2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன்

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2020 ஜனவரி 15 , மு.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதிவெலயில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் அமைந்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இருந்து, கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் சில இறுவட்டுகள் தான், இன்று நாட்டின் பிரதான பிரச்சினை என்று கூறுமளவுக்கு, அவை ஊடகங்களில் இடம்பிடித்துக் கொண்டுள்ளன.  

அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், பெண்கள் ஆகியோருடன், ராமநாயக்க தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் நடத்தியதாகக் கூறப்படும் உரையாடல்களே, இந்த இறுவட்டுகளில் உள்ளன எனக் கூறப்படுகிறது.  

இந்த உரையாடல்கள் மூலம் அவர், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் அதிகாரிகளைத் துண்டி உள்ளதாகவும் முக்கியமான வழக்குகள் தொடர்பாக, நீதிபதிகளுடன் உரையாடி உள்ளதாகவும் தற்போது ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் ஆளும் கட்சியை ஆதரிக்கும் சில பிக்குகளும் கூறி வருகின்றனர்.  

அதற்குப் புறம்பாக, ஐக்கிய தேசிய கட்சியின் சில தலைவர்களுக்கு எதிராக, ரஞ்சன் வேறு சில அரசியல்வாதிகளுடன் உரையாடுவதையும் அந்த ஒலி இறுவட்டுகள் மூலம், கேட்கக் கூடியதாக இருக்கிறது.   

சில உரையாடல்கள் உண்மையாக இருந்தால், அவற்றின் மூலம், பெண்களுடன் எவ்வாறு தகாத உறவுகளை, அவர் வைத்திருந்தார் என்பதும் தெரிய வருகிறது.  

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொலைபேசி உரையாடல்களை, அவர் இவ்வாறு இறுவட்டுகளில் சேமித்து வைத்திருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அந்த எண்ணிக்கை சரியானதா என்ற சந்தேகமும் எழுகின்றது.   

ஏனெனில், சில உரையாடல்கள் 20, 30 நிமிடங்களாக நீடித்துச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது. ஓர் உரையாடல், ஐந்து நிமிடங்களாக இருந்தாலும் ஒரு இலட்சம் உரையாடல்கள் இருந்தால், அவர் இந்த உரையாடல்களுக்காக மட்டும், ஐந்து இலட்சம் நிமிடங்களைச் செலவிட்டு இருக்க வேண்டும்.  

 ஐந்து இலட்சம் நிமிடங்கள் என்றால், சுமார் 8,300 மணித்தியாலங்கள் ஆகும். ஒரு நாளுக்கு ஐந்து மணித்தியாலங்கள் அவர் இவ்வாறான உரையாடல்களைப் பதிவு செய்வதற்காக செலவழித்தார் என்று வைத்துக் கொண்டாலும், சுமார் 1,700 நாள்களாக அதாவது சுமார் நாலரை வருடங்களாகத் தொடர்ந்து அவர் இந்தத் தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்வதில், ஈடுபட்டு இருக்க வேண்டும்.   

ஆனால், அவரது சில உரையாடல்கள், அரை மணித்தியாலங்களாக நீடிக்கின்றன. எனவே, இலட்சக் கணக்கான உரையாடல்கள், பதிவு செய்யப்பட்டு இருக்குமோ என்று, நியாயமானதொரு சந்தேகம் எழுகிறது.   

உண்மையிலேயே, ஒரு இலட்சத்துக்கு அதிகமான உரையாடல்களை, அவர் இவ்வாறு பதிவு செய்திருந்தால், அது ஒருவித மனநோய் என்றே கூற வேண்டும்.  

இப்போது, பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள், அரசியல்வாதிகள், பெண்கள் ஆகியோருடன், ரஞ்சன் நடத்தியதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் எனக் கூறி, பல உரையாடல்களை, பல அரசியல்வாதிகளும் பிக்குகளும், ஊடகங்களின் முன்வந்து  ஒலிபரப்பிக் காட்டுகிறார்கள். ஆனால், தமக்கு, அவை எங்கிருந்து கிடைத்தன என்பதை, அவர்கள் கூறுவதில்லை. இவ்வாறு கூறும்போதுதான், அதனது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும். 

தமது வீட்டில் இருந்து, பொலிஸார் கைப்பற்றிய இறுவட்டுகளை, பொலிஸார் நன்றாகப் பொதி செய்து, முத்திரையிட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக வைத்துக் கொண்டதாகவும் அவை, இப்போது வழக்குகளுக்கான தடயப் பொருள்களாக இருக்கையில், பல அரசியல்வாதிகள், பிக்குகளிடம் அவை சென்றடைந்து உள்ளதாகவும் ரஞ்சன் குற்றஞ்சாட்டுகிறார்.   

இது தொடர்பாக, நீதிமன்றத்திடமும் அவர் முறைப்பாடு செய்திருக்கிறார். ஆனால், தாம் கைப்பற்றிய இறுவட்டுகளைத் தாம், எவரிடமும் கொடுக்கவில்லை என, பொலிஸார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.  

ஓட்டோ ஒன்றில், யாரோ நபரொருவர் தவறுதலாகக் கைவிட்டுச் சென்ற ஒரு பொதியிலேயே, இந்த இறுவட்டுகள் இருந்ததாகவும் அந்த ஓட்டோவின் சாரதி, அப்பொதியின் உரிமையாளரைத் தேடியும், அவரைக் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில், பொலிஸாரிடம் அப் பொதியைக் கையளித்ததாகவும் இப்போது ஒரு கதை பரவி இருக்கிறது.   

இந்த நேர்மைக்காக, அந்த ஓட்டோச் சாரதிக்கு ஒரு மில்லியன் ரூபாய் பரிசாக வழங்க, ஓட்டோச் சாரதிகள் சங்கமொன்று முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.  

 இந்தக் கதை உண்மையானதா, ரஞ்சனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட இறுவட்டுகளை, பொலிஸார் ஆளும் கட்சி அரசியல்வாதிகளிடம் கொடுத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டில் இருந்து, அவர்களைப் பாதுகாப்பதற்காகச் சோடிக்கப்பட்ட கதையா என்பது, இன்னமும் தெளிவாகவில்லை.   

அது, சோடிக்கப்பட்ட கதையாக இருந்தாலும், மீண்டும் பொலிஸார் அதே குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். ஓட்டோக்காரர், பொலிஸாரிடம் கையளித்த பொதியில் இருந்தவை, அரசியல்வாதிகளிடம் எவ்வாறு சென்றடைந்தன?  

ஓட்டோக்காரர் கையளித்த பொதியில் இருந்தவை, இவ்வளவு சர்ச்சைக்கும் சட்டப் பிரச்சினைக்கும் உரியவை என்பதை, பொலிஸார் விளங்கிக் கொள்ளவில்லையா? 

அந்தப் பொதியில் இருந்தவை தான், இப்போது அரசியல்வாதிகளிடம் சென்றடைந்துள்ளன என்றால், அவை சர்ச்சைக்குரியவை என்பதாலேயே, அவ்வாறு அரசியல்வாதிகளிடம் சென்றடைந்துள்ளன. அவை, சாதாரண உரையாடல்களாக இருந்தால், அது செய்தியாக மாறியே இருக்காது.  

இந்தக் கேள்விக்கு, பொலிஸார் நம்பகமான பதில் வழங்கும் வரை, ரஞ்சனுக்கும் அவரோடு தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கே, இப்போது இந்த இறுவட்டுகளை வைத்திருக்கும் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் ஆளாகின்றனர்.   

அதாவது, இந்த அரசியல்வாதிகளும் வழக்குகளின் தடயப் பொருள்களை, வழக்குகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களை, ரஞ்சனைப் போலவே பொலிஸாருடன் பரிமாறிக் கொண்டுள்ளனர் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.  

நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு வெளியே எவருடனும் வழக்குகளைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொள்வது குற்றமாகவே கருதப்படுகிறது. இந்த இறுவட்டுகளின் படி, ரஞ்சன் அவ்வாறு நீதிபதிகளுடன் உரையாடியுள்ளதாகத் தெரிகிறது.   

அதேவேளை, அவர் மூத்த பொலிஸ் அதிகாரிகளுடனும் முக்கியமான வழக்குகளைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டுள்ளார். அதன் மூலம், அவ்வழக்குகள் மீது அரசியல் செல்வாக்கைச் செலுத்துகிறார். அவர் பெண்களோடு தகாத உறவுகளை வைத்திருக்கிறார். தமது கட்சியைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளுடன் அதே கட்சியைச் சேர்ந்த சில தலைவர்களைப் பற்றி, மிக மோசமாகக் கருத்துப் பரிமாறிக் கொள்கிறார்.  

குற்றங்கள் அம்பலமானால் மட்டுமே, அவை குற்றங்களாகக் கருதப்படுகின்றன. படுபாதகச் செயல்களில் ஈடுபட்டாலும், அவை அம்பலமாகாத வரை, அவற்றைப் புரிந்தவர்கள் புனிதமானவர்களாகவும் மதிக்கப்படலாம். இதுவே இங்கும் நடைபெறுகிறது.   

இங்கே, ரஞ்சனை நியாயப்படுத்த முடியாது; அவர் நீதித்துறையில் தலையீடு செய்திருக்கிறார். ஆனால், மற்றவர்களும் புனிதமானவர்கள் அல்லர். இது எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், பொதுவாக அரசியல்வாதிகள் நடந்து கொள்ளும் முறையையே வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.  

இலங்கையில், நீதிபதிகளோடு தொடர்பு கொண்டு, வழக்குகளில் தலையீடு செய்த முதலாவது அல்லது, ஒரே அரசியல்வாதி ரஞ்சனா?   

தமக்கு வேண்டியவாறு, பொலிஸாரை வழிநடத்த முற்பட்ட முதலாவது அல்லது, ஒரே அரசியல்வாதி ரஞ்சனா?  

 தமது கட்சித் தலைவர்களை, ‘மடையர்கள்’ என்று திட்டிய முதலாவது அல்லது, ஒரே அரசியல்வாதி ரஞ்சனா?   

பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்த முதலாவது அல்லது, ஒரே அரசியல்வாதி ரஞ்சனா?  

மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில், அலரி மாளிகையில் இருந்து, நீதிபதிகளுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் சென்றதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பலமுறை கூறியிருக்கிறார்.   

தாம் கடமை முடிந்து வீடு செல்லும் வழியில், ஜனாதிபதியின் அழைப்பின் பேரில், அலரி மாளிகைக்குச் சென்றதாகவும் அப்போது ஜனாதிபதி தமக்குப் பதவியுயர்வு வழங்க உள்ளதை அறிவித்ததாகவும் ஒரு பெண் நீதிபதி, சில காலங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.  

ஜனாதிபதியின் விருப்பத்துக்கு மாறாகத் தாம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமித்தமையே, தாம் ஜனாதிபதியின் கோபத்துக்கு ஆளாவதற்குக் காரணம் என்றும், இறுதியில் வேறு பல காரணங்களும் சேர்ந்து, தாம் குற்றப் பிரேரணை மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, அண்மையில் வெளியிட்ட புத்தகமொன்றில் கூறியிருக்கிறார்.  

தங்காலையில், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த பிரிட்டிஷ் பிரஜை ஒருவர், அரசியல்வாதி ஒருவரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, அவரது காதலி, பலர் முன், பலரால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று, ஒரு வருடம் வரை, சம்பந்தப்பட்ட அரசியல்வாதி கைது செய்யப்படவில்லை. இறுதியில் அவரைக் கைது செய்ய, பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ் தலையிட வேண்டி ஏற்பட்டது.   

அக்காலத்தில், மற்றோர் அரசியல்வாதி, நூறு பெண்களை வல்லுறவுக்கு உள்ளாக்கியதைத் தமது நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றில் கொண்டாடியதாகவும் செய்திகள் மூலம் வெளியாகி இருந்தது.  

ஒரு காலத்தில், அரசியல்வாதிகள் சட்டத்துக்குப் பயந்து இருந்தார்கள். ரஞ்சன் செய்தவை கையும் மெய்யுமாக மாட்டிக் கொண்டுள்ளன. மற்றவர்களும் இதையே செய்தனர் என்பது, சகலருக்கும் தெரியும். ஆனால், அவர்கள் இதைப் போல் ஆதாரங்களை வழங்கவில்லை; வேறுபாடு அவ்வளவு தான்.    

 

ரஞ்சனைக் குறை கூறுபவர்கள் புனிதமானவர்களா?

 இலங்கை அரசியலினதும் சமூகத்தினதும் அநாகரிகத் தன்மையை அம்பலப்படுத்தியதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சன்மானம் வழங்க வேண்டும் எனப் பிரபல ஊடகவியலாளரான விக்டர் ஐவன் கூறியிருக்கிறார்.   

உண்மைதான்! ரஞ்சனும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றியதாகக் கூறப்படும் இறுவட்டுகளில் பதியப்பட்டு இருப்பதாகக் கூறப்படும் உரையாடல்களில் ஈடுபட்டவர்களும்தான், வரலாற்றில் முதன் முறையாகக் குற்றம் இழைத்துள்ளனர் என்பதைப் போல், அரசியல்வாதிகளும் சில பிக்குகளும் சில ஊடகங்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், நிலைமை அதுவல்ல என்பதை, வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால் தெளிவாகும்  

ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்தனவின் காலத்தில், அவருக்கும் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கும் இடையே, பெரும் கருத்து மோதல் ஒன்று ஏற்பட்டது. அப்போது, பிரதம நீதியரசரைப் பதவிநீக்கம் செய்ய, ஜே.ஆர் குற்றப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார்.   

ஜே. ஆருக்குப் பிடிக்காத தீர்ப்புகளை வழங்கிய சில உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வீடுகளுக்கு, ஆளும் கட்சியின் குண்டர்கள் கல்லெறிந்தனர். ஜெயவர்தனவின் ஆலோசனைப்படி பொலிஸார், நடிகரும் சந்திரிகா குமாரதுங்கவின் கணவருமான விஜய குமாரதுங்கவுக்கு எதிராக, அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ச்சி நடத்தியதாக வழக்கொன்றைச் சோடித்தனர்.  

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் காலத்தில், அவருக்கும் முன்னாள் நிதியமைச்சரான ரொனி டி மெல்லுக்கும் இடையே, கருத்து மோதல் ஒன்று ஏற்பட்டது. பொலிஸார், ரொனிக்கு எதிராக, நிதி மோசடி தொடர்பாக வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர்.   

ரொனி, வெளிநாடொன்றுக்குச் சென்று தங்கிவிட்டார். ஒரு வருடத்துக்குப் பின்னர் இருவரும் சமாதானமாகி விட்டனர். ரொனி, நாடு திரும்பினார். தாம் வழக்கைத் தொடர்வதில்லை என, சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.  

அதேகாலத்தில், அரசாங்கத்துக்கு அவப் பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபரில் ஒருவரான பிரேமதாஸ உடுகம்பல என்பவருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு எதிராகப் பிடிவிராந்தும் பிறப்பிக்கப்பட்டது.   

உடுகம்பல, இந்தியாவுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டார். ஜனாதிபதி பிரேமதாஸ, கொல்லப்பட்டதன் பின்னர், அவர் நாடு திரும்பினார். பிடி விராந்தின்படி, அவர் கைது செய்யப்படவில்லை; வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது. அவருக்கு, துறைமுகத்தில் உயர் பதவியொன்றும் வழங்கப்பட்டது.  

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் பத்மநாபாவுக்கு எதிராக, அரசாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 1987ஆம் ஆண்டளவில், வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் கீழ், கிளர்ச்சித் தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் நீக்கிக் கொள்ளப்பட்டன. அதன்படி, பத்மநாபாவுக்கு எதிரான வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.   

ஆனால், புலிகளுக்கும் பிரேமதாஸ அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில், புலிகளின் நெருக்குதலால் பத்மநாபாவுக்கு எதிரான வழக்கு, மீண்டும் தொடுக்கப்பட்டது. இவை, மிகவும் பிரசித்தி பெற்ற சம்பவங்களாகும்.   

எனவே, நீதித்துறையிலும் பொலிஸ் திணைக்கள விவகாரங்களிலும் அரசியல்வாதிகள் தலையீடு செய்வதானது, நீண்டகாலமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும்.   

அது சட்ட விரோதமானது; அநாகரிகமானது என்பதில் விவாதத்துக்கு இடமில்லை. ஆனால், ரஞ்சன் தான் வரலாற்றில் முதல் முறையாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதைப் போல், ஆளும் கட்சியினர் தற்போது பேசுகின்றனர்; அது கேலிக்கூத்தாகும். அதேவேளை, ரஞ்சனின் செயலை நியாயப்படுத்தவும் முடியாது.  

பெண்களுடன், ரஞ்சன் தகாத உறவு வைத்திருந்தார் என்பதற்கான, ஆதாரங்களையும் இந்த உரையாடல்கள் மூலம், ஆளும் கட்சி அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர். அரசியல் ஆதாயத்துக்காகவே, அவர்கள் இந்த உரையாடல்களை அம்பலப்படுத்துகின்றனர்.  

அதுவல்லாது, தாம் புனிதமானவர்கள் என்று அவர்களால் கூற முடியுமா? தமக்கு இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைத்தால், அவற்றைத் தாம் பயன்படுத்தாமல் விட்டுவிடுவோம் என்று, அவர்களில் எத்தனை பேரால் தான் கூற முடியும்?   

ரஞ்சனின் உரையாடல்களின் மூலம் தெரியவரும் நிலைமைதான், நாட்டின் சாதாரண நிலைமை. அதை ஆதாரபூர்வமாக அவர் நிரூபித்துள்ளார். அவ்வளவு தான்.

விந்தை என்னவென்றால், இந்த உரையாடல்களால் நீதித்துறை மீதும் பொலிஸார் மீதும் வைத்திருந்த நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள் என்று கூறிக் கொண்டே, ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் பிக்குகளும் ஆளும் கட்சியை ஆதரிக்கும் சில ஊடக நிறுவனங்களும் அவற்றைப் பகிரங்கப்படுத்துகிறார்கள்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .