2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரசமைப்புச் சபை சட்டபூர்வமானது. ஆனால், சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானது

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2019 பெப்ரவரி 27 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, நாட்டில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காகவென உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சபை, பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது.   

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் இரத்துச் செய்யப்பட்ட அரசமைப்புச் சபையை, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், மீண்டும் கொண்டு வருவதற்காக, 2015ஆம் ஆண்டு, பெரிதும் முயன்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, அதை இப்போது, கடுமையாகச் சாடி வருகிறார்.

 அதேவேளை, 2010ஆம் ஆண்டு, பழைய அரசமைப்புச் சபையை இரத்துச் செய்வதற்கு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு, 2015ஆம் ஆண்டு, மீண்டும் அதைக் கொண்டு வருவதற்கு ஆதரவு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களும், தற்போதைய அரசமைப்புச் சபையைக் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.   

உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகளாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களை, அரசமைப்புச் சபை தொடர்ச்சியாக நிராகரித்தமையே, அச்சபை மஹிந்த, மைத்திரி அணிகளால், இவ்வாறு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.  

அரசமைப்புச் சபையில் ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் செல்வாக்கு, ஏறத்தாழ சரிசமமாகும் வகையிலேயே, அச்சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். அவ்வாறு தான், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   

ஆனால், இப்போது இருப்பது, மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட, அரசமைப்புச் சபையாகும். எனவே, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையில் நியமிக்கப்பட்டவர்கள், அச்சபையில் இல்லை. இருப்பவர்கள், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர்களே.  

ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதிகள், சபையில் இருக்க வேண்டும் எனச் சட்டம் கூறுகிறது. தற்போதைய நிலையில், சம்பந்தனின் பரிந்துரையில் நியமிக்கப்பட்டவர்களை நீக்கவும் சட்ட விதிகள் இல்லை. தற்போதைய பிணக்குக்குக் காரணம் அதுவே.  

அரசமைப்புச் சபையின் தலைவர் சபாநாயகரேயாவார். தற்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான கருஜயசூரியவே சபாநாயகராக இருக்கிறார். பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் உத்தியோகபூர்வமாக சபையில் அங்கம் வகிப்பர். அதாவது, ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்த ராஜபக்‌ஷவும் அரசமைப்புச் சபையின் உறுப்பினர்களாவர்.  அவர்களுக்குப் புறம்பாக ஜனாதிபதியின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சபையில் அங்கம் வகிப்பார். தற்போது, மஹிந்த சமரசிங்கவே ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருக்கிறார்.  

 பிரதமரினதும் எதிர்க்கட்சித் தலைவரினதும் இணக்கத்தில் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இச்சபைக்கு நியமிக்கப்படுவர். அதன்படி, ரணில் விக்கிரமசிங்கவினதும் சம்பந்தனினதும் இணக்கப்பாட்டில் நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் சமல் ராஜபக்‌ஷ. சம்பந்தனே அவரது பெயரை முன்மொழிந்தார்.   

பிரதமரினதும் எதிர்க்கட்சித் தலைவரினதும் கட்சிகளல்லாத ஏனைய கட்சிகள் சார்பில் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்படுவார். அதன்படி, மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்   

சம்பந்தனினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் இணக்கப்பாட்டில், சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவரும் அரசமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட்டனர்.   

எனவே, இப்போது சபையில் தலைவர் உள்ளிட்ட 10 உறுப்பினர்களில், ஜனாதிபதியின் பிரதிநிதியான மஹிந்த சமரசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவும் சமல் ராஜபக்‌ஷவும் தவிர்ந்த ஏனைய ஏழு பேரும், மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் அரசியல் ரீதியாக, ஆதரவானவர்கள் அல்லர்.  அந்த ஏழு பேரில் நான்கு பேர், மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் எதிரான, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆவர். மூன்று பேர் ரணிலாலும் சம்பந்தனாலும் பரிந்துரை செய்யப்பட்டு, நியமிக்கப்பட்ட சிவில் சமூக உறுப்பினர்கள்.   

இவர்கள் அரசியல் சாராதவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர்கள் ரணிலாலும் சம்பந்தனாலும் பரிந்துரை செய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களை மைத்திரி, மஹிந்த அணியினர் ஏற்கத் தயாராக இல்லைப் போல்த்தான் தெரிகிறது.   

எனவே, சட்டத்தால் எதிர்பார்க்கப்பட்ட சமநிலை, தற்போதைய அரசமைப்புச் சபையில் இல்லை என்றே தெரிகிறது.   

கடந்த வருடம் ஒக்டோபர் 26ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணிலுக்குப் பதிலாக மஹிந்தவைப் பிரதமராக நியமித்து, பெரும் அரசியல் நெருக்கடிகளை உருவாக்கினார். அன்றே, மைத்திரியின் தலைமையை ஏற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக் குழு, ஐ.தே.க தலைமையிலான அரசாங்கத்திலிருந்து விலகியது.   

அதன் பின்னர், அக்குழுவும் மஹிந்தவின் தலைமையை ஏற்கும் ஐ.ம.சு.மு குழுவும் ஓரளவுக்கு இணைந்து செயற்பட ஆரம்பித்தன. அதன் பிரகாரமே, ஐ.ம.சு.முவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவர் என்ற முறையில், மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவரானார்.   

ஐ.ம.சு.முவின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மஹிந்தவின் தலைமையை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால், அவர்கள் ஒரே கட்சியின் உறுப்பினர்களாக மஹிந்தவை, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில், சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் அதை நிராகரிக்க முடியாமல் போய்விட்டது.   

மஹிந்த அவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரானாலும், அரசமைப்புச் சபையில் அவரது பரிந்துரையில் நியமிக்கப்பட்டவர்கள் எவரும் இல்லை. அதேவேளை, அரசமைப்புச் சபை நியமிக்கப்பட்டதன் பின்னர், அதன் உறுப்பினர்கள் மூன்று வருடங்கள் அப்பதவிகளை வகிப்பர் என்றே, அரசமைப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.   

இடையில், எதிர்க்கட்சித் தலைவர் மாறினால், அந்த உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும் எனச் சட்டத்தில் எங்கும், எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, அவர்கள் சட்டப்படி, அதன் பின்னரும் பதவி வகிக்கலாம். அது, சட்டத்துக்கு முரணானது இல்லை. ஆனால் அது, அரசமைப்புச் சபையின் நோக்கத்துக்கு முரணானது.  

இந்த நிலையில், இப்பிரச்சினையைத் தீர்க்க உள்ள ஒரே வழி, அரசமைப்புச் சபைக்கு ரணிலினதும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனினதும் கூட்டுப் பரிந்துரையில் நியமிக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளின் மூன்று உறுப்பினர்களும் அரசமைப்புச் சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து, ரணிலும் புதிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவும் பொது உடன்பாட்டின் கீழ், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் நியமிக்க அவகாசம் வழங்குவதேயாகும்.   

ஏற்கெனவே சம்பந்தனால் பிரேரிக்கப்பட்டு, ரணிலின் இணக்கத்தின் பேரில், அரசமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட்ட சமல் ராஜபக்‌ஷ, தாம் அச்சபையிலிருந்து இராஜினாமாச் செய்வதாகக் கூறியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், ஏனைய நான்கு பேரில் ஒருவரேனும் இராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.  அவ்வாறு, இராஜினாமாச் செய்வதுதான், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் நோக்கத்துக்கு அமைவாக இருக்கும் என்பதும், ஜனநாயகத்துக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இல்லை.   

எனினும், அரசமைப்புச் சபையும் ஒரு வகை அரசியல் களமாகவே இருக்கிறது. அது சுயாதீனமானதொரு நிறுவனமாக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதன் 10 உறுப்பினர்களில் ஏழு பேர், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள். எனவே, அது சுயாதீன சபையாகக் கருதப்பட்ட போதிலும், அது ஒரு வகையில், சர்வகட்சி சபையாகவே இயங்குகிறது என்றும் கூறலாம்.  

 

அரசமைப்பு சபையின் கதை

அரசமைப்புச் சபையை, நாட்டில் எந்தவோர் அரசியல் கட்சியும் அதன் ஆரம்பத்தில் கேட்கவில்லை. அது உருவாக்கப்பட்ட 2001ஆம் ஆண்டுக்கு முன்னர், பல அரசியல் கட்சிகள், சுயாதீன ஆணைக்குழுக்களையே கோரினர்.  
அதாவது, சுயாதீன பொதுச் சேவை ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு, சுயாதீன நீதித்துறை ஆணைக்குழு ஆகியவற்றையே பல அரசியல் கட்சிகள் கோரின.  ஆனால், பொதுச் சேவை ஆணைக்குழுவொன்றும் நீதிச் சேவை ஆணைக்குழுவொன்றும் அப்போதும் இயங்கி வந்தன. எனினும், அவை ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களாக இருந்தமையால், அவை சுயாதீன ஆணைக்குழுக்களாகக் கருத முடியாது எனப் பலர் வாதிட்டனர்.  
குறிப்பாக, நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் இரண்டாவது குடியரசு அரசமைப்பையும் நாட்டில் அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியே, அந்த அரசமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனாதிபதியால் இந்த ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுவதை விரும்பவில்லை. எனவே, சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய எண்ணக்கரு ஐ.தே.கவுக்குள்ளேயே பிறந்தது.  
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி, சுயாதீனக் குழுக்களுக்காகப் போராடவில்லை. அந்தச் சுலோகத்தைப் பின்னர் தமதாக்கிக் கொண்ட, மக்கள் விடுதலை முன்னணியே இந்த விடயத்தில் கடுமையாகப் போராடியது.   
2000 ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான பிரசார காலத்திலேயே, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், விமான விபத்தொன்றில் உயிரிழந்தார். அந்தத் தேர்தலின் போது, சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரிக்க மு.கா தீர்மானித்திருந்த போதிலும், அஷ்ரப் சந்திரிகாவை பகிரங்கமாகவே விமர்சித்து வந்தார்.   
எனவே, அவரது மரணத்தின் பின், மு.கா தலைமையை ஏற்ற ரவூப் ஹக்கீம், மேற்படி நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதை நிபந்தனையாக முன்வைத்தே சந்திரிகாவின் பொதுஜன ஐக்கிய முன்னணியை, அந்தத் தேர்தலின் போது ஆதரித்தார்.  
 அத்தோடு, பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, 100 நாள்களில் ஜனாதிபதி சந்திரிகா, அந்த நான்கு சுயாதீன ஆணைக் குழுக்களை நியமிக்காவிட்டால், தாம் அரசாங்கத்தில் இருந்து இராஜினாமாச் செய்வதாக ஹக்கீம் அறிவித்தார்.  2001ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி, அந்த 100 நாள்கள் முடிவடைந்தன. ஆனால், சந்திரிகா தாம் வாக்குறுதியளித்த படி, ஆணைக்குழுக்களை நியமிக்கவில்லை; ஹக்கீமும் அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை.  சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக, சந்திரிகா வழங்கிய வாக்குறுதியைக் காட்டி, அவரும் அரசாங்கத்திலேயே இருந்துவிட்டார்.  
அதே ஆண்டு, ஜுன் மாதம், குருநாகலில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய சமுர்த்தி, கிராம அபிவிருத்தி, நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, வர்த்தக வணிக அமைச்சராகவிருந்த ரவூப் ஹக்கீமைத் தாக்கிப் பேசினார்; ஹக்கீமும் அரசாங்கத்தைத் தாக்கிப் பேசினார்.   
சந்திரிகா, ஜுன் மாதம் 20ஆம் திகதி, ஹக்கீமை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். மு.கா அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை நீக்கிக் கொண்டது. அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.  
இந்த நிலையில், ஜூன் 22ஆம் திகதி ஐ.தே.கவும் தமிழ்க் கட்சிகளும் அரசாங்கத்துக்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைத்தன.   
அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது. எனவே, சந்திரிகா ஜுலை 10ஆம் திகதி நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரை ஒத்தி வைத்தார். இதற்கிடையே அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவைத் நாடியது. அக்கட்சி அரசாங்கத்துக்குக் கடினமான சில நிபந்தனைகளை முன்வைத்து, அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்தது.   
அமைச்சர்களின் எண்ணிக்கையை 20 ஆகக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அந்நிபந்தனைகளில் முக்கியமானவையாகும்.  
அதன்படி சந்திரிகா, 20 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசாங்கம் ஒன்றை நியமித்தார். அதை நன்னடத்தை அரசாங்கம் (Probationary government) என, மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டது.   
சந்திரிகா, சுயாதீன ஆணைக்குழுக்ளை நியமிப்பதற்காக 17ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். அப்போது, சுயாதீன ஆணைக்குழுக்களை யார் நியமிப்பது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதன்படி தான், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவற்றின் பங்களிப்புடன், அக்குழுக்களை நியமிக்கும் அரசமைப்புச் சபை என்ற சபை பற்றிய எண்ணிக் கரு உருவாகியது.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X