2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரசியல் அறம் மறந்த மாவை

புருஜோத்தமன் தங்கமயில்   / 2020 மார்ச் 18 , மு.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (டெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஸ்ரீ

அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் சொல்லப்பட்டிருக்கின்றது.  

ஒரு மாவட்டத்தின் தலைமை வேட்பாளர், அதுவும் கடந்த பொதுத் தேர்தலில் தன்னை முன்னிறுத்திய கட்சிக்கு இறுதிவரை அறிவிக்காமல் விட்டுவிட்டு, இன்னொரு கட்சியின் வேட்பாளராக மாறுவது, அடிப்படை அரசியல் அறத்துக்கு முரணானது.   

அதுவும், ஒரே கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்கிடையிலான இவ்வாறான நடவடிக்கைகள், கூட்டணி தர்மங்களுக்கும் எதிரானது. இது, ஜனநாயகத்தின் பிற்போக்குத்தனங்களுக்கு வித்திட்டுவிடும். 

இதனை, எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றி, கோடீஸ்வரன் செய்திருக்கின்றார். அதற்கு, மாவை சேனாதிராஜா இணங்கி இருக்கின்றார்.  

கூட்டணியின் தர்மங்களுக்கு எதிராகச் செயற்படுவது ஒன்றும், தமிழரசுக் கட்சிக்கோ, அதன் தற்போதைய தலைவர் மாவைக்கோ புதிதல்ல. அவர்கள், அதனை ஒரு மறுக்க முடியாத கடப்பாடு மாதிரியே, செய்து வருகிறார்கள்.   

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், தமிழரசுக் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்த அனந்தி சசிதரனை, தமது கட்சியின் வேட்பாளராக உள்ளடக்குவதற்கு சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். விரும்பியது. 

ஆனால், தங்களது கட்சிக்கு விரோதமாகச் செயற்பட்ட ஒருவரை, பங்காளிக் கட்சியொன்று வேட்பாளராக முன்னிறுத்துவது, கூட்டணி தர்மங்களுக்கு எதிரானது என்று, அன்றைக்கு மாவை எதிர்த்தார். அதனால், கடந்த பொதுத் தேர்தலில், அனந்தி போட்டியிட முடியாமற்போனது. அதற்குப் பதிலாக, நடராஜா அனந்தராஜ் வேட்பாளராக்கப்பட்டார்.  

ஆனால், பொதுத் தேர்தல் முடிந்து சில காலத்துக்குள்ளேயே, வன்னித் தேர்தல் மாவட்டத்தில், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் வெற்றியீட்டிய வைத்தியர் சிவமோகனை, தமிழரசுக் கட்சி தன்னோடு இணைந்துக் கொண்டுவிட்டது. இன்றைக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகவும் அவர் மாறிவிட்டார்.   

அப்போது, மாவையிடம் கூட்டணி தர்மம் பற்றிய எண்ணம் எழவே இல்லை. கிட்டத்தட்ட அவர், முதுகில் குத்தும் அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் கட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.   

சிவமோகனுக்கு முன்னவரான, சிவஞானம் சிறீதரனும், 2010 பொதுத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் வழங்கிய ஆசனத்தில் வெற்றிபெற்று, பின்னர் தமிழரசுக் கட்சிக்கு தாவியவர்தான். இந்த வரலாற்றுப் பக்கங்களின் தொடர்ச்சியாகத்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் விடயத்தை இப்போது பார்க்க வேண்டியிருக்கின்றது.   

கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி சொல்வதும் செய்வதும்தான் இறுதியானது என்கிற நிலை உருவாகிவிட்டது. பங்காளிக் கட்சிகளைச் சரிசமமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணமோ, அடிப்படை அரசியல் அறமோ அங்கு பேணப்படுவதில்லை. 

பங்காளிக் கட்சிகளும் அதன் தலைமைகளும்கூட, தமது நாடாளுமன்ற ஆசனங்களைப் பாதுகாத்தால் போதுமென்கிற நிலையில், எல்லாவற்றுக்கும் இணங்கிச் செல்லத் தலைப்பட்டுவிட்டார்கள். கூட்டணி தர்மங்களுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டிக்கவோ, அதற்கு எதிராகப் போராடவோ அவர்கள் தயாராகவும் இல்லை.   

செல்வம் அடைக்கலநாதனும் புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்த்தனும் வெற்றிபெறும் தரப்போடு இருக்கவே விரும்புகிறார்கள். அதைத்தாண்டி, ஆளுமையுள்ள அரசியலொன்றைச் செய்வதற்கான எந்த எத்தனமோ தைரியமோ அவர்களிடம் இல்லை. அதனால், தமிழரசுக் கட்சியினரும் மாவையும் இவ்வாறான ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  

இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை வைத்துக் கொண்டிருக்கும் வரை, பேணப்பட்ட குறைந்த பட்ச அறத்தைக் கூட, மாவை பின்பற்ற விரும்பவில்லை. அவர், தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தும் நபர்களால் சூழப்பட்டிருக்கிறார். தன்னுடைய வாரிசு சார்ந்து, சிந்தித்துச் செயற்படத் தொடங்கிவிட்டார். அதனால், கட்சிக்குள் தன்னுடைய பலத்தை இன்னும் இன்னும் அதிகப்படுத்துவதற்காக, அசிங்கமான அரசியலைச் செய்வதற்கும் தயங்காதவராக மாறிவிட்டார்.   

தமிழரசுக் கட்சிக்குள் நடக்கும் வேட்பாளர் நியமனப் போட்டி தொடங்கி, பங்காளிக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் என்று நம்பப்படுபவர்களை ஆதரிப்பது வரையில், இந்த அடிப்படையிலேயே நடைபெற்று வருகின்றன.  

சம்பந்தன் வயது மூப்பின் காரணமாக, தமிழரசுக் கட்சியின் உள்விவகாரங்களில் பாரிய தலையீடுகளை இப்போது செய்வதில்லை. இந்தத் தேர்தலில், கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விவகாரம், ஒருசில வேட்பாளர்களை முன்னிறுத்தியது தவிர்ந்து, அவர் பெரிய தலையீடுகளைச் செய்திருக்கவில்லை. இதனால், மாவையும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் தங்களது அணிகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மாத்திரமே செய்து கொண்டிருக்கிறார்கள்.   

கட்சித் தலைவர் என்கிற ஒற்றைக் காரணத்தைக் கொண்டு, வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நியமனக்குழுவுக்குள் பொருத்தமில்லாத பலரையும் உள்ளடக்கியதான குற்றச்சாட்டு, அவருக்கு எதிராக எழுந்திருக்கின்றது.  

தேசியப் பட்டியலுக்குள் தன்னுடைய ஆதரவு நபர்கள் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று மாவை காட்டிய ஆர்வத்தைச் சம்பந்தன் ஆரம்பத்திலேயே அடக்கிவிட்டார். இரண்டு தேசியப் பட்டியல் கிடைத்தால், ஒன்று திருகோணமலைக்கானது; இன்னொன்று பெண் பிரதிநிதிக்கானது என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது.   

அதுவும், யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டும் பெண் வேட்பாளர்கள் தோல்வியடைந்தால், அதில் ஒருவர் கட்டாயம் தேசியப் பட்டியலில் உள்வாங்கப்படுவார். இதனால், கொழும்பிலிருந்து தேசியப்பட்டியலுக்குள் நுழைவதற்கு எத்தனித்த சட்டத்தரணி கே.ரி.தவராசாவின் முயற்சிக்கும் தடை போடப்பட்டுவிட்டது.  இது, மாவையை நம்பித் தேசியப் பட்டியலுக்குள் உள்நுழைய முயன்றவர்களின் தோல்வியாகக் கொள்ளப்படுகின்றது.  

கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த அனைவருக்கும் வேட்பாளர் நியமனங்களை வழங்குவது தொடர்பிலான முடிவும் மாவையின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட ஒன்று. அது சார்ந்து, பெரிய விமர்சனங்கள் இன்னமும் நீடிக்கின்றன.

ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த இரண்டு பேருக்கு எதிராகத் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்புக் காணப்பட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வரை எழுந்திருக்கின்றது.   

அவருக்கு வேட்பாளர் நியமனத்தை வழங்காது இருப்பது சார்ந்து, தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு மாவைக்கு வலியுறுத்தப்பட்ட போதும் ஊழல் மோசடி தொடர்பிலான ஆவணங்கள் அவருக்கு காட்டப்பட்ட போதும், அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வேட்பாளர் நியமனத்தை வழங்குவதற்கு மாவை முடிவெடுத்திருக்கின்றார்.   

அதன்மூலம், அவர், யாழ். தேர்தல் மாவட்டத்தில் நீக்கப்படலாம் என்று நம்பப்பட்ட இன்னொரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான இடத்தையும் காப்பாற்றியிருக்கின்றார். அவர்களைக் காப்பாற்றுவதன் மூலமும் வேட்பாளர்களாக முன்னிறுத்துவதன் மூலமும், ஒரு பாரம்பரியக் கட்சியின் தலைவராக, மாவை மோசமான முன்னுதாரணமாக மாறி நிற்கிறார்.   

இதனால், ஆளுமையற்றவர்களின், மோசடிக்காரர்களின் கூடாரமாகத் தமிழரசுக் கட்சி மாறுவதற்கான பாதை, அதன் தலைமைத்துவத்தாலேயே போடப்பட்டிருக்கின்றது.  

தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதான கட்சியொன்று, அதன் அடிப்படைகளுக்கு அப்பாலான கட்டங்களில் பயணிப்பது என்பது, அதுவும், அதன் தலைமையாலேயே அதனை நோக்கித் தள்ளப்படுவது என்பது, அபத்தமானது. அது, அந்தக் கட்சிக்குள் இருக்கும் அறமுள்ள(!) அரசியல்வாதிகளையும் இளைஞர்களையும் அரசியலில் இருந்து ஒதுங்க வைக்கும். மாறாக, பதவிகளுக்காக அலையும் துதிபாடும் அரசியலையும் அயோக்கியத்தனங்களையுமே ஊக்குவிக்கும்.  

அரசியல் தலைமைத்துவம் என்பது, ஆளுமைகளின் வழியும் தார்மீகங்களின் வழியும் எழுந்துவர வேண்டும். மாறாக, துதிபாடும் அரசியலில் இருந்து எழுந்து வந்தால், அது அறங்களுக்கு அப்பாலான அனைத்துக் கட்டங்களையும் செய்ய எத்தனிக்கும். அது, முதுகில் குத்துவதில் தொடங்கி, மோசடிக்காரர்களைக் காப்பாற்றுவது வரையில் நிகழும்.   

அது, தமிழ்த் தேசிய அரசியலின் சாபக்கேடாக மாறும். அவ்வாறானதொரு கட்டத்தை நோக்கி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அழைத்துச் சென்றுவிடுமோ என்பதுதான், இப்போதைய பெரும் பயம். ஏனெனில், கூட்டமைப்பைத் தாண்டிய நம்பிக்கைகளை ஏற்படுத்தும் கட்சிகளோ, காட்சிகளோ தமிழ்த் தேசிய பரப்பில் இதுவரை நிகழ்ந்திருக்கவில்லை. அப்படியான கட்டத்தில், கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் அபத்தங்களை உரக்கப் பேச வேண்டியது அவசியமாகின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .