிருகங்களின் பிணங்கள் போன்ற பலவற்றைக் கொண்ட குப்பைக் காடாகவே அப்பகுதிகள் இருந்தன.

அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் குப்பைக் காட்டைச் சுத்தப்படுத்தவும் இவ்விரண்டு இயக்கங்களும் ஆயிரக்கணக்கான தமது உறுப்பினர்களைக் களத்தில் இறக்கின.

வட மாகாணத்தில் கரையோரம் முழுவதும் புலிகளின் தலைமையிலேயே சுத்தம் செய்யப்பட்டது. மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரங்களை மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் சுத்தம் செய்தனர். இலட்சக் கணக்கில் உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் அவ்வாறு செய்யவில்லை.

கடந்த வருடம் களனிப் பள்ளத்தாக்கில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டபோது, பல அரசியல்வாதிகள் விளம்பரத்துடனேயே மக்களுக்கு உதவி செய்ய வந்தனர். சட்டரீதியாகத் தமது பொறுப்பான குப்பை அகற்றுவதையும் அரசியல் இலாபம் தேடியே செய்தனர். தமது பெயர்அடங்கிய பதாகைகளைக் கட்டிய வாகனங்களை அதற்காக அனுப்பினர்.

அரசியல்வாதிகள் அனர்த்தங்களின் போது வழங்கும் பொருட்களில் சிலவேளை தமது பெயரைக் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். இது போன்றதோர் விடயம் தொடர்பாக காணி மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட வாழைப் பழங்கள் அவரது பெயரை அச்சிட்ட பட்டியொன்றினால் சுற்றப்பட்டு இருக்கும் காட்சி இணைய வலைத்தளங்களில் காட்டுத் தீபோல் பரவியிருந்தது.

தாம் அதற்குப் பொறுப்பல்ல என்றும் தமது பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தச் சிலர் இந்தப் படத்தை வலைத்தளங்களில் சேர்த்துள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை செய்வதற்குத் தாம் பொலிஸில் முறைப்பாடு செய்வதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

அவர் அதைக் கூறும்வரை, அது உண்மையான படமொன்று என்றே பலர் நினைத்தனர். ஏனெனில் இலங்கையில் அரசியல்வாதிகள் அந்த நிலைக்கும் தாழ்ந்து செல்லக் கூடியவர்கள் என்றே பொதுவான அபிப்பிராயம் இருக்கிறது.

அரசியல்வாதிகள் இது போன்ற சந்தர்ப்பங்களில் விளம்பரமின்றி மக்களுக்கு உதவி செய்தால் அவர்கள் எதுவும் செய்யவில்லை என மக்களே பின்னர் கூறக்கூடும். அல்லது அவர்கள் செய்யும் சேவைக்கு மற்றவர்கள் உரிமை கோரக்கூடும்.

எனவே அரசியல்வாதிகள், தமது சேவைகளுக்கு விளம்பரம் தேடுவதில் நியாயம் இருக்கிறது என்றும் வாதிடலாம். ஆனால், பெரும்பாலும் நடைபெறுவது பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரையும் தமக்கு சாதகமாக்கிக் கொள்வதே. 
ஊடக நிறுவனங்கள் நிவாரணப் பணியில் ஈடுபடுவதும் இப்போது சர்ச்சையாகியுள்ளது.சமூக வலைத்தளங்களில் இந்த விடயமும் பெரும் விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

 

அனர்த்தங்களின் பாதிப்பை மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் அறியத் தருவதே ஊடகங்களின் பொறுப்பாகுமே தவிர, அவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடத் தேவையில்லை எனப் பலர் வாதிடுகின்றனர். 

ஆரம்பத்தில் சிரச, சக்தி நிறுவனம் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோது, அது சர்ச்சையாகவில்லை. ஆனால், பின்னர் ஏனைய சில ஊடக நிறுவனங்களும் அப் பணிகளில் ஈடுபடலாயின.

இப்போது அரச நிறுவனங்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அரச ஊடக நிறுவனங்களும் தனியாக அவற்றில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போட்டியின் காரணமாக, அந்த ஊடக நிறுவனங்கள் மணித்தியாலக் கணக்கில் தமது ஊடகத்தையே பாவித்து, தமது நிவாரணப் பணிகளுக்கு விளம்பரம் தேடுகின்றன. 

இந்த ஊடக நிறுவனங்கள், பொது மக்களிடமிருந்தே நிவாரணப் பொருட்களைத் திரட்டுகின்றன. அவற்றை அந்த நிறுவனங்களே மக்களிடம் வழங்குகின்றன. பொருட்களை வழங்கியவர்களுக்கு விளம்பரம் இல்லை. அந்த ஊடக நிறுவனங்களுக்கே விளம்பரம் கிடைக்கிறது.

பொதுவாகப் பாடசாலைகள், வங்கிகள் உட்படப் பல நிறுவனங்கள் நிவாரணப் பொருட்களைச் சேர்த்து விநியோகிக்க முன்வந்துள்ள நிலையில், ஊடக நிறுவனங்கள் அதில் ஈடுபடுவதில் தவறில்லை.

ஊடக நிறுவனங்களுக்குத் தமது நிருபர்கள் மூலம், அனர்த்தத்தின் பாதிப்பின் அளவை அறிந்து, அதை மக்களுக்கு அறிவிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. அதேவேளை, தமது பிரசார சக்தியைப் பாவித்து நிவாரணப் பொருள்களைச் சேர்க்க மற்றவர்களுக்கு இல்லாத வாய்ப்பும் இருக்கிறது.

எனவே, அவர்கள் அந்த நிலைமைகளைப் பாவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக உதவி செய்ய முடியுமாக இருந்தால், அதைச் செய்வதில் தவறில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊடகங்கள் உதவி செய்வதை விட்டு விட்டு, வெறுமனே அறிக்கையிடலில் ஈடுபடுவது தொடர்பாகவும்  விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

1997ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இளவரசி டயனா, பிரான்ஸில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தபோது, அவரைப் பின் தொடர்ந்து சென்ற ஊடகவியலாளர்கள், விபத்து நடந்த இடத்தில் அவருக்கு உதவி செய்யாது, படம் பிடிப்பதில் ஈடுபட்டு இருந்தார்கள் எனப் பிரெஞ்சு அதிகாரிகள் பின்னர் குற்றஞ்சாட்டியிருந்தனர். 

1991 ஆம் ஆண்டு சூடானில் பெரும் பஞ்சம் நிலவியபோது, மூன்று அல்லது நான்கு வயதுடைய ஒரு சிறுமி தள்ளாடியபடி, ஐ.நா உதவி நிலையமொன்றுக்கு உணவு கேட்டுப் போகும்போது, கழுகொன்று அவளைப் பின்தொடர்ந்தது.

கெவின் காட்டர் என்ற தென் ஆபிரிக்க ஊடகவியலாளர் அந்தக் காட்சியைப் படம் பிடித்தார். அந்தப் படத்துக்காக அவருக்கு புலிட்சர் விருதும் கிடைத்தது. ஆனால், அவர் அந்தச் சிறுமிக்கு உதவாது, கழுகு நெருங்கும் வரை 20 நிமிடங்களாகத் தமது கமெராவைப் பிடித்துக் கொண்டு இருந்தார் எனவும் அச்சிறுமியின் உயிரைவிட, அவருக்கு அந்தப் படமே முக்கியமாகியது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், சிறிது காலத்துக்குப் பின்னர் அவர் விரக்தியடைந்து, தற்கொலை செய்து கொண்டார். எனவே, ஊடகவியலாளர்கள் இதுபோன்ற, நிலைமைகளில் உதவி செய்வதா தொழிலை செய்வதா, என்பதும் பெரும் சர்ச்சைக்குள்ளான விடயமாகும்.

இலங்கையில் தொலைக்காட்சி நிறுவனங்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதில் தவறில்லை. ஆனால், அவை தமது தொண்டுக்காக, அளவுக்கு அதிகமாக மணித்தியாலக் கணக்கில் பிரசாரம் செய்வது பொருத்தமானதா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். 

அவை நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதனால் அவற்றுக்கு அரசாங்கத்தின் நிவாரணப் பணிகளில் காணப்படும் குறைபாடுகளை அம்பலப்படுத்த முடியாமல் போகிறது. ஏனெனில், நிவாரணப் பணிகள் போட்டியாகி விட்டபோது, அவ்வாறு அம்பலப்படுத்துவது, ஒரு போட்டியாளர் மற்றப் போட்டியாளரின் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவதாக அமைகிறது.

நாட்டில் மிகப் பெரும் நிவாரணப் பணியாளனாகிய அரசாங்கத்தின் குறைபாடுகளை ஊடக நிறுவனங்கள் சுட்டிக் காட்டாவிட்டால் யார் சுட்டிக் காட்டுவது? இவை சிந்திக்கத் தூண்டும் பிரச்சினைகளாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .