2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அமிர்தலிங்கத்தின் செவ்வி

என்.கே. அஷோக்பரன்   / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், ‘த ஹிந்து’ பத்திரிகையின் சென்னைப் பதிப்புக்கு, நீண்டதொரு செவ்வியை வழங்கியிருந்தார்.  

 1983 ஓகஸ்ட் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் அந்தச் செவ்வி பிரசுரமாகியிருந்தது. அந்தச் செவ்வியில், 1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்புப் பற்றியும் இனப்பிரச்சினை பற்றியும் இலங்கை அரசியல் பற்றியும் முக்கியமான பல கருத்துகளை, அமிர்தலிங்கம் பதிவு செய்திருந்தார்.   

1983 ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு, திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்றும் ஆயுதப் படைகள், தமிழர்களையும் மற்றும் தமிழர்களது சொத்துகளையும் தாக்குவதில், தீர்மானமுடைய ஒரு பங்கை வகித்திருந்தார்கள் எனவும் தெரிவித்த அமிர்தலிங்கம், இது அதிகாரத்திலுள்ள ‘யாரோ’தான் திட்டமிட்டு, ஆயுதப்படைகளையும் சிவிலியன்களையும் ஒருங்கிணைத்துச் செய்வித்திருக்க வேண்டும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதாகக் குறிப்பிட்டார்.   

இந்தத் தாக்குதல்களானவை, தமிழர்களை வன்முறைகளினூடாக அடக்குமுறைக்குள்ளாக்கி, சிங்களப் பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றி, தமிழர்களது தொழிற்றுறைகளை அழிப்பதனூடாக, தமிழ் மக்களது பொருளாதார அடிப்படைகளைச் சிதைத்து, மேலும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களை, ஒருவித மயமனநிலையுடன் வாழச்  செய்தல் ஆகிய மூன்று அடிப்படைகளைக் கொண்டமைந்தது என்று, அமிர்தலிங்கம் தெரிவித்தார்.   

இந்தத் தாக்குதல்களில் முப்படைகளினதும் பங்கைப் பற்றிக் குறிப்பிட்ட அமிர்தலிங்கம், எவ்வாறு ‘கறுப்பு ஜூலை’ இடம்பெறுவதற்கு முன்பே,   ஆயுதப்படைகள், தமிழ் மக்கள் மீதான வன்முறைகளை யாழ்ப்பாணம், திருக்கோணமலை, கொழும்பு, பதுளை ஆகிய பிரேதசங்களில் ஆரம்பித்திருந்தன என்பதையும் விளக்கினார்.   

திருக்கோணமலையும் பூகோள அரசியலும்  

இதில், திருக்கோணமலையில் நடந்த சம்பவங்களின் முக்கியத்துவம் பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், கடற்படையினர், நேரடியாகவும் மறைமுகமாகவும் திருக்கோணமலையில், தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட வன்முறைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன், திருக்கோணமலையை (குறிப்பாக எண்ணைக் குதங்கள்) அமெரிக்காவிடம் கையளிக்கும் முயற்சிக்கும், தமிழர்கள் மீதான வன்முறைக்கும் நிச்சயம் தொடர்புண்டு என்றும் பெற்றோலியத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சிறில் மத்யூவே இதில் அக்கறை கொண்டுள்ள அமைச்சர் என்றும் தெரிவித்தார்.   

பௌத்தத்தை ஆயுதமாகக் கொண்டு, திருக்கோணமலையைச் சிங்களப் பிரதேசமாக மாற்றும் நோக்கில், அங்குள்ள இந்து ஆலயங்களையும் அழிப்பதற்கான முயற்சிகளும் சிறில் மத்யூவினால் முன்னெடுக்கப்படவிருப்பதாகத் தாம் அறிந்ததாகவும் அமிர்தலிங்கம் தெரிவித்திருந்தார்.   

ஆகவே அமெரிக்கா, திருக்கோணமலையில் நிலைகொள்வதை ஏதுவாக்கவே, தமிழர்கள் மீதாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதென அமிர்தலிங்கம் கருத்துரைத்தார். இந்தக் கேள்விகளையும் பதில்களையும் ‘சர்வதேச அரசியல்’ (அல்லது பூகோள அரசியல்) கண் கொண்டு பார்த்தல் அவசியமாகிறது.   

திருக்கோணமலை மீது, பல்வேறு வல்லரசுகளும் வரலாற்றுக் காலம் முதல் ஆர்வம் கொண்டிருந்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்த வரையில், திருக்கோணமலை ஒரு தந்திரோபாயப் புள்ளி. அதில் வேறு ‘வல்லரசுகள்’ ஆதிக்கம் செலுத்துவதை, இந்தியா தனது நலன்களுக்கு எதிரானதாகவே கருதும்.   

மேலும், திருக்கோணமலையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில், எப்போதும் இந்தியா அக்கறை கொண்டு செயற்பட்டிருக்கிறது. மேலும், அன்றிருந்த இந்திய-அமெரிக்க உறவு, இன்றுள்ளது போன்றதல்ல; 1961இல் இந்தியா, அணிசேரா நாடுகள் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினராகியிருந்தது. அமெரிக்க - சோவியத் யூனியன் ‘பனிப்போரிலிருந்து’ விலகியிருக்கவே இந்தியா விரும்பியது.  

 1962இல் இந்திய - சீனா யுத்தத்தின் போது, ஜனாதிபதி ஜோன் எப் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசாங்கம், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், கென்னடியின் மறைவின் பின்னர், அந்த உறவின் வலிமை, குறையவே தொடங்கியிருந்தது.   

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்காவுக்கு பாகிஸ்தானுடன் இருந்த நெருக்கமான உறவு ஆகும். மேலும், நேருவிய சோசலிஸத்துக்கு, சோவியத் மீதிருந்த மென்மையான அபிமானமும் இதற்கொரு காரணமெனலாம். 1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில், பாகிஸ்தானை அமெரிக்கா ஆதரித்திருந்தமையும் இந்திய - அமெரிக்க உறவை மேம்படுத்த உதவவில்லை. இடை நடுவிலே, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி ஆட்சியின் கம்யூனிஸ விரோதப் போக்கு, அமெரிக்க உறவை ஓரளவு புதுப்பிக்க உதவியிருந்தாலும், அமெரிக்க - இந்திய உறவுகள் 1990கள் வரை வலுவடைந்தன என்று சொல்ல முடியாது.   

ஆக, இந்தச் சூழலில்தான், திருக்கோணமலை மீதான அமெரிக்க ஆதிக்கம், அதற்கு சார்பான அமெரிக்க ஆதரவாளர் என்று பகிரங்கமாக அறியப்பட்ட ஜே.ஆர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ற கருத்தை அமிர்தலிங்கம், இந்தியாவில், இந்திய ஊடகத்தில் முன்வைக்கிறார். திருக்கோணமலையை முக்கியத்துவப்படுத்தி, அந்த ஊடகவியலாளர் கேள்வி கேட்டமையும் இதனால்தான் என்பது இலகுவில் ஊகிக்கத்தக்கது.   

குறைந்த தீங்கு  

அடுத்து, இன்னொரு முக்கியமான கேள்வி, அமிர்தலிங்கத்திடம் முன்வைக்கப்பட்டது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில், இருப்பதற்குள் சிறந்த தெரிவு, ஜே.ஆர் தான் என்றொரு கருத்து நிலவுவது பற்றி அமிர்தலிங்கத்திடம் வினவப்பட்டது. அதாவது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட, ஐக்கிய தேசியக் கட்சியே சிறுபான்மையினருக்குள்ள சிறந்த தெரிவு (அல்லது குறைந்த தீங்கு) என்று, பொதுவாகக் காணப்படும் கருத்துப் பற்றிய கேள்வி என்று, நாம் புரிந்து கொள்ளலாம்.   

இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், “ஜெயவர்தனவின் கடந்தகால நடத்தைகள், அவர் சிறுபான்மையினருக்கு நீதி செய்யக் கூடியவர் என்று உணர்த்துவதாக இல்லை. 1957 இல் பண்டா - செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராக, பெரும் நடை பவனியை, கண்டி வரை நடத்தத் தொடங்கி, அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்படவும், 1958 இல் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்படவும் காரணமாக இருந்தவர் ஜே.ஆர்.   1977 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இடம்தெரியாமல் செய்து மாபெரும் பெரும்பான்மையோடு, அசைக்க முடியாத பலத்தோடு, ஜே. ஆர் ஆட்சிக்கு வந்தபோது, தமிழர்கள் பிரச்சினைக்கு அவரால் தீர்வொன்றைக் காண முடியும் என்று நாம் எண்ணினோம். அந்த நம்பிக்கையில்தான், 1977 வன்முறைத் தாக்குதல், கலவரங்களுக்கு பின்னர் கூட, நாம் அவரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். அவர் காகிதத்தில் எமது பல உரிமைகளை ஏற்றுக் கொண்டார். மாவட்ட அபிவிருத்திச் சபைகளையும் அறிமுகம் செய்தார். ஆனால், நடைமுறைப்படுத்துதல் என்பது, மிகவும் திருப்தியற்றதாகவே இருந்தது. அரசமைப்பில் சொல்லப்பட்ட தமிழ் மொழி உரிமைகள் பற்றிய ஓர் எழுத்துக் கூட, கடந்த ஐந்து வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், நாடற்றவர்களாகக் காணப்படுவோரை (பெரும்பாலான இந்திய வம்சாவளித் தமிழர்கள்) குடிமக்களாகப் பதிவு செய்வோம் என்ற உறுதிமொழியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அறிமுகப்படுத்தப்பட்டதோடு சரி; அவை வினைதிறனுடன் இயங்குவதற்குரிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, வெறும் காகிதத்திலுள்ள உரிமைகளும் காகிதத்திலுள்ள பாதுகாப்புகளையும் தாண்டி, எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறோம். மாறாக, தமிழர்களது நிலைமை ஜே.ஆரின் ஆட்சியில் மோசமாகியிருக்கிறது. குறிப்பாக, தொழில்வாய்ப்பில் முன்பிருந்த எந்த அரசாங்கத்தையும் விட, இந்த அரசாங்கத்தில் தமிழர்களின் நிலைமை மோசமாகியிருக்கிறது” என்று அமிர்தலிங்கம் பதிவு செய்தார்.   

மாற்றுத் தீர்வு  

தனிநாட்டுக்கு மாற்றானதொரு தீர்வு பற்றிக் கருத்துரைத்த அமிர்தலிங்கம், “சுதந்திர அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான மக்களாணையை நாம் பெற்றுள்ளோம். ஆரம்பத்திலிருந்தே நாம் பெற்றுக்கொண்ட இந்த மக்களாணையிலிருந்து, பின் செல்ல முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். ஆனால், தனிநாட்டுக் கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிய எமது குறைகளை, நிவர்த்தி செய்யத் தக்க மாற்றுத் தீர்வொன்று ஏற்படுத்தப்படுமானால், அதை எமது மக்கள் முன்வைத்து, அதைச் செயற்படுத்த முயல்வோம்” என்றார்.  

 1977 பொதுத்தேர்தலின் போது, தமிழ் மக்களுக்குக் குறைகளுண்டு என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டிருந்ததையும், தாம் தேர்தலில் வென்றால், சர்வகட்சி மாநாடு ஒன்றினூடாகத் தமிழ் மக்களது குறைகளைத் தீர்க்க முயற்சி முன்னெடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி சொல்லியிருந்ததையும் சுட்டிக்காட்டிய அமிர்தலிங்கம், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதைச் செய்யத் தவறிவிட்டது என்பதைக் கோடிட்டுக் காட்டினார்.

 “நாம் அவர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். அரசாங்கம் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதெல்லாம் நாங்கள் பேசச் சென்றோம். ஒரு தீர்வை எட்டுவதற்கு எம்மால் இயன்ற அனைத்தையும் செய்தோம். நாம் எமது நிலையிலிருந்து இறங்கி வர மாட்டோம் என்றோ, சமரசத்துக்குத் தயாரில்லை என்றோ சொல்லவில்லை. எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தபோதும், சமாதானமாகத் தீர்வொன்றை எட்டவே முயன்றோம். அரசாங்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தோற்றுவித்திருந்தாலும், அது வினைத்திறனுடன் இயங்கச் செய்வதில் தவறியிருந்தது. அரசாங்கத் தரப்பிலிருந்து நிறையத் தடைகள் வந்தன. அரசியல் ரீதியிலும் சரி, நிர்வாக ரீதியிலும் சரி, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு நிறையத் தடைகள் இருந்தன. அது வினைத்திறனற்ற அதிகார பன்முகப்படுத்தல் முயற்சியாகவே இருந்தது. இந்தச் சூழலும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறைகளும் 1977, 1979, 1981 மற்றும் தற்போது மிகப்பாரியளவில் தமிழ் மக்களை அழித்தொழித்த 1983 வன்முறைகளும் - நாம் எமது மன்னார் மாநாட்டில், ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்துடன் பேசுவதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கியது. அத்தோடு, எமது ஆறு நாடாளுமன்ற ஆசனங்களைத் துறப்போம் என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும்; எமது மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்; அதிகார பரவலாக்கல் தொடர்பான அரசாங்கத்தின் உறுதிமொழிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ஆகியவற்றுக்காக அஹிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தீர்மானித்திருந்தோம்” என்ற யதார்த்தத்தை அமிர்தலிங்கம் எடுத்துரைத்திருந்தார்.   

அமிர்தலிங்கத்தின் செய்தி  

இந்தியாவின் அழுத்தமானது ஒன்றுபட்ட இலங்கைக்குள், பேச்சுவார்த்தை மூலமான, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் அடிப்படையிலான தீர்வொன்றை நோக்கி அமைவதை இந்திரா காந்தியுடனான சந்திப்பின் பின், அமிர்தலிங்கம் உணர்ந்து கொண்டார்.   

பங்களாதேஷின் உருவாக்கம் போல, தனிநாடொன்றை இலங்கைக்குள் ஸ்தாபிக்க, இந்தியா துணை போகப் போவதில்லை என்பது நிச்சயம் தெளிவாகியிருக்க வேண்டும். அதேவேளை, இதுவரையான அஹிம்சை ரீதியிலான, பேச்சுவார்த்தை மூலமான, அதிகாரப் பரவலாக்கல் தீர்வுகள் ஏன் சாத்தியப்படவில்லை என்பதை, இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டிய தேவையும் அமிர்தலிங்கத்துக்கு இருந்தது. 

இந்த நீண்ட செவ்வியை அதற்கான களமாக அமிர்தலிங்கம் பயன்படுத்தியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. ஆனால், இது எதையும் மாற்றப் போவதில்லை என்பதை அவரும் நிச்சயம் அறிந்திருப்பார்.

பார்த்தசாரதியின் நான்கு கட்டளைகள்   

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் ஜே.ஆர். அரசாங்கத்துக்குமிடையில் மத்தியஸ்தம் வகிக்க, கோபால்சாமி பார்த்தசாரதி தயாராகியிருந்த நிலையில், தமிழர் தரப்பின் கோரிக்கையை முன்வைக்குமாறு, அவர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தலைவர்களிடம் கேட்டிருந்தார். அது தொடர்பில், நான்கு கோட்பாடுகளை கோபால்சாமி பார்த்தசாரதி முன்வைத்தாரென, ரீ.சபாரட்ணம் பதிவு செய்கிறார்.   

முதலாவதாக, தமிழர் தரப்பின் கோரிக்கையானது உள்ளக ரீதியில் சீரான கோட்பாடுகளினடிப்படையில் அமையவேண்டுமேயன்றி, காலத்தின் வசதி கருதி அமையக் கூடாது (அதாவது உடனடிச் சூழலின் அடிப்படையிலான கோரிக்கையாக அமையக்கூடாது).   

இரண்டாவதாக, அது தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமையும் அதேவேளை, தனிநாடு என்ற பிரிவினையை விடக் குறைவானதொரு தீர்வாக அமையவேண்டும்.   

மூன்றாவதாக, தமிழர் தரப்பின் கோரிக்கையின் உள்ளடக்கமானது, சிங்கள மக்களின் எதிர்ப்பைத் தூண்டத்தக்க வகையிலான உணர்ச்சிமிகு உள்ளடக்கத்தையோ வார்த்தைகளையோ கொண்டிராத ஒரு திட்டத்தினுள் உள்ளடங்கக் கூடியதாக அமைய வேண்டும்.   

நான்காவதாக, தமிழர் தரப்பு முன்வைக்கும் திட்டமானது, இலங்கையின் ஒற்றுமையையும் இறைமையையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் ஏற்றுக் கொள்வதாக அமைய வேண்டும். இந்த நான்கு கோட்பாடுகளின் அடிப்படையிலான கோரிக்கையை முன்வைக்குமாறு தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களிடம், கோபால்சாமி பார்த்தசாரதி கோரிக்கை விடுத்தார்.இரண்டுநாட்கள் கழித்து அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்கள், தமது கோரிக்கை யோசனையை பார்த்தசாரதியிடம் கையளித்தனர்.   

( அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X