2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைதியான அரசியல் களம் புயலுக்குத் தயாராகிறதா?

எம். காசிநாதன்   / 2017 ஜூலை 12 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரசியல் களம், தமிழகத்தைப் பொறுத்தவரை திடீரென்று அமைதியாகி விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்த மூன்று அணிகளில் முதல் அணியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி இருக்கிறது. 

ஆனால், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியும், டி.டி.வி. தினகரன் அணியும் இப்போதைக்கு மௌன விரதம் இருக்கின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு தினகரன் தலைமை வகிக்க வேண்டும் என்று 30க்கும் மேற்பட்ட அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்தார்கள். 

ஆனால் “அதெல்லாம் முடியாது” என்று கூறி, தன் தலைமையில் அந்த விழாவை மதுரையில் நடத்தி முடித்து விட்டார். “இணைப்பு பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என்பதை மறைமுகமாக ஓ. பன்னீர்செல்வத்துக்கு அறிவித்து அந்த அணியையும் வாயை மூட வைத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆகவே அ.தி.மு.கவுக்குள் உருவான மூன்று அணி- ஏன் நான்காவது தீபா அணி கூட இப்போது “கப் சிப்” என்று இருக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தல் முடியும் வரை இந்த அமைதி தவழும் என்றே தெரிகிறது.  

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை “ஆட்சி தானாகவே கவிழும்” என்பதை திரும்பத் திரும்ப சொல்லி வந்தாலும், “ஆட்சி கவிழ்ப்பு” வேலைகளில் ஈடுபடாமல் அமைதி காக்கிறது.

சட்டமன்றத்தில் மட்டும் சரமாரி குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க அரசின் மீது அள்ளி வீசினாலும், ‘குட்கா டைரி’, ‘ஆர்.கே. நகர் பண விநியோகம்’, ‘அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மத்தியில் நடைபெற்ற குதிரை பேரம்’ என எல்லாவற்றிலும் தி.மு.க போர்க்குணத்துடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. 

அப்படி அதிரடியாகச் செயல்பட்டு இந்த ஆட்சியைக் கவிழ்க்க மத்திய அரசோ அல்லது கட்சி தாவல் தடை சட்டமோ ஆதரவு அளிக்கவில்லை என்ற நிதர்சனம் தி.மு.க தலைமைக்கு தெரிகிறது. ஆனால், அந்தத் தலைமையை நம்பியிருக்கும் தொண்டர்களுக்கு தெரியவில்லை. 

‘கலைஞர் கருணாநிதி களத்தில் இருந்திருந்தால் இந்நேரம் அ.தி.மு.க ஆட்சியை கவிழ்த்திருப்பார்’ என்ற பேச்சு தி.மு.க மட்டத்தில் மட்டுமல்ல - அ.தி.மு.க ஆட்சி நீங்க வேண்டும் என்று கருதுவோர் மனதிலும் இருக்கிறது.

ஆகவே தி.மு.கவுக்கு இன்றைக்கு தன் தொண்டர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். இந்த ஆட்சி போக வேண்டும் என்று கருதும் மக்களையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நிலையில் - இரண்டிற்குமே தனிப்பட்ட தி.மு.கவால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து அந்தக் கட்சியும் அமைதி காக்கிறது.  

இந்த இரு திராவிட கட்சிகள் தவிர மூன்றாவதாக இன்றைக்கு இருப்பது காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சிக்குள் நிர்வாகிகள் போடுவதில் தொடங்கி, தமிழக அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்யும் வரை அனைத்திலுமே காங்கிரஸுக்கு தயக்கம் இருக்கிறது. 

முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் மீது நடத்தப்பட்ட ரெய்டுகள், தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ‘அடுத்த அணி உருவாக்கத்துக்கு’ என்ன நடவடிக்கை எடுப்பது என்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

மாநிலத் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் தி.மு.க ஆதரவுப் போக்கில் இப்போதைக்கு பயணிப்போம் என்று முடிவு செய்தாலும், அவருக்கு உடைந்து கிடக்கும் அ.தி.மு.க பக்கம் ஒரு கண் இருக்கவே செய்கிறது.

கூட்டணி ஒன்றே கை கொடுக்கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி, “தனித்து ஆட்சி அமைப்போம்” போன்ற முழக்கத்தை தவிர்த்து, உள்கட்சி பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது.  

இப்போதைக்கு திராவிடக் கட்சிகளுக்கு எதிரான அணியை உருவாக்கும் வலு தனக்கு மட்டுமே இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், மறுமலர்ச்சி தி.மு.க, அ.தி.மு.க.வில் உள்ள ஓ. பன்னீர் செல்வம் அணி போன்ற அனைத்தையும் இணைத்து ஒரு கூட்டணியை உருவாக்கி விட வேண்டும் என்ற எண்ணவோட்டம் அக்கட்சிக்கு இருப்பதாக தெரிகிறது. 

அதனால்தான் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர்கள் தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் சேர்த்தே விமர்சித்து வருகிறார்கள். ஆனால, இது மட்டும் வெற்றிக்கு உதவாது என்பது பா.ஜ.க தலைமைக்கு தெரியும். குறிப்பாக 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இப்படியொரு கூட்டணியை அமைத்து பெரிய லாபம் கிடைக்கவில்லை.

அதனால் இந்தக் கூட்டணிக்கு ஓர் உந்து சக்தி வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். அந்த ‘படையப்பாவை’ முன்வைத்து இரு திராவிட கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுத்து விடலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறது பா.ஜ.க.
என்றாலும், குடியரசுத் தலைவர் தேர்தல் அதன் பிறகு நடைபெறப் போகும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் எல்லாம் பா.ஜ.கவையும் அமைதியாக இருக்க வைத்துள்ளது.  
இந்த நான்கு கட்சிகள் தவிர மாற்று அரசியல் சிந்தனையில் இருக்கும் இன்னொரு கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அக்கட்சியின் இளம் தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் வழக்கைச் சந்தித்துக் கொண்டிருப்பதால், தேசிய அளவில் அக்கட்சியின் எதிர்ப்பு மிக்க செயல்பாடு சுணக்கமாகவே இருக்கிறது.

“தி.மு.க மற்றும் அ.தி.மு.க உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவாக எடுத்து வைத்து, பா.ஜ.கவின் கோபத்துக்காளாகாமல் தப்பித்துக் கொள்ளவே அந்தக் கட்சி முனைகிறது. 
இதனால்தான் சமீபத்தில் கூட அ.த.மு.க பற்றிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தை பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அரசியல் தலைவர்கள் சுய சரிதை எழுதுவார்கள். ஆனால், ஓர் அரசியல் கட்சியின் தலைவர் இன்னொரு அரசியல் கட்சி பற்றி தனியாக புத்தகம் போட்டது இதுதான் முதல் சம்பவம். அ.தி.மு.கவையும் தி.மு.கவையும் விமர்சித்தால் பா.ஜ.. தன் மீது கோபப்படாது என்ற சிந்தனையில் பாட்டாளி மக்கள் கட்சி, அடுத்த கட்ட செயல் திட்டம் பற்றி வெளியே சொல்லிக் கொள்ளாமல் அமைதி காக்கிறது.  

எஞ்சியிருப்பது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்(தே.மு.தி.க) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) போன்றவை. அந்த கட்சியில் தே.மு.தி.கவின் தலைவர் விஜயகாந்திடம் இருந்து விரைவில் தலைமை பொறுப்பு பிரேமலதா விஜயகாந்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எந்தக் கூட்டணிக்குப் போனாலும் இனி நாம் கேட்கும் சீட்டுகள்- அதாவது தொகுதிகள் கிடைக்காது என்பதால் “கேப்டன்” விஜயகாந்தும் அமைதியாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்துகிறார். அ.தி.மு.க அணிக்கு அவர் போக முடியாது.

தி.மு.க அணிக்குப் போக மாட்டார். ஆகவே பா.ஜ.க உருவாக்கப் போகும் அணியில் மட்டுமே விஜயகாந்த்துக்கு “கௌரவமான” இடம் கிடைக்கலாம் என்பதால் தே.மு.தி.க “தனித்து ஆட்சி அமைப்போம்” என்ற கோஷத்தை சப்தம் போட்டுப் பேசத் தயாராக இல்லாமல் அமைதி காக்கிறது.  

மறுமலர்ச்சி தி.மு.கவின் சார்பில் வைகோ படு சோதனைக்கு உள்ளாகியிருக்கும் நேரம். அவர் கண் முன்பு எந்த கூட்டணியுமே இல்லை. எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க அவர் முனைந்தாலும், அவர் இதுவரை சொல்லி வந்த கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது அவருக்கு நன்றாகப் புரிகிறது.

அதனால்தான் நீதிமன்றமே பிணையில் போக அறிவுறுத்தியும் “நான் ஜெயிலுக்குப் போறேன்” என்று கூறி கைதானார். பிறகு பல்வேறு தலைவர்களின் வலியுறுத்தலால் பிணையில் வெளிவந்துள்ள வைகோவின் எதிர்கால அரசியல் அவர் கண்ணுக்கு புலப்படவில்லை. 

ஆகவே அவரும் “எதிர்கால பாதை” என்ன என்பதை தீர்மானிக்காமல் அமைதி காக்கிறார்.  
ஆகவே இப்படி அரசியல் கட்சிகள் அனைத்துமே தங்களின் பாதை எது என்று தெரியாமல் “அமைதி காக்கும்” அரசியல் இப்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த இக்காட்டான நெருக்கடிக்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி.செயற்பாட்டு அரசியலில் இல்லாததும், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவும்தான் என்றால் மிகையாகாது. 

இரு பெரும் தலைவர்களின் ‘அரசியல் வெற்றிடம்’ இன்றைக்கு டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டவர்களை மட்டுமல்ல- பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளையும் கையைப் பிசைந்து கொண்டு நிற்க வைத்திருக்கிறது. 

இரு திராவிட கட்சிகளும் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க முடியாமல்- அல்லது வலுவான கூட்டணிக்கு வழி காட்ட முடியாமல் தவித்து நிற்கின்றன. அரசியல் கட்சிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியிலும் குடிகொண்டிருப்பது “புயலுக்குப் பின் அமைதி” என்பதை விட, “அமைதிக்குப் பின் புயல்” என்றே தோன்றுகிறது. 

ஏனென்றால் இந்த இரு கட்சிகளின் தலைமையில்தான் தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணி அமையும். அந்த அணி அமைந்தால் அது அகில இந்தியாவுக்கும் வழிகாட்டும் கூட்டணியாக அமையும் என்பதுதான் இப்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

தலைவர்களின் அமைதி தமிழக அரசியலில் புதிய திசை நோக்கிப் புறப்படும் புயலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என்றே அரசியல் பார்வையாளர்கள் எண்ணுகிறார்கள்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .