2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அரசமைப்பு அரசியல்

Ahilan Kadirgamar   / 2017 நவம்பர் 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவப்புக் குறிப்புகள்

அரசியல் தீர்வு தொடர்பாக, நாடு முழுவதிலும் உள்ள மக்களிடத்தில், பெருமளவுக்கு ஆர்வம் இல்லாமலிருப்பதற்கான காரணம் என்ன? தெற்கிலும் வடக்கிலும் உள்ள பிற்போக்கான சக்திகள், பொதுத் தளத்தில் தமது ஆதிக்கத்தை உயர்த்தியிருப்பதோடு, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடுகளை நிராகரிப்பதில் முன்னேற்றம் காண்பது எப்படி?

அரசாங்கத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திலும், அரசியல் தூரநோக்குப் போதாமலிருப்பது தான் காரணமென நான் வாதிடுவேன். மக்களுடன் கலந்துரையாடி, அரசியல் தீர்வு தொடர்பாக மக்களைச் சென்றடையாமல், அரசாங்கம் மாற்றப்பட்ட பின்னர் 3 ஆண்டுகள் வீணாக்கப்பட்டிருக்கின்றன. அதனோடு சேர்த்து, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடானது, மக்களின் பிரச்சினைகளிலிருந்தும் அவர்களது சமூக, பொருளாதார எதிர்பார்ப்புகளிலிருந்தும் விடுபட்டதாக உள்ளது.

நேற்று, இன்று, நாளை

துயரமான எங்கள் வரலாற்றிலிருந்து தான், அரசியல் தீர்வுக்கான கோரிக்கை எழுந்தது. தேசியவாத துருவப்படுத்தலும் பெரும்பான்மையின, கொலனித்துவத்துக்குப் பின்னரான தேசமும், எங்கள் நாட்டை, பல தசாப்தங்களுக்குப் பிளவுபடுத்தியிருந்தன. 

அனைவரையும் உள்வாங்கிய அரசியல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு எமது தலைவர்கள் தவறினார்கள் என்றால், அதன் பின்னர் தெற்கிலும் வடக்கிலும் ஏற்பட்ட இளைஞர்களின் ஆயுதமேந்திய கிளர்ச்சிகள், ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தின.

அத்தகைய மோசமான வன்முறையும் அழிவும், எமது கடந்தகாலத்தைப் பற்றிய ஆழமான பிரதிபலிப்பொன்றை வேண்டி நிற்கின்றன. எந்த அரசியல் தீர்வும், அவ்வாறான சுய விமர்சனம் செய்கின்ற பிரதிபலிப்பை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அத்தோடு, அரசியல் தீர்வென்பது, எமது சமூகத்தின் ஜனநாயக வாய்ப்புகள் பற்றி நம்பிக்கையிழந்தவர்களை, சீர்திருத்தப்பட்ட அரச கட்டமைப்பில் ஆரோக்கியமான பங்குபற்றலுக்கு அழைத்துவர முடியும்.

இவ்வாறான பிளவுபட்ட வரலாறொன்றை எதிர்கொள்வது அவசியமானது என்பது ஒருபக்கமாக இருக்க, மக்களது தற்போதைய பிரச்சினைகளிலிருந்து கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது. இந்தப் பின்னணியில், நாட்டில் மோசமடைந்துவரும் பொருளாதாரம் தொடர்பாக, நாட்டில் ஏமாற்றம் அதிகரிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அரசாங்கத்தின் நவதாராளவாதப் பிரகடனங்கள் தொடர்பில், சிறியளவு நம்பிக்கையே காணப்படுகிறது. அத்தோடு, போரால் அழிவடைந்த பிரதேசங்கள், போருக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன. இவ்வாறான, மக்களின் நாளாந்த நெருக்கடிகளை, அரசமைப்புச் சீர்திருத்தம் எவ்வாறு தீர்க்கும்?

அதிகாரப் பகிர்வை முன்னிறுத்தும் எம்மைப் போன்றவர்கள், அரசமைப்புத் தொடர்பான விவாதத்தை, வரட்சி, ஒழுங்கான தொழில்கள் இன்மை, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு போன்ற, மக்களின் பிரச்சினைகளுடன் இணைக்க வேண்டும். மக்கள் மனதில் முக்கியமாக உள்ள அவ்வாறான தற்போதைய பிரச்சினைகளில், அரசமைப்புச் சீர்திருத்தத்தின் தாக்கத்தைப் பற்றி நாம் வெளிப்படுத்த வேண்டும். 

 அவ்வாறில்லையெனில், நாம் சொல்வதை மக்கள் ஏன் கேட்க வேண்டும்? அரசமைப்புத் தீர்வு தொடர்பான செயற்பாடுகளில் அவர்கள் இணைவதைப் பற்றிச் சிந்திக்கவே தேவையில்லை. ஆகவே, அதிகாரப் பகிர்வும் பிராந்திய அபிவிருத்தியிலும் கிராமியப் புத்துயிர்ப்பிலும் அதன் தாக்கங்களும், அரசமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தின் மையத்தில் காணப்பட வேண்டும்.

புதிய அரசமைப்பென்பது, எமது அரசியல் எதிர்காலம் தொடர்பானது. பல்வகைமையானதும் ஜனநாயகமானதுமான சமூகத்தின் முக்கியத்துவத்தை, நாம் எப்படி விளங்கவைப்பது? இன ரீதியான துருவப்படுத்தலும் மேலாதிக்க உலகப் பார்வையும், தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் வெளிப்படுத்தப்படும் காலகட்டத்தில், நாட்டின் அனைத்துப் பகுதியிலும், இனங்களுக்கிடையிலான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான அரசியல் தூரநோக்கென்பது அவசியமானதாகும்.

பல்வகைத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், தேசத்தையும் சமூகத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும், தூரநோக்குச் சிந்தனையின் ஓர் அங்கமாக, அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடு காணப்பட வேண்டும். அவ்வாறான சமூகப் பல்வகைத்தன்மை, பொருளாதார சமத்துவம் ஆகியன, வெறுமனே சட்டரீதியான ஏற்பாடுகளாக அன்றி, அரச கொள்கைகளை வகுப்பதற்கான முக்கியமான தன்மைகளாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அரசியல் தீர்வென்பது, இனப்பிரச்சினையை மாத்திரமன்றி, எமது சமூகத்தில் காணப்படும் வர்க்க, பாலின, சாதிய வேறுபாடுகளையும் ஆராய வேண்டும்.

முன்னிலையில் கடும்போக்குவாதிகள்

மக்களுக்கான தூரநோக்கொன்றை வெளிப்படுத்த, அரசமைப்புச் சீர்திருத்த முயற்சியில் ஈடுபட்டிருப்போர் தவறியிருக்கின்றமை, நாட்டிலுள்ள குறுகிய நோக்கங்கொண்ட கடும்போக்குவாதிகள், இவ்விவாதத்தைத் திசைதிருப்புவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. உண்மையில், அரசமைப்புச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவம் தொடர்பான அரசாங்கத்தின் சாடைமாடையான கருத்தாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படையான அறிவிப்புகளாகவும், வெளிநாட்டு முதலீட்டுகளைப் பெறுதல், சர்வதேச மன்றங்களில் அழுத்தங்களைக் குறைத்தல் உட்பட, சர்வதேசப் பிரிவுகளின் நம்பிக்கையை வெல்வது என்பது காணப்படுகிறது.

என்னைப் பொறுத்தவரை, அரசமைப்புச் சீர்திருத்த செயற்பாடுகளில், சர்வதேசத்துக்குப் பெருமளவில் ஆர்வமில்லை என வாதிடுவேன். உண்மையில், உலகின் ஏனைய பகுதிகளில் காணப்படும் முரண்பாடுகள் பற்றி, சர்வதேசக் கவனம் சென்றுவிட்டது. அத்தோடு, இலங்கையில் பொதுமக்களிடத்தில் காணப்படும் கலந்துரையாடல், புவியியல் - அரசியல் நலன்கள் பற்றியே காணப்படுகிறது.

இங்குள்ள பொதுவான கலந்துரையாடல் என்பது, ஒரு தசாப்தத்துக்கு முன்னர், போரின் உச்சக்கட்டத்தில் இருந்த, சர்வதேசமயப்படுத்தப்பட்ட சூழலிலேயே சிக்கிக் காணப்படுகிறது. இந்தப் பின்னணியில் தான், இறையாண்மை, சர்வதேசத் தலையீடு, நாட்டின் பிளவு போன்ற விடயங்களாக இவ்விவாதத்தைத் தெற்கிலுள்ள குறுகிய நோக்கங்கொண்ட கடும்போக்குவாதிகள் மாற்றியுள்ளனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கொழும்புக்கு அடிபணிகிறது எனவும் சர்வதேச அழுத்தத்தைக் குறைத்து, தமிழ் மக்களின் விருப்புகளுக்குத் துரோகம் செய்துவிட்டது எனவும், வடக்கிலுள்ள குறுகிய நோக்கங்கொண்ட கடும்போக்குவாதிகள் கூறுகின்றனர்.

தெற்கிலும் வடக்கிலும் காணப்படும் இவ்வாறான கடும்போக்குவாதிகள், இரு துருவங்கள் போன்று காணப்பட்டாலும், நாட்டைத் துருவப்படுத்தி வைப்பது என்ற நோக்கத்தில், அவர்கள் இணைகிறார்கள். சதிக் கொள்கைகள் அல்லது பிரிவினை, சர்வதேசத் தலையீடு போன்ற கருத்தாடல்கள் மூலமாக, பயத்தை ஏற்படுத்துகின்றனர். 

மேலும், முஸ்லிம்களின் பிரச்சினை எழும் போது, இந்தச் சிங்கள, தமிழ் கடும்போக்குவாதிகள் ஒருங்கிணைந்து, தமது முகத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்தக் கடும்போக்குவாதிகள், அவர்களது அரசியல் இருப்பிடம் எவ்விடமாக இருந்தாலும், வெட்கமின்றி முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக, தமது கருத்தாடல்களில் இருக்கின்றனர்.

சிங்கள பௌத்த தேசியவாதிகளை ஒன்றுதிரட்ட எதிர்பார்க்கும் ஒன்றிணைந்த எதிரணிக்கும், அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் அங்கமாக உள்ள ஒடுக்கமான சில தமிழ்த் தேசியவாதக் குழுக்களுக்கும், அரசமைப்புச் சீர்திருத்தத்துக்கான செயற்பாடுகளைத் தாக்குவதென்பது, அவர்களுடைய நாசகரமான அரசியல் செயற்பாடுகளுக்கான திரையாகக் காணப்படுகிறது.

இந்த இரண்டு பிரிவுகளிடமும், மக்களின் பிரச்சினைகளுக்கான ஆரோக்கியமான தீர்வுகள் எவையும் கிடையாது; அரசியல் தீர்வைப் பற்றிச் சிந்திக்கவே தேவையில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகள், தேசியப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான இன்னொரு சந்தர்ப்பத்தையும் குழப்பக்கூடும். இவ்வாறான நம்பிக்கையற்ற அரசியலென்பது, எமது அழிவுமிகுந்த அரசியலின் சாபமாகும்.

இலகுவான பாதை இல்லை

புதிய அரசமைப்பை வரைவதில் ஈடுபட்டிருந்த இலங்கையின் சட்ட நிபுணர்கள் செய்யத் தவறிய விடயமாக, வர்க்கப் பிரச்சினையை எதிர்கொள்ளாமல் விட்டமை காணப்படுகிறது. இது, அரசமைப்பின் கட்டமைப்பில் மாத்திரமன்றி, புதிய அரசமைப்புக்கான ஒன்றுதிரட்டல் என்ற, விரிவான விடயத்திலும் தவறப்பட்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு இன சமுதாயங்களையும் சேர்ந்த தொழிலாளர் வர்க்கத்துக்கும் கிராமிய மக்களுக்கும் பொருந்தக்கூடிய புதிய அரசமைப்பை, நாங்கள் எவ்வாறு உருவாக்குவது?

வடக்கிலுள்ள மக்கள், அதிகாரம் முழுவதும் யாழ்ப்பாணத்தில் குவிந்துள்ளதை வெறுப்பதைப் போன்றே, நாட்டிலுள்ள மக்கள், அதிகாரம் முழுவதும் கொழும்பில் குவிந்துள்ளதை வெறுக்கின்றனர். சமனற்ற அபிவிருத்தி, நிர்வாக அரச அதிகாரத்துடன் வர்க்க, சாதி இணைந்துள்ளமை ஆகியற்றோடு, சரிசமமற்ற அபிவிருத்தியுடன் கூடிய சமுதாய நீக்கத்தின் வரலாற்றுடன் அது இணைந்துள்ளது.

நாட்டின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, தனது அதிகாரங்களைக் கொழும்பில் குவித்துள்ள நிலையில், அதை இல்லாமல் செய்வதற்கான அடிப்படையாக, மேற்கூறப்பட்ட காரணங்கள் தானே அமைகின்றன? மத்தியில் குவிக்கப்பட்ட அரச அதிகாரத்திலிருந்து விடுபடும் அவ்வாறான முயற்சியென்பது, எண்ணிக்கையில் குறைவான உள்ள சிறுபான்மை இனங்களினதும் சமூக ரீதியாக விலக்கப்பட்டுள்ள சமயங்களினதும் கரிசனைகளைப் பாதுகாப்பதையும் இணைத்ததாக அமைய வேண்டும்.

எங்களது ஊடகங்களும் எங்களது தாராளவாத உயர்குடி மக்களும், ஊழல் தொடர்பாகத் தமது கவனத்தைச் செலுத்தும் நிலையில், சரிசமமற்ற அபிவிருத்தி, பிராந்திய ஏற்றத்தாழ்வு ஆகியன, அரிதாகவே கருத்திலெடுக்கப்படுகின்றன. 

அரசமைப்புத் தீர்வுக்காக ஆதரவைக் கொண்டிருப்போரும், அதை எதிர்ப்போரும், எமது சமுதாயத்தில் அதிகரித்துவரும் ஏற்றத்தாழ்வு என்ற பிரச்சினையை எதிர்கொள்வதற்குத் தயாராக இல்லை.

அரசியல் தீர்வுக்காக முன்னே உள்ள கடினமான பாதை என்பது, மக்களுடன் இணைந்து, கலந்துரையாடுவதில் தங்கியுள்ளது. 

வடக்கிலுள்ள முற்போக்காளர்களைப் பொறுத்தவரை, தமிழ்த் தேசியவாதத்துக்கு ஓய்வுகொடுக்க, அதிகாரப் பகிர்வு என்பது அவசியமானது. மறுபக்கமாக, தெற்கிலுள்ள முற்போக்காளர்கள், இந்த அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாத்திரமன்றி, நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அது எவ்வாறு செயற்பட முடியும் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. 

அரசமைப்புச் சீர்திருத்தச் செயற்பாடு எங்கு நோக்கிச் சென்றாலும், அரசியல் விவாதத்தில் நாம் பங்குபற்றுவதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. ஏனென்றால் இது, எமது ஜனநாயக எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற ஒன்றாக அமையப் போகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .