2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரசியலில் பெண்கள்: நாம் எப்போது கரையேறுவோம்?

Gopikrishna Kanagalingam   / 2017 ஜூன் 29 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு வயதில், பொது அறிவு வினாக் கொத்துகளில், “உலகின் முதலாவது பெண் பிரதமர் யார்?” என்ற கேள்வி, அநேகமாக இடம்பெற்றிருக்கும். நாமும் பெருமையுடன், “இலங்கையின் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க” என்று எழுதிவிட்டு, முழுமையான புள்ளிகளைப் பெறுவோம்.   

அதேபோல், ஆசியாவிலேயே, பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கிய முதல் சில நாடுகளில், இலங்கையும் ஒன்று. அவ்வாறான முக்கியமான பெருமையைக் கொண்ட இலங்கையில், அதற்குப் பின்னர் போதியளவிலான முன்னேற்றங்கள், அரசியலில் பெண்கள் என்ற விடயத்தில் காணப்பட்டிருக்கவில்லை. ஆனால், ஏனைய நாடுகள், சிறப்பான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.  

பாரதிராஜாவின் இயக்கத்தில் சத்யராஜ் நடித்து, 1987ஆம் ஆண்டு வெளியான ‘வேதம் புதிது’ என்ற திரைப்படம், பரந்த அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் ஒரு கட்டத்தில், சாதிக்கெதிரான கருத்துகளைக் கொண்ட சத்யராஜின் கதாபாத்திரமே, சாதிப் பெயர் அடையாளத்தைக் கொண்டிருப்பதைப் பார்த்து, சத்யராஜ் ஆற்றைக் கடக்க உதவிய சிறுவனொருவன், “நான் கரையேறிவிட்டேன்; நீங்கள் இன்னும் கரையேறாமலேயே நிற்கிறீர்களே” என்று கூறும் வசனம், மிகுந்த வரவேற்பைப் பெற்றது.  

உலகிலுள்ள ஏனைய நாடுகள், இலங்கையைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கும் நிலை வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்தளவுக்கு, இலங்கையை முந்திக் கொண்டு, ஏனைய நாடுகள் சென்றுவிட்டன.  

இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தில், 12 அல்லது 13 உறுப்பினர்கள் மாத்திரமே பெண்களாகக் காணப்படுகின்றனர். கீதா குமாரசிங்கவின் பதவி தொடர்பாகக் காணப்படும் குழப்பத்தினாலேயே, 12 அல்லது 13 என்ற நிலைமை காணப்படுகிறது. அவர் பதவியை இழந்தால், அவருக்குப் பதிலாக ஆணொருவரே பதவியேற்பார் என்ற நிலையில், இந்த எண்ணிக்கை, 12 எனக் குறைவடையும். இது, இலங்கை நாடாளுமன்றத்தில் வெறுமனே 5.33 சதவீதமாகும்.  

சரி, வழக்கமாக, தேர்தலுக்குச் சற்று முன்னதாக அல்லது தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அல்லது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுத் தானே, அரசியலில் பெண்கள் என்பது கலந்துரையாடப்படும், தற்போது ஏன் திடீரென்று அது கலந்துரையாடப்படுகிறது என்ற குழப்பம் ஏற்படலாம். மேலே குறிப்பிட்ட காரணம்தான் முக்கியமானது. எப்போதும், தேர்தலுக்குச் சற்று முன்னரோ அல்லது பின்னரோ இது பற்றிக் கலந்துரையாடுவதில் பயன் கிடையாது. அரசியலில் பெண்களை உள்ளீர்ப்பது, அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்வதென்பது, நீண்டகாலத் திட்டமாகும். அதுபற்றிய கலந்துரையாடல்களை, ஆண்டு முழுவதும் மேற்கொள்வது அவசியமாகும்.  
இலங்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இவ்வாண்டில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலில் பெண்கள் என்ற விடயத்தைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் மிக முக்கியமானது.

ஏனெனில், இலங்கையின் சட்டத்தின்படி, உள்ளூராட்சி மன்றங்களில் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களில் 25 சதவீதமானவர்கள், பெண்களாக இருக்க வேண்டுமென்பது கட்டாயமாகும். இந்தச் சட்டத்தின் ஏற்பாட்டின்படி, இந்தத் தேர்தலில், ஆண்கள் அதிகபட்சமாக 75 சதவீதமான ஆசனங்களை மாத்திரமே கைப்பற்ற முடியும். மாறாகப் பெண்கள், 100 சதவீதமான ஆசனங்களையும் கைப்பற்ற முடியும்.  

எனவே, இலங்கையின் அரசியலில், பெண்களை உள்நுழைப்பதற்கான சிறந்த திட்டம் அல்லது ஏற்பாடொன்று தேவைப்படுமாயின், இந்த உள்ளூராட்சித் தேர்தலை விடச் சிறப்பான ஒரு வாய்ப்பு ஏற்படாது. சட்டத்துக்கு ஏற்ப, வெறுமனே 25 சதவீதமான பெண்களைத் தெரிவுசெய்வதை விட, தகுதிமிக்க அதிகளவிலான பெண்களைத் தெரிவுசெய்து, மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தலில் பெண்களில் முன்னேற்றத்துக்கான முதலாவது படியாக, இந்தத் தேர்தலைப் பயன்படுத்த முடியும்.  

எதற்காகப் பெண்கள் தேவை, ஆண்களால் பெண்களைப் பிரதிநிதித்துவம் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுப்பப்பட முடியும். ஆனால், இதுவரை கால அரசியல் வாழ்க்கையில், பெண்களின் பிரச்சினைகள், சரிவரக் கொண்டு செல்லப்படவில்லை என்பது உண்மையானது.

அதேபோல, தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அழுத்தங்களை வழங்க வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்கள் எந்தளவுக்கு அவசியமானவையோ, அதேபோல்தான், பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியமானது.  

அரசியலில் பெண்களில் பங்குபற்றுதல் குறைவு என்பது தொடர்பான கருத்துகளை எழுப்பும்போது, “தகுதியான பெண்கள் இல்லை” என்பதுவும் “பெண்கள் முன்வருகிறார்கள் இல்லை” என்பதுவும் பதில்களாகக் கிடைப்பதைக் கண்டிருக்கிறோம்.  

இலங்கையின் சனத்தொகை, ஏறத்தாழ 21 மில்லியன் ஆகும். அதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், பெண்களாவர். அதாவது, சுமார் 10.5 மில்லியன் பேர். அவ்வாறான 10.5 மில்லியன் பேரில், எம்மால் வெறுமனே 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தான் தெரிவுசெய்ய முடியுமென்பது, அவமானகரமானதல்லவா? 10.5 மில்லியன் பேரில், தகுதியான, ஆர்வம் மிக்க, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட 100 பெண்களையாவது எம்மால் கண்டுபிடிக்க முடியாதா?  

அவ்வாறு தகுதியான பெண்கள் இருந்தும், அவர்கள் முன்வருகின்றனர் இல்லை என்பது, ஏன் என்ற கவனம், முழுமையாகச் செலுத்தப்பட்டிருக்கிறதா? இந்த நிலைமைக்கு, ஊடகங்கள் முக்கியமான பொறுப்பை வகிக்கின்றன.   

ஆண் வேட்பாளருக்கும்/அரசியல்வாதிக்கும் பெண் வேட்பாளருக்கும்/அரசியல்வாதிக்கும் இடையில், ஊடக அறிக்கைகளில் காணப்படும் வித்தியாசமென்பது, வெளிப்படையானது. இது, இலங்கைக்கு மட்டும் உரித்தானது கிடையாது. அண்மையில், ஐக்கிய இராச்சியப் பிரதமர் தெரேசா மே-க்கும் ஸ்கொட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கொலா ஸ்டேர்ஜியோனுக்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பாக அறிக்கையிட்ட ஐக்கிய இராச்சிய ஊடகமொன்று, “அரசியல் கொள்கைகளை விடுவோம்; இதில் எவரின் கால்கள் சிறப்பானவை?” என்ற அர்த்தத்தில் முன்பக்கச் செய்தியை வெளியிட்டு, கவனத்தை ஈர்த்திருந்தது.  

இன்னமும் கூட, பெண் அரசியல்வாதிகளின் புற அழகை முக்கியத்துவப்படுத்தும் வகையிலான செய்தி அறிக்கைகளை, ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. பெண் அரசியல்வாதிகளுக்கு மாத்திரமல்லாமல், பெண்கள் தொடர்பான சாதாரண செய்தியிலும் கூட, இதை அவதானிக்க முடிகிறது. “விபத்தில் சிக்கி அழகான பெண் மரணம்” என்பது, சிங்கள மொழி ஊடகங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகமாக இருக்கிறது என்பது, முன்வைக்கப்படும் விமர்சனமாக இருக்கிறது.  

எனவே, ஊடகங்களைப் பொறுத்தவரை, நியாயமான, ஏற்றுக் கொள்ளத்தக்க அறிக்கையிடலில் ஈடுபடுவதென்பது, ஆரோக்கியமான அரசியல் சூழலைக் கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கும்.  

ஆனால் மறுபக்கமாக, பெண்களை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு, அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் காணப்படுகிறது.  

பிரான்ஸில் அண்மையில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில், 577 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு, 223 பெண்கள் தெரிவாகியிருக்கின்றனர். இது, மொத்த ஆசனங்களின் 38.65 சதவீதமாகும். இதற்கு முன்னர் அந்நாட்டில் காணப்பட்ட 155 பெண்களோடு ஒப்பிடும் போது, இது பாரிய முன்னேற்றமாகும். இந்த முன்னேற்றம் எவ்வாறு ஏற்பட்டது?  

பாரிய அரசியல் புரட்சியின் விளைவாக ஜனாதிபதியாகத் தெரிவாகிய இமானுவேல் மக்ரோன், தனது கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 428 வேட்பாளர்களில் 214 ஆண்களையும் 214 பெண்களையும் நிறுத்தியிருந்தார். இதன் காரணமாக, பெண்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது.  

ஐக்கிய இராச்சியத்திலும் அண்மையில் நடந்த தேர்தலில், 208 பெண்கள் தெரிவாகியிருந்தனர். 650 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய இராச்சிய கீழவையில், 200க்கும் மேற்பட்ட பெண்கள் தெரிவாகின்றமை, இதுவே முதற்தடவையாகும். இதில், தொழிற்கட்சி சார்பில் 40.4 சதவீதமான பெண் வேட்பாளர்களும் ஆளுங்கட்சி சார்பாக 28.7 சதவீதமான பெண் வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர். ஏனைய கட்சிகளும், தங்களின் பங்களிப்பை வழங்கியிருந்தன. இவ்வாறு, அரசியல் கட்சிகள் முன்வந்து செயற்படும் போதுதான், பெண்களின் அரசியலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.  

எனவே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஆரம்பித்து, அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில், போதுமான பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்ற ஆவல் காணப்படுகிறது. அதைத் தாண்டி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், பிரதான கட்சிகள் சார்பில், பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவாராயின், இன்னமும் ஆரோக்கியமான நிலைமையாக அமையும்.  

அரசியல் கட்சிகள், இவ்வாறு பெண் வேட்பாளர்களை நிறுத்தும்போது, வாக்காளர்களாகிய நாங்கள், அவர்களைத் தெரிவுசெய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும். தகுதிமிக்க ஏராளமான பெண்கள், அரசியலில் ஈடுபடும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் சாதிப்பதை உறுதிசெய்ய வேண்டிய தேவை, நாகரிகமடைந்த ஒரு சமூகமாக, எங்களுக்கு இருக்கிறது.  

ஏனென்றால், எம்மில் அரைவாசிப் பேரை ஒதுக்கிவிட்டு, அவர்களுக்கான வாய்ப்புகளை மறுத்துவிட்டு, நாம் செய்ய முற்படும் எந்த விடயமுமே, வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. நாம் எப்போதுதான் கரையேறுவோம்?  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X